பிரான்ஸில் நத்தார் விடிகாலையில் துயரச்சம்பவம்!

16

மாமி முறையான பெண் ஒருவரால் கண்டபடி கத்தியால் வெட்டிக் காயப்படுத்தப்பட்ட எட்டுவயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான். அவனது சகோதரியான ஐந்து வயதான சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்.அந்தப் பெண் பின்னர் தனது ஒரு மாதக் கைக்குழந்தை யையும் கொல்ல முயன்றுள்ளார். இல் – து – பிரான்ஸின் இவ்லின் (Yvelines) மாவட்டத்தில் லீமே (Limay) என்னும் இடத்தில் நத்தார் தினமான இன்று அதிகாலை இந்த திகில் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.உயிர்காப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோதிலும் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

கால், கை, வயிறு போன்ற இடங்களில் வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட சிறுமி உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டு பாரிஸ் 19 வட்டாரத்தில் உள்ள Robert-Debré மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.பாரிஸ் ஊடகங்களின் தகவலின்படி சிறுவர்களைத் தாக்கிய 38 வயதான பெண் ஒரு மனநோயாளி என்று கூறப்படுகிறது. கையில் காயத்துடன் காணப்பட்ட அப் பெண்ணை பொலீஸார் கைது செய்தவேளை தனக்குப் பேய் பீடித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.அந்தப் பெண்ணின் வீட்டில் நத்தார் கொண்டாட்டத்துக்கு சென்றிருந்த சிறுவர்களே இவ்வாறு அவரது கத்தி வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

சிறுவர்களை வெட்டிய பிறகு தனது கைக்குழந்தை யையும் அவர் கொல்ல முயற்சித்த ததற்கான தடயங்கள் காணப்படுகின் றன. அந்தக் கைக் குழந்தையும் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் படுகிறது.சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் கொல்லப்பட்ட சிறுவனினதும் காயமடைந்த சிறுமியினதும் பெற்றோர் நினைவிழந்தனர் என்றும் பின்னர் அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. சிறுவர்களை அப்பெண் வீட்டின் அருகே உள்ள பூங்காவுக்கு அழைத்துவந்து அங்கு வைத்தே அவர்களை வெட்டியுள்ளார் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பெண்ணின் உறவினர்கள் சிலர் அச்சமயம் வீட்டில் உறக்கத்தில் இருந்துள்ளனர். சிறுவர்களை வெட்டிய அந்தப் பெண் தற்சமயம் மருத்துவப் பொலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.