IPKF – EPRLF கூட்டு கொலை, கொள்ளைகள்

245

1988/89 இந்திய இராணுவ – ஈபிஆர்எல்எவ் கூட்டுக் கொலைகளும் கொள்ளைகளும் (பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் பிரபல கொள்ளைகள் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்றின் சிறு பகுதி இன்று 40 வயதை தாண்டியவர்களுக்கு நினைவுகள் பத்திரமாக இருக்கும்…..

1988 ஆம் ஆண்டு கால கட்டங்கள், அப்போது என் வயது பத்து. இந்திய அமைதிப்படை என்ற பெயரில் எம் மண்ணில் வானரக்கூட்டங்கள் நிறைந்திருந்த கால கட்டம். அவர்களின் ஆதரவுடன் அட்டூளியங்களும், களவு கொள்ளைகளும் தலைவிரித்தாடிய பயங்கரமான ஒரு கால கட்டம் அது. அந்த நேரங்களில் பெரிதும் இராக்காலங்களில், கொள்ளைகள், களவுகள் என்பன அப்போது இந்தியப்படைகளுடன் சேர்ந்தியங்கிய சில துணை இராணுவ குழுக்களால் முக்கியமாக EPRLF வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டன.

கூக்குரலிடும் வீட்டின் ஆபத்தை அறிந்து அயலவர்கள் அங்கு அவர்களுக்கு உதவியாக வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் அப்போதைய ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி கொள்ளைகளுக்கு பங்கு கேட்கும் இந்திய இராணுவத்தினர் வீதிகளில் நிற்பார்கள். வீட்டை விட்டு வீதிக்கு வந்தால் சுடப்படுவோம் என்ற அச்சத்தின்காரணமாக எவரும் வீதிக்கு வரமாட்டார்கள் என்ற நிலை எற்பட்டிருந்தது. இப்படியே தொடர் கொள்ளைகளையும், களவு போகும் வீட்டுக்காரர்களின் கூக்குரலினையும், சில வேளைகளில் அந்தக்கொள்ளையர்களின் துப்பாக்கிப்பிரயோகத்தையும், கள்வர்களுக்கு காவலாக நிற்கும் இந்திய அமைதி காக்கும் படைகளின் ஹிந்தி மொழிகளையும், நான் அப்போது அச்சத்துடன் பல நாட்களாக கேட்டிக்கின்றேன்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த அநியாயங்கள் இடம்பெற்ற போது இதையும் தடுப்பதற்கு மக்கள் திட்டமிட்டு செயற்பட்டனர். இந்த திட்டங்கள் வெற்றியடைந்து பல கொள்ளைகள் தடுக்கப்பட்டன.

அந்த திட்டங்கள் இவைதான், கள்வர்கள், கொள்ளையர்களின் (IPKF – EPRLF) நடமாட்டங்கள் தெரிவதாக உறுதிப்படுத்தும் சம்பவங்கள் ஏற்பட்டவுடன் அனைத்து மக்களையும் உசாரடையச்செய்யும் விதமாக தகரங்கள், சட்டி பானைகளை தட்டி ஒலியெழுப்புதல், ஒவ்வொரு வீட்டிலும் எழுப்பப்படும் அந்த ஒலி அந்த பிரதேசம் முழுவதும் ஒலித்து அனைவரையும் உசாரடையச்செய்யும். அத்தோடு பக்கத்துவீடுகள், பின், முன் வீடுகளுடன் தொடர்புகளை ஒவ்வொரு வீட்டினரும் பேணிவருவார்கள், குறிப்பிட்ட ஒரு வீட்டில்த்தான் கொள்ளையர்கள் புக முற்படுகின்றார்கள் என்று அறிந்தவுடன், வேலிகள், மதில்கள் ஊடாக வீடுகளைத்தாண்டி ஊர்மக்கள் குறிப்பிட்ட அந்த வீட்டினை அடைந்து கொள்ளை இடம்பெறாமல் தடுப்பது என்ற அந்த நடைமுறை முழு வெற்றி அளித்ததுடன் இந்திய இராணுவத்தினரையும் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு கொண்டுசென்றது.

Janarthan