இதுவரையிலும் எனது வேலையின்மையினை வைத்து
ஒருநாளும்
வறுமை முகம் சுழித்ததில்லை.
களைத்துபோய் வரும் வியர்வையை இறக்கிவைத்துவிட்டு
ஓடிச்சென்று ஆறுதல் வார்த்தையினை ஊற்றி வந்து
பருகசெய்யும் இங்கிதமறிந்தவள்.
மேலும் சொல்வதானால்
நாளாந்த உழைப்பின் போதாமை குடும்பத்தில் வெறுப்பிற்காக பிறந்தவள்.
கவலை கல்லூரியில் படித்து
எதிர்பார்ப்பு பட்டம் பெற்று
அழுகை முற்றத்தில் கோலம் போட்டு
வேலை செய்யும்
சராசரி பழக்கவழக்கத்தையுடையவள்.
வறுமை கோட்டின் எல்லைப்புறத்தை பிடித்துப்போன என் வேலையின்மை முறைப்படி திருமணம் செய்துகொண்டதை இப்போது சொல்லியே ஆகவேண்டும்.
மரணம் என்ற மலடியென்று
சமூகம் மனைவியை அழைக்காமல் இருக்க
சோகப்பிள்ளைப்பேறு முதலிரவினை தனிமையில் வைத்துக்கொண்டோம்.
கவலையின் நாளாந்த வளர்ச்சியில் நிறைமாதமாக்கியிருந்த அவளது பெருத்த வயிற்றுக்கு
பசிகாய் காலங்களையே உண்ணகொடுத்திருந்தேன்.
மெலிந்த அவள் ஏக்கத்தில்
எதிர்பார்ப்பு என்னவோ சுகப்பிரசவம் ஆகவில்லை.
ஏமாற்றம் நிறைந்த வலிகளுடன்
கத்திய நடுஇரவில்
நடப்பது நடக்கட்டும் ,
வானம் வடப்படும் என்ற இரு பிளைகளை
ஒரே சமயத்தில் பெற்றெடுத்தாள்.
காலங்களை தின்று வளர்ந்த மூவருக்கும்
இன்றும் வீடு சென்று
வேலையின்மை வருமானத்தை அவர்களிடம் கையளிப்பேன்.
அதிலிருந்து மீதப்படுத்தி
நாளையும் அவள் பசியினை சிறப்பாக சமைத்துவைப்பாள்.
வழமையாக அவளுக்கு தெரியாமல்
ஒளித்து வைக்கும் நாளாந்த
கவலை வருமானத்தில்
நடப்பது நடக்கட்டும் மகனிடம் எரிச்சலையும்,
வானம் வசப்படும் மகளிடம் கோபத்தையும் கொடுத்தனுப்புவேன்.
அவர்களுக்கு இருக்கும் பசியின் களைப்பில் ஓடிப்போய் தூக்கத்தை உண்பார்கள்,
மீதமிருக்கும் பசியினை இருவரும் உண்டுவிட்டு
நாளை வரவிருக்கும் பசி நாட்களை
அழுகை கடவுளிடம்
மன்றாடும் என் வறுமையருகின்
கண்ணீரில் ஓடிப்போய்
வலிமிகுந்த உயிர்மெழுகொன்றை ஏற்றிவைத்தேன்.
ஈழக்கவிஞனின் கவி வரிகள் -செல்வை-