பிரான்ஸ் சூழலைக் காக்க அரசமைப்பில் திருத்தம் மக்கள் கருத்தறிய பொது வாக்கெடுப்பு!

8

மக்களின் உரிமைகளுக்காக அரசமைப்பைத் திருத்துகின்ற காலம் மாறி இயற்கையின் இறைமைக்காக அதனைச் செய்யவேண்டிய அவசரம் இப்போது எழுந்துள்ளது.

பிரான்ஸின் அரசமைப்பில் பருவநிலை,சுற்றுச் சூழல், உயிரின் பல்வகைமைக் (biodiversity) கட்டமைப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் புதிய சட்ட விதிகளைச் சேர்ப்பதற்காக அதன் முக்கிய பிரிவைத் திருத்துவதற்கு அதிபர் மக்ரோன் இணங்கியிருக்கிறார்.

இதற்காக மக்கள் கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பு (référendum) ஒன்று விரைவில் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பருவநிலை மாற்றங்களுக்குக் காரணமான நடவடிக்கைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாணும் யோசனைகளை முன்வைப்பதற்காக அரசினால் நிறுவப்பட்ட பிரஜைகள் குழு ஒன்று முன்வைத்த சிபாரிசுகளின் அடிப்படையிலேயே இந்த அரசமைப்புத் திருத்த முயற்சிக்கு அரசு முதல் முறையாக இணங்கியுள்ளது.

“காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் மாநாட்டுக்கான பிரஜைகள் குழு” (Citizens’ Convention for the Climate, an environmental committee) என்ற பெயரில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவுக்கு உறுப்பினர்களாக நாடு முழுவதும் இருந்து எழுந்தமானமாக 150 பிரஜைகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

இயற்கைக்கு சேதம் விளைவிப்பதைக் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் (Crimes ecocide) மாற்றுவதற்காக நாட்டின் அரசமைப்பின் முதலாவது சரத்தை திருத்துவது உட்பட பல முக்கிய சிபாரிசுகளை இந்த மக்கள் பிரதிநிதிகள் குழு அரசிடம் முன்வைத்திருந்தது.

நாட்டின் அரசமைப்பைத் திருத்த வேண்டுமானால் முதலில் அந்த யோசனைகள் மக்கள் முன் வைக்கப்பட்டு அதற்கு அவர்களதுஒப்புதல் பெற்றுக் கொள்ளப்படவேண்டும்.

அதற்கு வசதியாக சூழல் பாதுகாப்பு உட்பட பல விடயங்களை உள்ளடக்கி ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அதிபர் மக்ரோன் இணங்கியிருக்கிறார்.

பிரான்ஸில் கடைசியாக 2005 ஆம் ஆண்டு ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜரோப்பிய அரசமைப்பு (European constitution) ஒன்றை உருவாக்குவதற்கு மக்களது ஒப்புதல் கோரி நடத்தப்பட்ட அந்த வாக்கெடுப்பு மக்களால் நிராகரிக்கப்பட்டது.

அப்போதைய அதிபர் ஜக் சிராக்கின் (Jacques Chirac) அரசுக்கு அது ஒர் அவமானகரமான தோல்வியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.