தியாக தீபம் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ் வரை!

242

கடந்த வருடம்போல் இவ் வருடமும், தியாக தீபம் லெப்கேணல் திலீபனின் நினைவு பவனி வட தமிழீழம் , வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “எதிர்வரும் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபனுடைய 33ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரைக்கும் நினைகூரல் நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த வருடம் தியாக தீபம் திலீபனின் நினைவாக அவரின் தியாகங்களை இளம் தலைமுறையினருக்கு வெளிப்படுத்துகின்ற நோக்கத்தோடு வவுனியாவில் இருந்து அவருடைய திருவுருவப் படத்தைத் தாங்கியவாறான ஊர்தி பவனியொன்றி ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் நிறைவுற்றது.

அதேபோன்று இம்முறையும் வவுனியாவில் இருந்து திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவனி யாழ்ப்பாணம் வரை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு செய்துவருகிறது.

15ஆம் திகதி அவருடைய நினைகூரல் நிகழ்வு ஊர்தி பவனியை ஆரம்பித்து மக்கள் செறிந்து வாழக்கூடிய இடங்களில் தியாகி திலீபனின் புனிதமான அர்ப்பணிப்பான செயற்பாடுகளை எடுத்துக்கூறுவதோடு,அவருடைய தியாகங்களை நினைவுகூரும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்தச் செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினரையும் ஒத்துழைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.