தமிழர்களின் அடுத்த தலைமுறை செய்யவேண்டியவை!

175

விடுதலை புலிகளை மனதார ஆதரிப்பவர்களில் இரண்டு வகை உண்டு.

* முதல் வகையினர் புலிகளை மனதார ஆதரிப்பார்கள். ஆனால் அவர்களின் சில செயற்பாடுகளை புரிந்து கொள்வதில் சிரமப்படுவார்கள்.குறிப்பாக ‘ அரசியல் கொலைகளை ‘ . சராசரி மனித கொலையாக அதை அணுகி உளவியல்ரீதியான குற்றவுணர்வை கொண்டிருப்பார்கள்.

இனி அவர்கள் விடுதலை புலிகளின் வரலாற்றை ஆவணப்படுத்தும்போதோ அல்லது சாமானிய தமிழ் சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும்போதோ, இத்தகைய ‘ அரசியல் கொலைகளை’ மறுத்தோ அல்லது உணர்ச்சிபூர்வமான பழிவாங்கல் கதையை சேர்த்தோ அதை கொண்டு போய் சேர்ப்பார்கள்.

* இரண்டாவது வகையினர் விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டத்தை எந்த தளத்தில் வைத்து மதிப்பீடு செய்யவேண்டுமோ அந்த தளத்தின் ஆதார பண்புகளை அடிப்படையாக வைத்து மதிப்பீடு செய்வார்கள்.

விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டம் என்பது ராஜதந்திர/ போரியல்/புவிசார் அரசியல்/ இராணுவ மேலாண்மை / புலனாய்வு என சகல தளங்களும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்த அதிபுத்திசாலித்தனமான குருதி தோய்ந்த ஆட்டம்.

நான் இரண்டாவது வகையினராகவே இருக்க விரும்புகிறேன்.

இந்த இரண்டு வகையினருமே வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கத்தான் விரும்புகிறோம்.

ஆனால் ஒரு சிக்கல்.

முதல் வகையினரின் வாதங்கள் எதிரிகளால் இலகுவாக உடைக்கப்படும். அதை உடைப்பதோடு அல்லாமல், இருக்கும் வரலாற்றை இருட்டடிப்பு செய்து, திரிபுபடுத்தி அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு எதிரிகள் கையளிப்பார்கள்.

உதாரணம் ராஜீவ் காந்தி அரசியல் கொலையை முதல் வகையினர் பல்வேறு சதி கோட்பாடுகளின் மூலம் மறுதலிக்கலாம்.

ஆனால் பிரேமதாச, அமிர்தலிங்கம், காமினி திசாநாயக்க,ரஞ்சன் விஜேரத்ன, நீலன் திருச்செல்வம் , இத்யாதி , இத்யாதி என ஒரு நீண்ட ‘ அப்புறப்படுத்தல்கள்’ விடுதலை புலிகளால் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு எந்த வகையான சதி கோட்பாடுகளை அல்லது உணர்ச்சிபூர்வமான பழிவாங்கல் கதையை நாம் தயாரிக்க முடியும்?

எதிரிகளால் ‘மக்களால் ஜனநாய ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொலை’ , ‘காட்டுமிராண்டித்தனமான வன்முறை’, ‘ மனித படுகொலை’ , ‘ கட்டாய ஆட்சேர்ப்பு’ என்பது போன்ற பல சொல்லாடல்களுடன் மிக இலகுவாக அவர்களால் விடுதலை புலிகளை ‘ பயங்கரவாதிகளாக’ கட்டமைக்கமுடியும். அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு விடுதலைபுலிகளை ‘பயங்கரவாதிகள்’ என நிறுவிவிட்டாலே , தமிழர் வரலாற்றிலிருந்து புலிகளை இலகுவாக இருட்டடிப்பு செய்துவிட முடியும் என்பதை எதிரிகள் நன்கு அறிவார்கள்.

ஆனால் இரண்டாவது வகையினரின் அணுகுமுறையை எடுத்துகொள்ளுங்கள். இங்கு நாம் எந்த வகையிலான கதைகளை கொண்டும் எதையும் கட்டமைக்க தேவையில்லை.

இங்கு ஆயுதப்போராட்டம் அறிவுபூர்வமாக ராஜதந்திர/போரியல் தளங்களின் பண்புகளினூடாக மதிப்பீடு செய்யப்படுகிறது. அவ்வாறு மதிப்பீடு செய்யும்போது இந்த தளங்கள் இயங்கும் விதம், உலக ஒழுங்கின் இயங்கு விதி, நாடுகளின் புவிசார் அரசியலின் நலன்கள், அது இயங்கும் விதம், இதன் பின்னே இருக்கும் சூட்சுமங்கள் என்பவற்றை தமிழ் சமூகத்திற்கு விளக்கியே அதனூடாக விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டத்தின் நகர்வுகள் decode செய்யப்படுகிறது. இதன் மூலம் புலிகள் ஏன் அத்தகைய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிவந்தது என்ற புரிதலை தமிழ் சமூகம் உள்வாங்கிகொள்ளும். இவ்வாறு மட்டுமே தமிழ் சமூகம் ‘ விழிப்படையமுடியும்’.

விழிப்படைந்த சமூகம் முறையான அறிவுசார் பார்வையில் வரலாற்றை அணுகுகையில், எதிரிகள் இருட்டடிப்பு செய்வதற்கு வாய்ப்பில்லை.

ஒரு விடயத்தை அவதானித்தீர்களா?

ராஜீவ் காந்தி அரசியல் கொலைக்கு முன்பும் சரி பின்பும் சரி விடுதலைபுலிகள் பல அரசியல் இலக்குகளை ‘ அப்புறப்படுத்தியிருந்தார்கள்’.

ஆனால் இந்தியா மட்டுமே 1992 இல் விடுதலை புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது.

ஆனால் உலக ஒழுங்கின் Great powers எதுவும் புலிகளை தடைசெய்யவில்லை.

அமெரிக்கா புலிகளை தடை செய்த ஆண்டு 1997.

பிரித்தானியா தடை செய்த ஆண்டு 2001.

ஐரோப்பிய யூனியன் தடை செய்த ஆண்டு 2006.

ஏன் மேலே குறிப்பிட்ட இந்த உலக ஒழுங்கு புலிகளை தடை செய்ய இத்தனை ஆண்டுகாலம் எடுத்தது? ஏன் அவர்கள் யாருக்கும் இது ‘ மனித கொலை’ என தெரியாதா? ஏன் சாமானியர் உங்களை போன்று ‘ மனித கொலை’ என்ற பார்வையில் அணுகவில்லை? ஏனென்றால் ராஜதந்திர/போரியல்/புவிசார் அரசியல் ஆட்டம் இப்படித்தான் ஆடப்படும்.

இதன் பின்னே ஒளிந்துள்ள உண்மை என்ன?

உலக ஒழுங்கு அதனது நலனுக்கு ஏற்ப இந்த ராஜதந்திர/ போரியல் ஆட்டத்தை ஆடும். ஆட்டவிதிகளை மாற்றும். அவைகளின் நலனுக்கு ஒத்திசைவாக இருக்கும்போது ‘சுதந்திர போராட்டமாகவும்’, எதிர் நிலைக்கு போகும்போது ‘ பயங்கரவாதமாகவும்’ அது கட்டமைத்து காய் நகர்த்தும்.

ஒரு உதாரணம் தருகிறேன். நேற்றைய எனது பதிவில் , இன்றைய நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு அடுத்து அதிகப்படியான அரசியல் கொலைகளை இஸ்ரேலே நிகழ்த்தியிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கியிருந்தேன். இறையாண்மையுள்ள நாடுகள் political assassination ஐ சாமர்த்தியமாக targeted killings என்ற சொல்லாடலுடன் அதனது போரியல்/இராணுவமேலாண்மை தேவைகளுக்காக செய்துவருகின்றன என்பதையும் பதிவு செய்திருந்தேன்.

இஸ்ரேலின் காய் நகர்த்தலை கவனியுங்கள்.ஒரு புறம் அதனது targeted killings மூலம் தனது இராணுவ மேலாண்மையை உறுதிபடுத்திகொண்டே இருக்கிறது. மறுபுறம் holocaust , anti-semitism போன்ற சொல்லாடல்களுடன் யூத இனத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறிக்கொண்டு அதற்கான பங்கை எடுத்து கொள்கிறது. நான் குறிப்பிட்டது போல இந்த ஆட்டம் இப்படித்தான் ஆடப்படும்.

* தமிழ் சமூகம் நாமும் செய்யவேண்டியது என்ன?

விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ராஜதந்திர/போரியல் தளங்களினூடாக அறிவுபூர்வமாக மதிப்பீடு செய்ய கற்றுகொள்ளவேண்டும். பின்னர் வரலாற்றை முறையாக அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டும்.

மறுபுறம் உலக ஒழுங்கிடம் ‘ இனப் படுகொலை’ சொல்லாடலுடன் மல்லுகட்டவேண்டும்.

உலக ஒழுங்கின் சமன்பாடுகள் காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருக்கும். என்றாவது ஒரு நாள் இலங்கை உலக ஒழுங்கின் சில வல்லாதிக்க நாடுகளுக்கு எதிர் நிலை எடுக்க வேண்டிவரும். அந்த நேரம் அந்த வல்லாதிக்க நாடுகள் இந்த ‘ இனப்படுகொலை’ என்ற சொல்லாடலைதான் துருப்பு சீட்டாக பயன்படுத்தும்.

நேர்மையும் , அப்பாவித்தனமும் மட்டுமே நிறைந்த இனம் இறையாண்மையுள்ள நிலப்பரப்பை கட்டியமைத்ததாக உலக வரலாற்றில் தகவல்கள் இல்லை. ஆனால் வலிமையை மட்டுமே ஆதாரமாக கொண்ட பல இனங்கள் இறையாண்மையுள்ள நிலப்பரப்பை கட்டியதற்கான சான்றுகள் உலக வரலாறு நெடுக உண்டு. வரலாற்றை ஆழமாக உள்வாங்கியிருந்த தலைவர் பிரபாகரனுக்கு அது தெரிந்திருந்தது. அதனால்தான் De facto state ஐ சிறிது காலத்திற்காகவாவது அவரால் கட்டமைக்க முடிந்தது.

(மீண்டும் எனது முன்னைய பதிவுகளை மீள பதிவிடுவதற்கான களத்தை உருவாக்கி தந்த எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு நன்றி)

க.ஜெயகாந்