இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய 13 ஆவது திருத்தம்; இலங்கை அரசாங்கத்தைக் குழப்பி விட்டதா?

62

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் குறித்து இலங்கை, இந்திய அரசியல் தரப்புக்களின் கவனம் இப்போது திரும்பியிருக்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற காணொளி மூலமான பேச்சுக்களின் போது 13 ஆது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என மோடி வலியுறுத்தியதையடுத்தே இது குறித்து அனைவரது கவனமும் திரும்பியிருக்கின்றது.

“13 ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்து ராஜபக்‌ஷக்களின் அரசாங்கத்தில் வலுவடைந்திருக்கும் நிலையில், இந்தக் கருத்தை இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருப்பதன் பின்னணியில் நிச்சயாக ஒரு அரசியல் நகர்வு இருந்திருக்க வேண்டும். அண்மைக்காலத்தில் ’13’ குறித்தோ, இனநெருக்கடிக்கான தீர்வு குறித்தோ பேசாதிருந்த இந்தியா இப்போது, அதிரடியாக இவ்வாறு கூறியிருப்பது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.

1980 களில் ஜெயவர்த்தனவின் அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருக்கமாகச் சென்றுகொண்டிருந்த ஒரு நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்ப் போராளிகளைப் பயன்படுத்திய டில்லி, 1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையைக் கொண்டுவந்தது. இந்த உடன்படிக்கையின் குழந்தைதான் 13 ஆவது திருத்தம். இலங்கை மீது அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இந்தியாவிடம் இன்றுள்ள ஒரேயொரு துருப்புச் சீட்டும் அதுதான்.

சீனாவுடன் நெருங்கிச் செல்லும் இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்கு இதனை இந்தியா இப்போது பயன்படுத்தியிருப்பதாகவே இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. அதேவேளையில், “13 ஐ இல்லாதொழிக்க வேண்டும்” என ஆளும் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாகச் சொல்லிவருவதும் இந்தியப் பிரதமரின் இந்த அதிரடி நகர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மோடியின் இந்த நகர்வு கொழும்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது என்பதை அதன் குழப்பான அறிக்கைகளிலிருந்தே புரிந்துகொள்ள முடிகின்றது. இரு நாட்டு கூட்டறிக்கையில் மோடி சொன்னது என்ன என்பது தெளிவாக வலியுறுத்திக் கூறப்பட, இலங்கை அரசின் சார்பில் தனியாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அது மறைக்கப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் அந்த செய்தி வெளிவருவதை அரசாங்கம் விரும்பவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இரு நாடுகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்ட பின்னர், அதில் ஒரு நாடு தனியான அறிக்கை ஒன்றை வெளியிடுவது இராஜதந்திர மரபல்ல. அவ்வாறு வெளியிடப்படுமானால், அதில் அரசியல் உள்நோக்கம் இருந்திருக்க வேண்டும்.

20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பமாகும் என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு. தற்போதைய 13 இல் உள்ள அம்சங்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுமா என்பது முக்கியமான ஒரு கேள்வியாக இருக்கும் பின்னணியில்தான் மோடி காணொளிச் சந்திப்பில் புதிய காய்நகர்த்தலை மேற்கொண்டிருக்கின்றார்.

மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதை தமது பிரதான கொள்கையாகக் கொண்டிருக்கும் முன்னாள் கடற்படை அதிகாரி சரத் வீரசேகரதான் மாகாண சபைகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். இந்த நியமனத்தின் உள் நோக்கம் என்ன என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல.

புதிய அரசியலமைப்பில், தற்போது “13” இல் உள்ள அம்சங்கள் நீக்கப்பட்டுவிட வேண்டும் என்ற கருத்து ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களில் காணப்படுகின்றது என்பது இரகசியமானதல்ல. அதிகாரங்கள் இல்லாத ஒரு மாகண சபைகூட தேவையில்லை என்பதுதான் சரத் வீரசேகர போன்றவர்களின் கருத்தாக உள்ளது.

சரியான தருணத்தில்தான் மோடி காய்களை நகர்த்தியிருக்கின்றார். காணொளிச் சந்திப்பில் மோடியின் கருத்துக்கு பதிலளிக்காமல் மௌனம் காத்த்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஊடகவியலாளர்களிடமும் அது குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தத் தவறியிருக்கின்றார். இது இலங்கை தரப்பில் காணப்படும் தயக்கத்தை – விருப்பமின்மையை வெளிப்படுத்துகின்றது.

இந்தியத் தரப்பு “13” என்பதை தமது இராஜதந்திரத் தேவைகளுக்காக – காய்நகர்த்தல்களுக்காக வெறுமனே பேசுபொருளாக்கியிருக்கின்றதா? அல்லது உண்மையிலேயே 13 முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய அழுத்தங்களைக் கொடுக்கப்போகின்றதா?