இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா? நம்ப முடியுமா ?

83

இந்தியாவில் சிறுபான்மை தேசிய இனங்களை நசுக்கிவரும் இந்திய அரசு இலங்கையில் ஈழத் தமிழருக்கு உதவும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால் அதற்கு,

இந்தியாவில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களின் உணர்வுக்கு மாறாக இந்திய அரசு செயற்பட முடியாது. ஆதலால் ஈழத் தமிழருக்கு இந்திய அரசு உதவும் என்று பதில் அளிக்கிறார்கள்.

சரி. ஆனால் இந்திய அரசால் தாம் நசுக்கப்படுவதாக தமிழக தமிழர்களே போராடுகின்றார்களே. அப்படியென்றால் தமிழக தமிழர்களை நசுக்கும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால் அதற்கு,

இலங்கை அரசு சீனா பக்கம் சாய்கிறது. எனவே இந்திய அரசு தனது பாதுகாப்பிற்காக ஈழத் தமிழர்களை ஆதரிக்க வேண்டியுள்ளனது என்று பதில் அளிக்கிறார்கள்.

ஆனால் இலங்கையின் புதிய வெளிவிகாரத்துறைச் செயலர் இந்தியாவுக்கே முன்னுரிமை கொடுப்போம் என்று கூறியுள்ளார். அது மட்டுமன்றி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியது தவறு என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு விவகாரத்தில் முதல் முன்னுரிமை இந்தியாவுக்கே வழங்கப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவும் கூறியுள்ளார்.

இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளின் தயவுடனேயே கோத்தாவும் மகிந்தவும் பதவிக்கு வந்துள்ளனர். அத்துடன் அவர்கள் தமது அரசு இந்தியாவுக்கு ஆதரவாகவே செயற்படும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள்.

அதைவிட, இலங்கை இறைமை உள்ள நாடு. அதன் உள் விவகாரங்களில் அந்நிய நாட்டு தூதுவர் தலையிட முடியாது என இலங்கை ராஜாங்க அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

எனவே இனி தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தூதுவரை சந்திக்க முடியாது. இந்திய தூதுவரும் “தமிழருக்கு தீர்வு கிடைக்க இந்தியா உதவும்” என்று அறிக்கை விட முடியாது.

இத்தனையும் மீறி இனியும் இந்தியா ஈழத் தமிழருக்கு உதவும் என்று யாராவது சொல்வார்களேயானால் அவர்கள் “இலவு காத்த கிளிகள்” என்றே கூறவேண்டும்.