ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும் சில தமிழ் ஊடகங்களும்

67

கொழும்பு மாவட்டத்தில் உள்ள நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் அரசியலமைப்புச், சட்டங்கள் தொடர்பான விவகாரங்கள்; குறித்த வழக்குகளைப் பேச முடியாது. தனி நபர் மற்றும் சமூகக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள், விசாரணைகள் மாத்திரமே இந்த நீதிமன்றத்தில் நடைபெறும். குறிப்பாகப் பிணை எடுத்தல் இந்த நிதிமன்றத்தில் முக்கியமானதாகும்.

இவ்வாறான நிலையில், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்கா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், அவர் சார்பில் முன்னிலையாகி வாதாடினார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலில் எந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டது என்று சுமந்திரன் கேள்வி எழுப்பி வாதிட்டார்.

சட்டத்தரணியொருவர் எந்த நீதிமன்றத்திலும் எந்தக் கருத்துக்களையும் கூறித் தனது தரப்புக்குச் சார்பாக வாதிடலாம். இங்கே ரஞ்சன் ராமநாயக்கா கைதாகி ஏழாம் நாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆனால் பொலிஸாரின் காவலில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏழாம் நாள் பிணை வழங்கப்படும் என்பதும் உறுதியானது..

இதற்காகப் பிரபல சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றில்லை. சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவன் கூட இந்தப் பிணை எடுக்கும் வேலையைச் செய்ய முடியும்.

சரி- ரஞ்சன் ராமநாயக்கா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நட்புக்காகச் சுமந்திரன் முன்னிலையானார் என்று வைத்துக் கொள்கொள்வோம்.

அவ்வாறே, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட முறை தவறு எனக் கேள்வி எழுப்பி நீதிமன்றத்தில் சுமந்திரன் வாதிட்டார் என்பதும் உண்மைதான்– ஆனால் ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கப்பட்டமையானது சுமந்திரன் அவ்வாறு கூறி வாதிட்டமையினால் அல்ல.

ஊரடங்குச் சட்டம் பிழையானதென்றும் இதனால் ரஞ்சன் ராமநாயக்காவைப் பொலிஸார் கைது செய்தமை தவறு என்று கூறி நிதிமன்றம் பிணை வழங்கவில்லை– ஊரடங்குச் சட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என குற்றவியல் சட்டத்தின் கீழேயே ரஞ்சன் ராமநாயக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஆனால் சில தமிழ் ஊடகங்கள் ஊரடங்குச் சட்டம் தவறானது எனச் சுமந்திரன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வாதாடியதால் ரஞ்சன் ராமநாயக்காவுக்குப் பிணை வழங்கப்பட்டதாகச் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தச் செய்திகள் குறித்து என்னுடன் தொடர்பு கொண்ட சட்டத்தரணி காண்டீபன், இப்படிச் செய்தி எழுதிய செய்தியாளர்களுக்கு அறிவேயில்லையா என்று கேள்வி எழுப்பினார்.

ஊரடங்குச் சட்டம் எந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பித் தான் முன்வைத்த வாதத்தினால் பிணை வழங்கப்படவில்லை என்பதைச் சட்டத்தரணி சுமந்திரன் கூட அறிந்திருப்பார். ஊரடங்குச் சட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் தான் கூறிய கருத்து ஒரு வாதம் மாத்திரமே என்பதையும் சுமந்திரன் அறியாதவர் அல்ல.

ஆனால் சில தமிழ் ஊடகங்கள் இந்தச் செய்தியைப் புரியாமல் எழுதினார்களா? அல்லது சுமந்திரனை ஒரு கீரோவாகக் காண்பிக்க எழுதினார்களா என்றும் காண்டிபன் என்னிடம் கேட்டார். அப்படி கீரோவாகக் காண்பிப்பதற்காக இப்படிச் செய்திகள் எழுதப்பட்டிருந்தால். செய்தியாளர்களுக்கும் பிரதம ஆசிரியர்களுக்கும் கொஞ்சம் கூடச் சட்ட அறிவு இல்லை என்றுதானே அர்த்தம்?

ஊரடங்குச் சட்டம் தவறு என்றால் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்றையல்லவா தாக்கல் செய்திருக்க வேண்டும்? சரி, அப்படி ரஞ்சன் ராமநாயக்காவுக்கு வழங்கிய பிணையில் ஊரடங்குச் சட்டம் தவறு என்று நீதிமன்றம் கூறியிருந்தால், இன்று முழு இலங்கையிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்க முடியாதே எனவும் சட்டத்தரணி காண்டீபன் என்னைக் கேட்டார்.

அது மாத்திரமல்ல ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஏறத்தாள இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆகவே ரஞ்சன் ராமநாயக்காவுக்கு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டுமே?

ரஞ்சன் ராமநாயகா மீது குற்றவியல் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்குத் தொடர்பாக வழங்கப்படும் கட்டளைகள், தீர்ப்புகள் அவருக்கு மாத்திரமே உரியதாகும். ஏனையவர்களுக்கு அது பொருந்தாது என்பதையும் சுமந்திரன் அறியாதவர் அல்ல.

சுமந்திரனைத் தூக்கிப் பிடிப்பதற்காகத் தங்கள் சுயமரியாதையையும், ஊடக ஆளுமையையும் இழந்து இவ்வாறான, தவறான செய்திகளை சில ஊடகங்கள் வெளியிடப்பட்டிருப்பதாகச் சட்டத்தரணி காண்டீபன் என்னிடம் சுட்டிக்காட்டினார்.

Amirtha-Nixon