ஐஸ் எனும் Crystal methamphetamine!

174

ஒரு தெளிவான விளக்கம்…

இன்று குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் கரையோர பிரதேசங்களில் பேசு பொருளாக மாறி இருக்கும் ஒரு விடயம் பற்றி எழுதப்பட்டதே இந்த கட்டுரை.

சமூகத்தில் பூதகரமான பிரச்சினையாக மாறி வரும் Synthatic drugகளில் ஒன்றான Crystal methamphetamine அதாவது ஐஸ் என்று உள்ளூரில் அழைக்கப்படும் அபாயகரமான போதைப்பொருளை பற்றி விடுமுறை காலத்தில் செய்த ஆய்வின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதியுள்ளேன். இது மைய நரம்பு தொகுதியை (மூளை மற்றும் முண்ணான்) தூண்டுவதன் மூலம் போதையை ஏற்படுத்தும் ஆபத்தான போதை மருந்தாகும்.

கிரிஸ்டல் மெத் அல்லது ஐஸ் என்பது பளிங்கு/படிக மெத்தம்பேட்டமைனின் (Crystal methamphetamine) பொதுவான பெயர், இது மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு வலுவான போதை மருந்தாகும். இதற்கு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எவ்விதமான பயன்பாடும் இல்லை.

இது தெளிவான படிக துண்டுகள் அல்லது பளபளப்பான நீல-வெள்ளை பாறைகள் போன்றது. “Ice” அல்லது “Glass” என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு பிரபலமான போதை மருந்தும் கூட. வழக்கமாக, இதனை பாவிப்பவர்கள் ஒரு சிறிய கண்ணாடிக் குழாயை பயன்படுத்தி புகைக்கிறார்கள், மேலும் அவர்கள் அதை வாயினால் விழுங்குவதன் மூலமோ அல்லது மூக்கால் நுகர்வதன் மூலமோ அல்லது நாளங்களிட்குள் ஊசி மூலம் உடசெலுத்துவதன் மூலமோ போதை நிலையை அடையலாம். அதைப் பயன்படுத்திய சிறிது நேரத்திலேயே விரைவாக பரவசமடைவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது மிக மிக ஆபத்தானது. இது உங்கள் உடலை சேதப்படுத்துவதோடு கடுமையான உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

இது எங்கிருந்து கிடைக்கின்றது?
மெத்தாம்பேட்டமைன் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை இரசாயன தூண்டியாகும், இது நீண்ட காலமாகவே புழக்கத்தில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது வீரர்கள் தூக்கமின்றி விழித்திருக்க அவர்களுக்கு மெத் வழங்கப்பட்டது. உடல் எடையை குறைக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுத்தப்படுவதாக மருத்துவ குறிப்புகள் மூலம் அறியக்கிடைக்கின்றது. இன்று, ஒரே ஒரு சட்டப்பூர்வ தயாரிப்பாக அதீத உடல் பருமன் மற்றும் Attention Deficit Hyperactivity Disorder (ADHD)க்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இருந்தும், இது மிக அரிதாகவே பயன்படுத்தப்படுவதுடன் வைத்தியர்களின் அறிவுரைகளுக்கு அமைவாக மட்டுமே கிடைக்கிறது.

கிரிஸ்டல் மெத் என்பது சூடோபீட்ரின் (Pseudoephedrine) என்ற மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது பல குளிர் மருந்துகளில் (Cold medicines) காணப்படுகிறது. சூடோபீட்ரின் மெத் தயாரிக்கப் பயன்படுவதால், பல நாடுகள் இந்த மூலப்பொருளைக் கொண்டு பண்டங்களை தயாரிப்பதை இறுக்கமாக கண்காணித்து வருகின்றன.
பெரும்பாலாக பயன்படுத்தப்படும் படிக மெத்தில் (Crystal meth) அனேகமானவை மெக்சிகோவில் காணப்படும் “சூப்பர் லேப்களில்” தயாரிக்கப்பட்டவை. மெத் தயாரிப்பில் பல ஆபத்தான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் இதனை தயாரிப்பதும் மிக ஆபத்தானதாகும். இந்த இரசாயன பொருட்கள் அதிக நச்சு தன்மையுடன் இருப்பதோடு அவை வெடிப்பையும் ஏற்படுத்தக்கூடியவை.

இது உங்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?
மெத் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் சக்திவாய்ந்த பரவசம் உங்களை அதன் ஆரம்ப கட்ட பாவனையில் இருந்தே அதற்கு அடிமையாக்கிவிடுகிறது. இதனை பயன்படுத்தப்படும்போது, டோபமைன் (Dopamine) எனப்படும் ஒரு வேதிப்பொருள் மூளையின் பகுதிகளை அதன் தாக்கத்தில் மூழ்கடித்து மகிழ்ச்சி போன்ற தற்காலிக உணர்வினை அளிக்கிறது. அதனை அவர்கள் புதிய ஆற்றல் ஒன்றினை பெறுவதாக உணர்கிறார்கள்.

இது ஒரு பயனரை மிக விரைவில் அடிமையாக்குவதோடு இந்த போதையை மறுபடியும் அடைவதற்கு அவர்களை எது வேண்டுமானாலும் செய்ய தூண்டுகிறது. அவர்கள் மெத் அல்லது ஐஸ் இனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவர்களிற்கு ஒரு சகிப்பு தன்மையை உருவாக்கிவிடுகின்றது. அதாவது, அதே குறித்த அளவு போதை உயர்வைப் பெற அவர்களுக்கு அக்கட்டத்தில் முந்திய அளவை விட அதிக அளவு மெத் தேவைப்படுகிறது. அதிக அளவு மெத் என்பது அதிகரித்த ஆபத்து என்பதையே குறிப்பிடுகிறது.

இதன் விளைவுகள் என்ன?
மெத் ஒரு பயனரின் உடல் வெப்பநிலையை உயர்த்துவதால் திடீர் உயிரிழப்பை ஏற்படுத்தலாம்.
இதை பயன்படுத்துபவர் அதீத கவலை (Anxious) மற்றும் குழப்பத்தை உணரலாம், தூங்க முடியாமல் தவிக்கலாம், மனநிலை குழப்பங்களை ஏற்படுத்தலாம், மேலும் அவரை வன்முறையாளராக மாற்றலாம்.
பயனரின் தோற்றம் வியத்தகு முறையில் மாறலாம். ஒரு பயனர் விரைவாக வயதாகலாம் அல்லது வயதான தோற்றத்தில் காணப்படலாம். அவர்களின் தோல் வறண்டதாக மாறலாம், மேலும் மெத் தோலில் புண்கள் மற்றும் பருக்களையும் உருவாக்கலாம்.

மேலும் அவர்கள் வறண்ட வாய் மற்றும் கறை படிந்த, உடைந்த அல்லது உருக்குலைந்த பற்களைக் கொண்டிருக்கலாம். மெத் இதயம் மற்றும் நுரையீரலையும் வெகுவாக பாதிப்பதோடு அவற்றை விரைவில் பலவீனமடையவும் செய்கின்றது.
அவர்கள் சித்தப்பிரமை (Paranoid) உடையவர்களாகவும் ஆகலாம். இல்லாத விடயங்களை கேட்பதும் பார்ப்பதும் போன்று உணரலாம். அவர்கள் தங்களை தாமாகவோ அல்லது மற்றவர்களையோ தாக்கி காயப்படுத்தவும் முயலலாம். மேலும் பூச்சிகள் தங்கள் தோலில் அல்லது தோலின் கீழ் ஊர்ந்து செல்வதைப் போலவும் உணரலாம். இது மெத்தம்பேட்டமைன் மனநோய் (Methamphetamine psychosis) எனப்படும்.

ஒரு மெத் பயனருக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் தொற்று ஆபத்தும் அதிகமாகவே காணப்படுகிறது. போதைப்பொருளின் செல்வாக்கின் கீழ் உள்ள ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற ஆபத்தான நடத்தைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

ஒருவர் மெத் அல்லது ஐஸ் பயன்படுத்துகிறார் என்று சந்தேகிக்கிறீர்களா? அவ்வாறாயின் அதன் அறிகுறிகள் யாவை?
தனது தோற்றம் அல்லது சீர்ப்படுத்தல் (Personal appearance or grooming) பற்றி அக்கறை இன்மை, விசித்திரமான உடை மற்றும் சிகை அலங்காரம்.
அடிக்கடி தலை மற்றும் தோலை சொறிந்தபடி காணப்படுதல்.
பசியின்மை மற்றும் உடல் எடை இழப்பு.
அகன்ற பெரிய கண்மணி (Pupil) மற்றும் வேகமான கண் அசைவு காணப்படுதல்.
விசித்திரமான தூக்க முறைகள்: ஒரே இடத்தில் பல நாட்கள் அல்லது வாரங்கள் வரை தங்கியிருத்தல்.
விசித்திரமான, ஒழுங்கற்ற உடல் அவைய அசைவுகள், இயக்கங்கள், முக நடுக்கங்கள், முறையற்ற நடத்தை முறைகள் மற்றும் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருத்தல், கூச்சலிடுதல்.
அதிகரித்த பண தேவைகள்: அடிக்கடி கடன் வாங்குவது, உடைமைகளை விற்பது, அல்லது திருடுவது.
திடீரென கோபப்படுதல் அல்லது அடிக்கடி ஏற்படும் ஒழுங்கற்ற மனநிலை மாற்றங்கள்.
சித்தப்பிரமை மற்றும் பிரமைகள் போன்ற உளவியல் பாதிப்புகள் அல்லது மனநோய் (Paranoia and hallucinations)

மெத் அல்லது ஐஸ் போதைக்கு அடிமையானவரை எவ்வாறு குணப்படுத்தலாம்?
மெத் போதை என்பது சிகிச்சைக்கு மிகவும் கடினமான போதை பழக்கங்களில் ஒன்றாகும், ஆனால் அதை குணப்படுத்த முடியும். மெத் போதைக்கு அடிமையான ஒருவரை நீங்கள் அறிந்திருந்தால், அவர்களுக்கு நீங்களாகவே உதவ முயற்சிக்காதீர்கள். அவர்களுக்கு ஒரு தொழில்முறை ஆலோசகரின் உதவி அல்லது மருத்துவ ரீதியான சிகிச்சை திட்டம் தேவை.

இவ்வாறான உதிவிகளை வழங்க நம் நாட்டில் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவங்கள் காணப்படுகின்றன. பின்வருவனவற்றுள் எதாவது ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது வைத்தியர் ஒருவரின் ஆலோசனையை பெறுவதன் மூலமோ நீங்கள் சரியான இலக்கினை அடைய முடியும்.

Department of Social Services – Jayaviru Samadhi Rehabilitation Institute.
Project for the Rehabilitation and Social Integration of Drug Addicts.
United Nations Office for Drug and Crimes in Sri Lanka.
Alcohol and Drug Information Centre.
Sri Lanka Sumithrayo.

போதையில் இருந்து மக்களை குணப்படுத்துவதை விட அல்லது சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாடுவதை விட அவ்வாறானவர்களை ஆரம்ப நிலையிலேயே போதையின் பக்கம் செல்ல விடாமல் தடுப்பதே போதை ஒழிப்பிற்கான மிக சிறந்த வழியாகும்.