ஈழ போரின் வியத்தகு இயங்கியல்!

245

33 ஆண்டுகால ஈழ போரின் முடிவுகளை உலகதமிழர்கள் இன்றும் எவ்வாறு பாக்கிறார்கள்,உண்மையில் அது எவ்வாறு அமைந்தது என்பதற்கு இடையில் பல வித்தியாசங்கள்முரண்பாடுகள் உள்ளன.ஆழமான விடுதலை பிரக்ஞை இன்றிய மனநிலையில் அதன் முடிவுகளை பெரும்பான்மையான தமிழர்கள் பார்ப்பதில்,பேசுவதில் இருந்தே அவர்களுக்கும் விடுதலை போராட்டத்துக்குமான இடைவெளி மிக பெரிதாக அமைகின்றது என்பது வெளிப்படை உண்மை.பொதுவாக விடுதலை போரினையோ வரலாற்று சம்பவங்களையோ தோல்வி என விழிப்பதே தவறானதாகும்.வரலாறு என்பது எங்கும் நிற்காத எதனுடனும் சமரசம் செய்து கொள்ளாமல் தானாக செல்லும் நதி போன்றது.நதியின் பாதையில் மேடு பள்ளங்கள் பார்த்து ஏறி இறங்கி சென்றுகொண்டே இருக்கும்.நில்லாமல் இயங்கு கொண்டுள்ள காலநதியில் தோல்வி என்ற ஒன்று எதற்கும் இல்லவே இல்லை! தேங்கி நிற்கும் தமிழர்கள் தங்களுக்குள் தாங்களே சாக்கடைகளை உருவாக்கி கொள்கிறார்கள்!பின்னர் சில நூறு ஆண்டுகள் கழித்து இயற்கையான இயங்கியல் அதை சுத்தம் செய்யும் போது மறுபடியும் ஓட ஆரம்பிக்கின்றன.

இந்த மாதிரி ஒரு இயற்கைக்கே சவாலான ஆபத்தான இனக்குழுவை கையாளுவது என்பது மனித சக்திக்கு அப்பாற்றப்பட்டது. தமிழினத்துக்கு தலைமை என்பது ஆயிரம் வருடங்கள் ஒருமுறை பலத்த அக சக்தி மோதல்களிடையே நிகழ்ந்து பெரும் பிரளயத்தில் முடிகின்றது.இவற்றை ஏற்று கொள்ளும் பக்குவம் பெரும்பாலான தமிழர்களிடையே இன்று இல்லை.கடந்த 33 வருட ஆயுத போரின் பின்னடைவை தோல்வி என்று வர்ணிப்பார்கள்,தோல்வி என்று தொடர்ந்து அவர்கள் வர்ணிப்பது போராட்டத்தை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்ற பொருளில் மட்டுமல்லாமல் சிலரின் குற்றவுணர்ச்சியிலும்தான்! தோல்விக்கான காரணிகள் என்று அவர்கள் பட்டியல்படுத்துவது ஆளணி இல்லாமை,ஆயுத பற்றாகுறை,கருணா பிரிவு என்று வகைப்படுத்துவார்கள்.அவர்களின் விடுதலை போராட்ட அறிவு அவ்வளவே! ஆட்களும் ஆயுதமும் இருந்தால் செய்யலாம் என்பது வரலாற்று போராட்ட இயங்கியலை தமிழர்கள் எவ்வாறு தவறாக புரிந்து வைத்துள்ளனர்,அல்லது புரிந்து கொள்ள விரும்பாத அலட்சியம் என்றே எடுத்து கொள்ளவேண்டும்!

எந்தவொரு விடுதலை போராட்டத்தின் வெற்றி அல்லது அடுத்தகட்ட நகர்வை தீர்மானிப்பது ஆள் பலமோ,ஆயுத பலமோ அல்ல,மனோ பலமே அதனை தீர்மானிக்கும்.ஆட்கள் ஆயுதங்கள் இருந்தால் அதிக மனோ பலம் இருக்கும் என்பது தவறு.மனோபலம் தான் ஆள்,ஆயுத பலங்களை தானாக படைத்து கொள்கின்றது.மனோபலம் என்பது தொடர்ச்சியான இயங்கியல் மூலமே தீர்மானிக்கப்படுகின்றது.செல்லும் களங்களிலேயே தமக்கான ஆயுதங்களை பெற்று கொள்ள வேண்டிய மனோபலத்தை கொண்டிருந்த போது வெற்றிகள் களத்தில் இருந்து அகத்துக்கு தொடர்ந்து அனுப்பட்டு கொண்டிருக்கும்.மனோபலம் அந்த களத்திலயே மையம் கொண்டு அக்களத்திலயே தனக்கு தேவையானது அனைத்தும் உள்ளது என்ற பிரக்ஞையை ஒவ்வொரு போராளியையும் பயிற்சி அளித்து கொள்ளும்! எப்போது மனோபலம் களத்தை விட்டு இன்னொரு இடங்களுக்கு மாற்றமடைகின்றதோ அப்போதே அதை பலவீனம் ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றது.பின்னர் காசு சேர்ந்தால்,கப்பல் வந்தால் என்று மனோபலம் களத்தை தாண்டி எங்கயோ எதில் எதிலோ அடகு வைக்கப்படுகின்றது.இனத்தின் இயங்கியலை நகர்த்தும் மனோபலம் களத்தை தாண்டி எங்கு சென்றுவிடாது பார்த்துகொள்ளும் பக்குவம்தான்,போராட்டத்தை நீட்சியடைய செய்யும்! அல்லாது போகின்ற போது பெரும் மனோபலத்தின் பின்னால் தொடரும் ஒரு பெரும் பலவீனம்,முற்றுமுழுதாக இன இயங்கியலை சாய்த்துவிடும்.அவை ஒன்று சேர்த்து தாக்கும் போது நாலா பக்கமாக பிரிந்து சிதறி ஓடியது இனத்தின் இயங்கியலை தொடர்ந்து கொண்டு செல்ல உதவுகின்றது! ஆனாலும் சேர்ந்து தாக்கும் போது இருக்கவேண்டிய ஒற்றுமை கட்டமைப்பு இல்லாமல் போகின்ற போது இனத்தின் இயங்கியல் தொடர்ச்சியாக திசைகளில் பிரிந்து செல்கின்றது.ஆனால் அது ஒருநாள் அதுவாக உலகை நிறைக்கும்! அதன் பின்னர் அதனால் ஓடவும் முடியாது ஒளியாது முடியாது போகும்,அன்று உலகை ஆளும் ஆள வேண்டிய தேவை அதற்கு வந்துவிடும், ஆனால் அது ஆபத்தானது!