சரவணபவனின் தந்தை தமிழ் மக்களை காட்டிக் கொடுத்ததற்காகவே புலிகளால் கொல்லப்பட்டார் – ரெமிடியஸ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரான சரவணபவனின் தந்தை, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவர். இவர் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்ததற்காகவே கொலை செய்யப்பட்டார். சரவணபவனும் இன்று அதையே மேற்கொண்டுவருகின்றார் ” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமிடியஸ் தெரிவித்தார்

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிரைகயாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

தனது பத்திரிகை மூலம் தமிழ் மக்களை அதலபாதாளத்துக்குள் தள்ளி வரும் உதயன் பத்திரிகையின் முதலாளியான சரவணபவனின் தந்தை இலங்கை பொலிஸில் இருந்த காலத்தில் தமிழ் மக்களை அரச படைகளுக்குக் காட்டிக் கொடுத்ததற்காகவே கொலை செய்யப்பட்டார் .

அதுமட்டுமல்லாது யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த சரவணபவன், தான் நடத்திவரும் ஊடகம் வாயிலாக தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டங்களையும் காட்டிக் கொடுத்து வருகிறார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெறும் என்ற அச்சத்தில் 2002 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்ட வரை தேடிக் கண்டுபிடித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிராக சரவணபவன் யாழ். ஊடக அமையத்தில் வைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தினர் .

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது ஆதாரம் உள்ள குற்றச்சாட்டுகள் இருந்தால் ஏன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யாமல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார் என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன .

தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சி மீது தமிழ் மக்களை வெறுப்படைய வைக்கும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை மட்டுமன்றி மக்கள் தன்னையும் நிராகரிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சரவணபவன் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் .

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரச்சாரங்களுக்கு ஏழு வாகனங்களில் வேட்பாளர் வருகின்றனர். வருவோரின் எண்ணிக்கையை விடக் குறைவாகவே மக்கள் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர் .

ஆனால், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரசாரக் கூட்டங்கள் மக்கள் வெள்ளத்தினால் நிறைந்து காணப்படும் நிலையில் அதனைப் பொறுக்கமுடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சரவணபவன் போன்றோர் தமிழ் மக்களையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியையும் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபோதும் பலிக்காது” என்றார்