போர்க்கால ‘தியாகிகள் கிராமம்’அவமதிப்பு! பிரான்ஸ் அரசியல் தலைவர்கள் கண்டனம்!

82

ஜெர்மனிய நாஸிப்படைகளின் மிக மோசமான மனிதப் படுகொலைகள் நிகழ்ந்த ஒரு கிராமம் Oradour-sur-Glane.

பிரான்ஸின் தெற்கு மத்திய Nouvelle-Aquitaine பிராந்தியத்தில் லிமோஸ்(Limoges) நகருக்கு அண்மையில் அமைந்துள்ள இந்தக் கிராமம் அப்படியே உலகப் போர்க்கால அழிவுக்காட்சிகளுடன் ‘தியாகிகள் கிராமம்’ (village martyr) என்னும் பெயரில் இன்றுவரை பேணிப் பராமரிக்கப்பட்டுவருகிறது.

இங்குள்ள நினைவிடத்தின் பெயர் பொறிக்கப்பட்ட சுவர் கடந்த வெள்ளியன்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் இழிவு படுத்தப்பட்டிருக்கிறது.அதில் உள்ள ‘தியாகிகள்’என்ற வாசகம் பூச்சு மையினால் அழிக்கப்பட்டு ‘பொய்யர்கள்’ என்ற எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

வரலாற்றை மாசுபடுத்தும் இச் செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதேச மேயரின் முறைப்பாட்டை அடுத்து இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்புக் கமராக்களின் உதவியுடன் தீவிர விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாட்டின் வரலாற்றில் மிகவும் மதிக்கப்படுகின்ற ஒரு போர் நினைவிடம் மீது புரியப்பட்டிருக்கும் இந்த அவமதிப்புச் செயலுக்கு அரசியல் மட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான கண்டனங்கள் கிளம்பி உள்ளன.

வாய்விட்டுச் சொல்ல முடியாத இந்த அருவருக்கத்தக்க செயலைப் புரிந்தோர் எவராயினும் அவர்களைத் தேடிப்பிடித்து நீதியின் முன் நிறுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அதிபர் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர், உள்துறை அமைச்சர் தரப்புகளில் இருந்தும் கடும் தொனியில் கண்டனக் குரல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களான Jean-Luc Mélenchon, Marine Le Pen ஆகியோரும் ரிப்பப்ளிக்கன் மற்றும் சோஷலிசக் கட்சிகளின் தலைவர்களும் வரலாற்றை மறுதலிக்கும் இச் செயலுக்கு தங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1944 ஜூன் 10 ஆம் திகதி Oradour-sur-Glane கிராமத்துக்குள் பெரும் எண்ணிக்கையில் நுழைந்த ஹிட்லரின் SS Das Reich என அழைக்கப்பட்ட ரெஜிமெண்ட் படைப்பிரிவினர் அங்கு கூட்டாக மொத்தம் 642 பேரைப் படுகொலை செய்தனர்.

எதிர்ப்புரட்சியாளர்களைத் தேடிவந்த நாஸிப் படைகள் கிராமத்தைச் சுற்றிவளைத்து ஆண்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி தானியக்களஞ்சியங்களில் அடைத்து வைத்து கால்களில் சுட்டுக் காயப்படுத்திவிட்டுப் பின்னர் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொன்றனர் என்று கூறப்படுகிறது.

உயிரைக் காப்பதற்காக கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் தஞ்சம் புகுந்த பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளும் அங்கு வைத்து கிரனேட்டுகளை வீசிக் கொல்லப்பட்டு தேவாலயத்துடன் சேர்த்துத் தீக்கிரையாக்கப்பட்டனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் 205 பேர் குழந்தைகள்.

மிலேச்சத்தனமான இந்தப் படுகொலையில் Oradour-sur-Glane கிராமத்தில் வசித்த அனைவருமே தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர்.ஆக ஆறு பேர் மட்டுமே தப்பி உயிர்பிழைத்தனர்.

பிரான்ஸ் மண்ணில் நாஸிப் படைகள் புரிந்த பல ஆக்கிரமிப்பு அட்டூழியங்களினதும் படுகொலைகளினதும் ஒட்டுமொத்த நினைவுகளின் ஓர் அடையாளமாக இக்கிராமம் ‘தியாகிகள் கிராமம்’ என்ற பெயரில் அடுத்த தலைமுறைகளுக்குரிய ஒரு நினைவிடமாக மாற்றப்பட்டிருக்கிறது.

அழியுண்ட கட்டடங்களும் உயிரிழந்தவர்களின் உடமைகளும் அங்கே இன்றைக்கும் அப்படியே பார்வைக்கு விடப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான உள்நாட்டு மக்களும் உல்லாசப் பயணிகளும் இக்கிராமத்தைப் பார்வையிட்டு வருகின்றனர்.