விசேட வர்த்தமானி : தீவிரமடைகிறது இராணுவ மயமாக்கல்,பாதுகாப்பு முப்படைகளிடம் ஒப்படைப்பு

482

9ஆவது பாராளுமன்றம் முதற்தடவையாக கூடியுள்ள நிலையில் வெளியிட்டுள்ள விசேட அசாதாரண வர்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக நாடு முழுமையான நிலம் மற்றும் கடல்பாதுகாப்பின் பொறுப்பை கோத்தா முப்படைகளிடமும் வழங்கியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டம் 40ஆவது அத்தியாயம் 12 ஆம் பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் ஆயுதம் தாங்கிய படைகளின் சகல உறுப்பினர்களையும் பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக 2020 ஆகஸ்ட் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு இக்கட்டளை மூலம் அழைக்கிறேன் என அழைப்பு விடுத்துள்ளார் கோத்தா.

அவ்வழைப்பு தரைப்படை கடற்படை வான்படைக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதில் கடமை மாவட்டங்களாக 25 மாவட்டங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கடல்பகுதியை கொண்டுள்ள மாவட்டங்களில் கடற்பகுதிகளும் தனித்துவமாக குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பிற்கென பொலிஸ் ஆட்கொண்டிருக்கும் நிலையில் ஆயுதப்படைகளை களம் இறக்கும் அவசரம் அசாதாரண சூழல் ஏன் எவ்வாறு எழுந்துள்ளது என்பதற்கான எவ்வித பதிலும் அதில் இல்லை.

இருக்கஇ இத்தகைய முன்னெடுப்பு எவ்வித பாராளுமன்ற அனுமதியையும் எதிர்பாராமல் எடுக்கப்பட்டுள்ளமை தற்போதைய அரசிலமைப்பை கடுமையாக மீறும் செயல் மட்டுமன்றி எதிர்காலத்திலும் முழுமையான இராணுவ மயமாக்கல் எவ்விதத்தில் முன்னெடுக்கப்படப்போகிறது என்பதைக கட்டியம் கூறுவதாகவும் உள்ளது.

இராணுவத்தின் பெரும்பான்மையான படையணிகள் வடக்கு கிழக்கிலேயே நிலை கொண்டுள்ள நிலையில் இலங்கையின் 25 மாவட்டங்களும் வர்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதன் குறி வடக்கு கிழக்கே என்பதுவும் வடக்கு கிழக்கில் இராணுவத்தை முன்னிறுத்தி பல தமிழ் முஸ்லீம் விரோத நடவடிக்கைகள் விரைவில் முனைப்புப்பெற்று நகர உள்ளன என்பதே இதன் பின்னால் உள்ள அபாயகரமான எச்சரிக்கையாகும்..

Nehru G