“எங்கள் தமிழினம் தூங்குவதோ? சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ?”

192

மாண்டான் தமிழன் என்ற வரலாற்றை மாற்றி தேசங்கள் வென்று ஆண்டான் மீண்டும் என எழுதிட வாருங்கள்!

“எங்கள் தமிழினம் தூங்குவதோ? சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ?” வாடி வாடி பாடினோம்.. போராடினோம்.. ஒரு நூற்றாண்டாக அழுதிடும் துயரம் எவர் செவியிலும் கேட்கவில்லை.

எவர் விழிகளும் திறக்கவில்லை… இதயங்கள் கல்லாக மனிதம் உறங்கிக் கிடக்க நீள் துயர் தொடர்ந்து முகாரியில் எங்கள் ஈன சுவரங்கள்… எங்கள் அகத்தின் வலிகளைக் கூட எடுத்து சொல்லி நீதி கேட்க உரிமை மறுக்கப்பட்ட இனமாக நாம். திரும்பிய பக்கம் எல்லாம் நீதி கேட்க தடை …போராடத் தடை… மூச்செறியவும் தடை.. வாழ்தல் தடை.. ஆள்தல் தடை…

காலம் முழுவதும் தமிழினம் அந்நியர் காலுக்கு செருப்பாக மட்டுமே வாழ்ந்திட வேண்டுமா? விதி மாற்றும் மதி வந்தால் சதி செய்து அழிக்கின்றார்…நாடே நம் கதி என்போம்!காற்றை கிழித்து வரலாற்றை படைத்தபடி மண்ணில் விழுந்த முத்துக்களிற்காக விழிகள் முத்துதிர்த்து விடுதலை வென்றெடுக்க தொடர்கிறது எங்கள் தேசத்தின் விடுதலைக்கான பாதை மாறாத மக்களின் சோர்வு இல்லா போராட்டம்… ஆம் இருப்பவர்கள் மட்டுமல்ல.. எங்கள் மண்ணில் இறந்தவர்களும் போராடும் காலங்கள் இவை..

நம்புங்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்னமும் உயிர் மூச்சு எரிகிறது…. என்ன பாவம் செய்தார்கள் எங்கள் பச்சிளம் பிஞ்சுகள்? இந்த உலகில் வாழும் உரிமை எங்கள் செல்வங்களுக்கு மறுக்கப்பட்ட கொடும் இனப்படுகொலை அநீதிகளுக்கு ஏழு ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை. அம்மணமான வெட்கம் கெட்ட உலகத்தின் தோற்றுப் போன மனிதத்தின் அவமான சின்னம் முள்ளிவாய்க்கால்!

அணையாப் பெரு நெருப்பாய் அகிலமெங்கும் வாழும் தமிழன் உள்ளம் தகிக்கும் காலங்கள் இவை… யாரிடம் சொல்வோம்? யார்க்கு எடுத்து உரைப்போம்? என்னினமே… நீயெனும் விழி திற!

திக்கொன்றாய் பிரிந்திருந்து செத்து மடிந்தது போதும் … தமிழா ஒன்று படு! ஓரணியில் பேரணியை அணி திரள்! வென்று எடு விடுதலையை! உதவாது இனி ஒரு தாமதம்.. உடனே நீ எழு! மாண்டான் தமிழன் என்ற வரலாற்றை மாற்றி தேசங்கள் வென்று ஆண்டான் மீண்டும் என எழுதிட வாருங்கள்!

எங்கள் தமிழினம் ஒன்றாக எங்கள் தேசங்கள் வென்றாக நாளைகள் நன்றாக விடுதலை வென்றெடுக்க வாருங்கள் தமிழர்களே! புதைக்கப்பட்டோம் என்பது உண்மையே… ஆனால் இவை புதை குழிகள் அல்ல… விதை குழிகளுக்குள் இருந்து எங்கள் விடுதலைக் கரங்கள் நிலம் கிழித்து மேலெழும்!

கதிர் ஈழம்