பிரான்ஸில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஐவர் பலி.

82

பிரான்சில் சுற்றுலா விமானங்கள் இரண்டு நடு வானில் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவர் பயணிக்கக் கூடிய ULM இலகுரக விமானம் ஒன்று (10/10/2020) சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 16H30-17H00, மணி இடைவெளியில் DA40 ரக சுற்றுலா விமானம் ஒன்றுடன் நடுவானில் மோதியுள்ளது.

இதில் இரண்டு விமானத்திலும் சேர்த்து பயணம் செய்தவர்களில் ஐவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய சுற்றுலா விமானமானது பிரான்ஸின் மேற்கு பகுதியில் Loches நகரில் இருந்து, 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள préfecture d’Indre-et-Loire நகரத்திலிருந்து சனிக்கிழமை மாலை இரண்டு பயணிகளுடன் புறப்பட்டது என தெரிய வந்துள்ளது.

அதேசமயம் Nadia Seghier நகரில் இருந்து Loches நகர் நோக்கி DA40 ரக சுற்றுலா பயணிகள் விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இலகுரக விமானமும், சுற்றுலா விமானமும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இந்த கோர விபத்தில் இரண்டு விமானங்களிலும் பயணித்து கொண்டிருந்த பயணிகள் ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேற்கு பிரான்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இரண்டு விமானங்களும் நடுவானில் மோதிக்கொண்ட நிலையில், ஒரு விமானமானது குடியிருப்பு ஒன்றில் வேலியுடன் மோதி நின்றுள்ளது.

இன்னொரு விமானம் பல நூறு மீற்றர்கள் தொலைவில் ஆள் ஆரவாரமற்ற பகுதியில் வீழ்ந்துள்ளது.

இந்த விமான விபத்தில் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் தகவல் வெளியானதும் சுமார் 50 தீயணைப்பு வீரர்களும் முப்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சம்பவ பகுதியில் குவிந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த துயர விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், பிரான்ஸில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான சிறிய ரக விமானங்கள் அவ்வப்போது விபத்திற்குள்ளாவது தொடர்கதையாக இருப்பதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.