தொண்டமான் சாவு ஊர்வலத்தில் மகன் தேர்தல் பரப்புரை,மலையகம் தப்புமா?

84

அமரர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டாமானின் மகன் ஜீவன் தொண்டமான் தேர்தல் சட்டங்களையும் தனிமைப்படுத்தல் சட்டங்களையும் மீறியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தேர்தல் ஆணைக்குழுவும் பொலிஸாரும் இது குறித்து அலட்சியமாகயிருப்பதாகவும் மௌனம் சாதிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

ஜீவன் தொண்டமான் நுவரேலியாவில் தனது தந்தையின் பூதவுடல் ஏற்றப்பட்ட வாகனத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என சிஎம்ஈவியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில்,அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான நடவடிக்கைகளை கண்காணித்து தடுக்கவேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன, சமூக விலக்கல் முக்கிய விடயமாக உள்ளது என தெரிவித்துள்ள அவர் இதனை நடைமுறைப்படுத்துவது காவல்துறையினரின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த விடயத்தில் தேர்தல் ஆணைக்குழுவும் காவல்துறையினரும் உரிய நடவடிக்கைகளை எடுக்காததை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சிஎம்ஈவி எதிர்க்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை இறுதி ஊர்வலத்திலேயே அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கும் ஜீவன் தொண்டமானின் அரசியல் எதிர்காலம் இப்பவே பிரகாசமாக தெரிகின்றது.மலையக நாள்கூலி மக்களின் துன்பங்கள் தீர்வது கேள்விகுறிதான்..