யாழ்.பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிரித்தானியாவில் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

1334


யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலையும் மாணவர்களின் விடுதலையும் வேண்டி பிரித்தானியாவில் தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்களும் மாணவர்களும் பங்கேற்றிருந்தார்கள்.

மாவீரர் நாளன்று யாழ் பல்கலைகழக மாணவர்கள் தங்கள் விடுதிகளில் வீர மறவர்களுக்கு திருவிளக்கேற்றி அகவணக்கம் செலுத்தியமைக்காக மாணவர்கள் மீது சிங்கள இனவாத அரசும் அதன் படைகளும் கட்டவிழ்த்துவிட்டிருந்த தாக்குதல்களை கண்டித்து இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் 18 பிரித்தானிய பல்கலைக்கழக தமிழ் மாணவ ஒன்றியங்கள் பங்கேற்றன. தங்களது வாயை கருப்பு துணியால் கட்டியும் பல கோசங்களை எழுப்பியும் மாணவர்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்தார்கள். குறிப்பாக ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ ‘எமது நாடு எமக்கு வேண்டும்’ ;சிங்கள இராணுவமே பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறு’ ‘சிங்கள இராணுவமே எமது தாயகத்தை விடு வெளியேறு’ என்ற கோசங்களை எழுப்பினார்கள்.

அதேபோலே இந்த வாரம் தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியப் பிரதமருக்கு மனு ஒன்றையும் கையளிக்கவுள்ளனர், இவ் மனுவில் பிரித்தானியாவில் இருக்கும் 18 பிரித்தானிய பல்கலைக்கழக தமிழ் மாணவ ஒன்றியங்களும் இளையோர் அமைப்புடன் சேர்ந்து கையெழுத்திட்டு அதனை பிரதமர் அலுவலத்திற்கு கொடுக்கவுள்ளனர்.

குறுகிய நேரத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஏராளமாக கலந்து கொண்டு எமது தாயாக சொந்தங்களுக்காக குரல் கொடுத்தமை புலம்பெயர் தமிழர்களுக்கும் தாயகத்தில் இருக்கும் எமது மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையையும் எமது தேச விடுதலையை வென்றெடுப்பதற்கு தோள்கொடுத்து நிப்பார்கள் என்பதினை பறைசாற்றி நிக்கிறது,

தகவல் : Media Team – Tamil Youth Organisation – United Kingdom