தென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்!

532

தென்கிழக்கில் புயல்மழையால் பேரழிவு இயற்கைப் பேரிடர் நிலைமை பிரகடனம்,இடுகாட்டு உடல்கள் நீரில் மிதக்கின்றன!

“அலெக்ஸ்” புயலால் (Tempête Alex) உருவாகிய கடும் வெள்ளப் பெருக்கினால் பிரான்ஸின் தென் கிழக்குக் கரையோரப் பிராந்தியம் பேரழிவைச் சந்தித்துள்ளது. அப்பகுதிகளில் தேசிய இயற்கைப் பேரிடர் நிலைமையை( l’état de catastrophe naturelle “) அரசு பிரகடனம் செய்துள்ளது.

இன்று அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்த அதிபர் மக்ரோன் அங்கு வைத்து இதனை அறிவித்தார். மொத்தம் 55 நகரசபைப் பிரிவுகளில் இயற்கைப் பேரிடர் நிலைமை அமுலுக்கு வருகிறது.

இந்த இயற்கையின் சீற்றத்தில் இதுவரை ஜவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 21 பேரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டதாக அஞ்சப்படுகிறது. வீடுகள், தெருக்கள், பாலங்கள் போன்றன அழிவுண்டுள்ளன.

பிரபல நீஸ்(Nice) கடற்கரை நகரத்தை உள்ளடக்கிய Alpes-Maritimes பிராந்தியம் பாரிய அளவில் அழிவுகளைச் சந்தித்துள்ளது.

சில கிராமங்களில் உள்ள இடுகாடுகளில் கல்லறைகளை வெள்ளம் வாரி அகழ்ந்து சென்றதனால் அங்கு புதைக்கப்பட்டிருந்த 150 க்கும் அதிகமான உடல்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பேழைகளுடனும் தனியாகவும் வெள்ளத்தில் மிதந்து சென்று பல இடங்களிலும் சிக்குண்டிருந்த உடல்களை மீட்புப்பணியாளர்கள் தேடிச் சேகரித்து வருகின்றனர். பொது மண்டபம் ஒன்றில் அவை பேணிப் பாதுகாக்கப்பட உள்ளன.

பிரேதப் பேழைகள் வெள்ளத்தில் மிதந்து வருவதைக் கண்ட பலரும் தாங்கள் பெரும் அதிர்ச்சியடைந்ததாகத் தெரித்திருக்கின்றனர்.அது தங்கள் வாழ் நாளில் காணாத காட்சி என்று முதியவர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கல்லறைகளில் இருந்து மழைவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்களில் சில இத்தாலியின் வடக்கு கரையோரங்களிலும் (Liguria, Italy) ஒதுங்கி உள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகளை ஐந்து நாள்களின் பின்னர் அதிபர் மக்ரோன் இன்று மாலை நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார். பல பில்லியன் ஈரோக்கள் பெறுமதியான உடைமை சேதங்கள் அங்கு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசினதும் நாட்டு மக்களதும் முழு ஆதரவுடன் இந்தப்பிராந்தியம் துரிதமாக மீளக் கட்டியெழுப்பப்படும் என்று மக்ரோன் அங்கு அறிவித்தார்.