ஜெனிவா தீர்மானம்: ஆதரவும் எதிர்ப்பும்

928

ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் இலங்கைத்தீவு தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலிப்புகள் இன்னமும் அடங்கியதாகத் தெரியவில்லை. அத்தீவிலிருந்து வெளியிடப்படும் பெரும்பாலான கருத்துகள் வெறுமனே உணர்ச்சிபூர்வமானவையாக அமைந்துள்ளபோதிலும், அவற்றில் உள்ளார்ந்த அச்சமும் குழப்பமும் வெளித்தெரிகிறது. ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முடிந்தவரை நீர்க்க வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சிறிலங்கா அரசாங்கத்தின் அத்திவாரத்தை அது உலுப்பியுள்ளது என்பதனை கொழும்பிலிருந்து வரும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. வெளியிலிருந்து வரும் எத்தகைய மிரட்டல்களுக்கும் அஞ்சமாட்டோம் என பயில்வான்போல் மகிந்த இராஜபக்ச வெளியிடும் வீரப்பிரதாபங்களை அவரது தீவிர ஆதரவாளர்களே நம்புவதாகத் தெரியவில்லை.

இத்தீர்மானம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தரப்பில் மட்டுமல்லாது தமிழ்த் தேசிய அரசியல் வட்டாரங்களிலும் கருத்துமோதல்கள் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், தொலை நோக்கில், இலங்கைத் தீவின் அரசியலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்வு கூறலின் அடிப்படையிலேயே இத்தீர்மானத்திற்கான எதிர்ப்பும் ஆதரவும் அமைந்துள்ளன. இவ்விடயத்துடன் தொடர்புடைய அனைத்து விடையங்களையும் குறித்த எந்தவொரு தரப்பும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமையால், ஒரு தெளிவான முடிவினை எட்டுவதில் சிக்கல் இருப்பதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நடைமுறை யதார்த்தத்தை புறந்தள்ளிவிட்டு, கோட்பாட்டு ரீதியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லது மேற்குலகத்திற்கான ஆதரவு என்ற தளத்தில் வெளியிடப்படும் கருத்துகளையிட்டு நாம் அதிகம் அக்கறைகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இலங்கைத்தீவின் அரசியலில், அண்மைக்காலத்தில், கோட்டுபாட்டு ரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டமைக்கான சான்றுகள் இல்லை. இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பதாகையை தமது வசதிக்;காக தூக்கிப் பிடிப்பவர்களே, தமிழ் மக்கள் மீதான போருக்கு ஏகாதிபத்தியம் வழங்கிய உதவிகளை எந்தவித மறுப்புமில்லாமல் ஏற்றுக் கொண்டவர்கள் ஆவர்.

முதலில், இத்தீர்;மானம் தொடர்பில் தமிழ்த் தரப்பினரிடையே உள்ள வேறுபட்ட கருத்துகளை பார்ப்போம். இக்கருத்து வேறுபாடுகள் அரசியல் விளிப்புணர்வினால் ஏற்பட்டவை என்பதனால் இவை தொடர்பான விவாதங்களை நாம் வரவேற்க வேண்டியவர்களாக உள்ளோம். இங்கு தமிழர் தரப்பு எனக் குறிப்பிடும்போது, அடிபணிவு அரசியலில் இணைந்திருப்பவர்களை இதில் இணைத்துக் கொள்ளவில்லை என்பதனையும், தாயகத்திலும் அலைந்துழல்வு சமூகத்திலும் உயிர்ப்பு நிலையில் உள்ள அமைப்புகளையும், இயங்கு திறன்கொண்ட செயற்பாட்டாளர்களையும் மாத்திரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதனையும் நாம் குறிப்பிட விரும்புகிறோம்.

தமிழர் தரப்பினர் மத்தியில் மூன்று விதமான கருத்துகள் முக்கியம் பெறுகின்றன. ஓன்று, இத்தீர்மானமானது 2009ம் ஆண்டில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவின் பின்னர் நம்பிக்கை கொள்ளக்கூடிய ஒரு முன்னோக்கிய நகர்வாக அமைந்துள்ளது என்பது. பொதுவில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில், தமிழ்மக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. இது அரசியல் வியாக்கியானங்களுக்கு அப்பால், தமிழர் தேசத்தின் கூட்டு உளவியலை வெளிப்படுத்துகிறது.

இரணடாவது, இத்தீர்மானத்தில் குறித்துச் சொல்லும்படியான விடயங்கள் அடங்காவிட்டாலும், சர்வதேச சுயாதீன விசாரணையின் முதற்படியாக இது அமைந்துள்ளது ஆகவே இதனை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மேற்குலகத்தின் ஈடுபாட்டுடன், அல்லது அவர்களது சம்மதத்துடனேயே ஈழத்தமிழர்களின் இழந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற கருத்து. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உலகத்தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ்க் காங்கிரஸ், அமெரிக்க தமிழ் அரசியற்பேரவை, பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு என்பவை வெளியிட்ட அறிக்கைகள் இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டவை.

மூன்றாவது கருத்து, இத்தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மாத்திரம் நிறைவேற்றக் கோருவதனால், இதனை ஆதரிப்பது நல்லிணக்க ஆணைக்குழவினை ஏற்றுக்கொள்வதாக அமைந்துவிடும். அதேசமயம் இங்கு அரசியற்தீர்வாக பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலம் குறிப்பிடப்பட்டிருப்பதால் அதனை ஏற்றுக்கொளள முடியாது. தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, மற்றும் பதினான்கு நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்கள், தமிழ்நாடு இளைஞர் அமைப்புகள் என்பவை இத்தகைய கருத்தினை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தன.

மேற்குறித்த கருத்துகளை கொண்டவர்களுக்கிடையில் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீங்கலாக), ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் விடயத்திலும், இறுதித் தீர்வு விடயத்திலும் ஒருமித்த கருத்து நிலவுவதையும் அவரகளுடான தொடர்ந்த உரையாடல்கள் மூலம் கண்டறியக் கூடியதாகவிருந்தது. இங்கு காணப்படும் கருத்து முரண்பாடுகள் முழுமையாக அரசியல் நிலைப்பாடு சார்ந்து அமைந்துள்ளமையும் அவதானிக்க முடிந்தது.

சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதின்மூன்றாம் திருத்தச்சட்ட மூலத்தின் அமுலாக்கமானது, நடைமுறையில், பிரிக்கப்பட்ட வடமாகாண சபைக்கான தேர்தலை நடாத்துவது தொடர்பானது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்ற அளவில் பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அதனை அரசியல் தீர்வின் அடிப்படையாக ஏற்றுக் கொள்ளவேண்டியதில்லை என தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் வாதிடுகிறார்கள். அதே சமயம், வடமாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டால் இராணுவ நெருக்குவாரங்கள் குறைக்கபடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒன்றினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரேயடியதானதாக அமையாமல், பல்வேறு படிநிலைகளில் விரிந்து செல்லும் என்பதனால், நாம் விரும்புகிறபடி உடனடியாக சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பொறிமுறையை ஏற்படுத்தவது நடைமுறைச் சாத்தியமற்றது என இத்தீர்மானத்தை ஆதரித்து நிற்கும் தமிழ் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இத்தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கா தமிழர் தரப்பிடம் எத்தைகைய உறுதிமொழிகளை வழங்கினார்கள் எனத் தெரியாவிட்டாலும், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவினைப் பெறுவதற்ககாகவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மையப்படுத்தியதாக தமது தீர்மானம் அமைத்திருப்பதாக அமெரிக்க தரப்பில் குறிப்பிடப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.

சிங்களத் தரப்பினரிடையிலும் இத்தீர்மானம் தொடர்பில் மூன்று வகையான நிலைப்பாடுகள் வெளித் தெரிகின்றன. சிறிலங்கா அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும்; இதனை முழுமையாக நிராகரிக்கவேண்டும் எனக் கோரிவருகிறார்கள். மேற்குலக ஆதரவு சக்திகள், குறிப்பாக மேற்குல நிதியுதவியில் இயங்கும் அரசுசாராநிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இத்தீர்மானத்தை கவனத்தில் எடுக்குமாறு வலியுறுத்துகிறார்கள். மூன்றாவது தரப்பினர் தீர்மானத்தில் சிலவற்றையாவது நிறைவேற்றி சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்தலாம் என ஆலோசனை வழங்குகிறார்கள். தமிழ்த் தரப்பினரைக்காட்டிலும் சிங்களத்தரப்பினர் மத்தியில் காணப்படும் கருத்து மோதல்கள் பாரதூரமானவையாக அமைந்துள்ளன. அவற்றின் விளைவாக சிறிலங்காவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பிரான்சுக்கான சிறிலங்காத் தூதர் தயான் ஜயதிலக்க ஆகியோரின் பதவி எந்நேரத்திலும் பறிக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.

இத்தீர்மானத்தை ஒட்டிய தமிழ்த்தரப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருப்பினும், இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமும் சிங்கள மக்களும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனபதிலேயே மேற்குலகின் நடவடிக்கைகள் அமையப்போகின்றன. தமிழர்தரப்பு தனது ஆதரவினை வெளியிட்டதன் மூலம் தாம் கடும்போக்காளர்கள் அல்ல என தெரியப்படுத்தியிருக்கினறனர். அதுவே சிங்களதரப்பினரை இத்தீர்மானத்தையிட்டு அச்சப்பட வைத்துள்ளது என்பதிலிருந்து இனமுரண்பாடு துருத்திக் கொண்டு வெளித்தெரிகிறது.

தமது அரசினால் நிறுவப்பட்ட ஒரு ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் சிறிலங்கா அரசுக்கு சிக்கல்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் சிங்கள-பௌத்த பேரினவாதத்தினை அடித்தளமாகக் கொண்ட சிறிலங்கா அரசாங்கத்தினால் அத்தகைய விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ள முடியாதுள்ளது. இவ்விடயத்தில் ஆட்சி மாற்றங்கள் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த மாட்டாது என்பதனை மேற்குலகத்தினர் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆகையால், சிறிலங்காவில் மேற்குலகத்திற்கு இசைவாகச் செயபடக்கூடிய ஒரு ஆட்சி ஏற்படுமிடத்தில் இத்தீர்மானத்தின் தொடர்ச்சி குறைப்பிரசவமாக மாறிவிடும் அபாயம் உள்ளமையை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம்.