சுயஸ்_கால்வாயில் என்ன நடக்கிறது?
எகிப்தின் சுயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கப்பலை மீட்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4:30 மணியளவில் கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் நீரில் வெற்றிகரமாக மிதக்கவிடப்பட்டது.
இந்த பணியை கடல்சார் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளும் இஞ்ச் கேப் ஷிப்பிங் சேர்வீஸ் என்கிற நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த தகவலை எகிப்தின் லெத் ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், சுயஸ் கால்வாயை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகின் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) முதல் எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்குக் கப்பல் தரைதட்டி நின்றது.
ஞாயிறு வரை 18 மீற்றர் ஆழத்தில், 27,000 கியூபிக் மீட்டர் அளவு மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது என்று சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்திருந்தது.
சீனாவிலிருந்து நெதர்லாந்தில் உள்ள துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்குப் புறப்பட்டு, மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழியில் கால்வாய் வழியாக வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எவர் கிவன் கப்பல் தரை தட்டியது.
சுமார் 2,20,000 டன் மொத்த எடையுள்ள அந்தக் கப்பலில் தற்போது 18,300 மிகப்பெரிய சரக்கு பெட்டகங்கள் உள்ளன.