சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது எனக்கு வலிக்கிறது என கதறிய கர்ப்பிணிப்பெண் உயிரிழந்த நிலையில், அதன் பின்னணியில் மருத்துவர் ஒருவரின் தவறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரித்தானியரான Xynthia Hawke (28) பிரான்சில் வாழ்ந்துவந்தார். பிரசவத்திற்காக அவர் பிரான்சிலுள்ள Orthez தாய் சேய் நல மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் என முடிவாயிற்று. பிரசவத்தின்போது Helga Wauters (51) என்ற மருத்துவர் Xynthiaவுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார்.
Xynthia மயக்கமடைந்திருக்கவேண்டும், ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போதும் அவர் மயக்கமடையாமல், எனக்கு வலிக்கிறது, எனக்கு வலிக்கிறது என்று கத்திக்கொண்டே இருந்திருக்கிறார்.
நடந்தது என்னவென்றால், மயக்க மருந்து கொடுத்த மருத்துவர் Helga, மயக்க மருந்து செலுத்தும் குழாயை மூச்சுக்குழாய்க்குள் செலுத்துவதற்கு பதிலாக, உணவுக்குழாய்க்குள் செலுத்தியிருக்கிறார்.
ஆகவேதான் Xynthia மயக்கமடையவேயில்லை. சிசேரியன் நடந்துகொண்டிருக்க, மயக்க மருந்து குழாய் உணவுக்குழாய்க்குள் செலுத்தப்பட, ஆக்சிஜன் காலியாக, வெண்டிலேட்டரை எடுத்து Xynthiaவுக்கு Helga செலுத்த, அது வேலை செய்யாமல் போக, ஏன் வேலை செய்யவில்லை என சோதித்தால், அது ஆக்சிஜன் சிலிண்டருடன் இணைக்கப்படவேயில்லை.
இதற்கிடையில் Xynthiaவுக்கு திடீரென மாரடைப்பும் ஏற்பட, குழந்தையைப் பெற்று, மாரடைப்புடன் போராடி நான்கு நாட்களில் உயிரிழந்துள்ளார் அவர்.
இவை எல்லாவற்றிற்கும் காரணம், Helga போதையிலிருந்திருக்கிறார், அத்துடன் தான் மதுபோதைக்கு அடிமையானவர் என்பதை மறைத்து அவர் மருத்துவப்பணி செய்ததால், பரிதாபமாக ஒரு உயிர் போயிருக்கிறது.
கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்ட Helgaவை காவல்துறையினர் சோதித்தபோது, அவரது இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு ஒரு லிற்றருக்கு 2.38 கிராமாக இருந்துள்ளது. அதாவது அவர் 10 கிளாஸ் ஒயின் குடித்திருந்தார் என்று பொருள்.
Xynthiaவின் சட்டத்தரணி Ms Yaouang, தனது கட்சிக்காரரின் மரணத்துக்கு காரணமான Helgaவுக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 70,000 பவுண்டுகள் அபராதமும் விதிப்பதோடு, அவர் இனி தன் வாழ்நாளில் மருத்துவப்பணி பார்க்காத வகையில் அவரது மருத்துவர் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என கோரியிருக்கிறார். நவம்பர் மாதம் 12ஆம் திகதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.