ஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…

67

சிறீலங்காவினால் அச்சுறுத்தப்படுகின்ற தென்னாபிரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்காவுக்கு பன்னாட்டு சமூக நீதிக்கான அமைப்புக்கள் தமது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

மிகவும் அனுபவம் வாய்ந்த தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நாட்களாக சிறீலங்கா அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

சிறீலங்கா அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதாக சூக்கா மீதும் அவரது சிறிய அரசசார்பற்ற நிறுவனமான ”உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம்” என்ற அமைப்பு மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக யஸ்மின் சூக்காவுடன் இணைந்து பணியாற்றியவர்களில் பலர் அவர் மீது வைக்கப்படும் இக்குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுப்பது மட்டுமன்றி அவருக்கான தமது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சிறீலங்கா அரசிடமிருந்து அச்சுறுத்தல்களைச் சந்தித்து வரும் தென்னாபிரிக்க மனித உரிமைச் சட்டத்தரணியான யஸ்மின் சூக்காவுக்கு ஆதரவாக 53 அமைப்புக்களும் 153 தனிநபர்களும் தங்களது ஒப்பங்களுடன் ஒரு மகஜரை வெளியிட்டிருக்கின்றன.

அரசுக்கு எதிராகச் சதிசெய்வதாக சூக்கா அவர்கள் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கின்றார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ஐந்து மில்லியன் டொலர்களை நட்டஈடாகக் கோருகின்ற, நாட்டின் புலனாய்வு அமைப்புகளுக்கு தலைவராக விளங்குகின்ற, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயால் அனுப்பப்பட்ட கடிதத்தின் வடிவில் சூக்காவுக்கான அச்சுறுத்தல் வந்திருக்கிறது.

சலேக்கு ஆதரவான சட்டத்தரணிகள் சிலர், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிமனைக்கு முன்பாக ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தி அங்கே சூக்கா நடத்தி வரும் அமைப்பைப் போன்ற போன்ற மக்கள்அமைப்புகள்,பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு மையம் போன்ற பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள்,உலகளாவிய அதிகாரவரம்போடு தொடர்புடைய வழக்குகளை நடத்துகின்ற முக்கிய அமைப்புகளுடனும் பல தரப்பட்ட ஆபிரிக்க மனித உரிமைகள் அமைப்புகளுடனும் இணைந்து,இந்த ஆதரவுக் கடிதத்தில் ஒப்பமிட்டிருக்கின்றன.

உலகெங்கும் பரந்து வாழுகின்ற முன்னணி சட்டவாளர்கள் ஜஸ்மின் சூக்காவுக்கான தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

வழக்குரைஞர்கள், நீதிபதிகள்,மனித உரிமைகளுக்கான இரு முன்னாள் ஆணையாளர்கள்,ஐநா நிபுணர்கள், ஐநாவுக்கான விசேட அறிக்கைகள் தயாரிப்பவர்கள், ஐநாவின் தூதுவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் இக்குழுவில் அடங்குகிறார்கள்.

யஸ்மின் சூக்காவின் தாயகமான தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரையில், நிறவெறிக்காலத்து சித்திரவதைகள் மற்றும் கொலைவழக்குகள்,உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பவற்றில் அவர் ஆற்றிய பணிகள் தொடர்பாகவும் மிகவும் அண்மையில் நடந்தேறிய, தென் சூடானுக்கான ஐநாவின் மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிபராக அவர் ஆற்றிய பணிகள் தொடர்பாகவும் அவர் அங்கு மிகவும் அதிகமாகவே அறியப்பட்டிருக்கிறார். அதே வேளையில் போரில் பல குற்றங்களை இழைத்து தண்டிக்கப்படாதிருக்கும் இலங்கை அரசை எதிர்க்கும் ஒருவராகவும் சூக்கா இருந்து வருகிறார்.

சிறீ லங்காவில் 2009 இல் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில்

இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக,ஐ நா செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் ஏற்படுத்தப்பட்ட மூன்று நிபுணர்களைக் கொண்ட குழுவில் ஒருவராகப் பணியாற்றிய அனுபவத்தின் தொடர்ச்சியாக அவரது இச்செயற்பாடு அமைந்திருக்கிறது.

மேற்படி நிபுணர்கள் குழுவின் பணி நிறைவுபெற்ற பின்னரும் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் சூக்காவை தொடர்ச்சியாக அணுகி வந்ததன் காரணத்தினால் ”உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம்” என்று அழைக்கப்படும் அவரது அரச சார்பற்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

”ஐரிஜேபி”- ( International Truth and Justice Project – ITJP) என அழைக்கப்படும் இந்த அமைப்பு, யுத்தம் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியிலிருந்து இன்றுவரை சிறீலங்கா பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பாலியல் ரீதியிலான வன்முறைகளை மிகவும் குறிப்பாக ஆண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பாலியல் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது.

சிறீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போதும் அதன் பின்னரும் குற்றமிழைத்தவர்களை பொறுப்புக்கூறவைக்கும் கலப்புப்பொறிமுறை ஏற்படுத்தப்படாத ஒரு பின்புலத்தில்,பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை பன்னாட்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக,ஐரிஜேபி அமைப்பு தாம் மிகக்கவனமாக ஆவணப்படுத்திய சான்றுகளைப் பயன்படுத்திவருகிறது.

இலத்தீன் அமெரிக்காவில் இராஜதந்திர பணியில் அமர்த்தப்பட்ட சிறீலங்கா இராணுவத்தில் உயர்பொறுப்பை வகித்த முன்னாள் கட்டளை அதிகாரி ஒருவருக்கு எதிராகப் போர்க்குற்ற வழக்கைத் தொடுப்பதற்காக, 2017ம் ஆண்டில் ஐரிஜேபி அமைப்பு இலத்தீன் அமெரிக்க மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியது.

பிரேசில் நாட்டு நீதிமன்றங்கள் மேற்படி வழக்கை விசாரிக்க தமக்கிருக்கும் அதிகார வரம்பை உறுதிப்படுத்திய அதே நேரத்தில் சிலிய நாட்டு அரசு, மேற்படி வழக்கை விசாரிப்பதற்காக ஒரு வழக்குரைஞரை நியமித்தது. இவ்வாறு இலத்தீன் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக, இராஜதந்திரியாக மாறிய முன்னாள் இராணுவ அதிகாரி,தனது பாதுகாப்புக்காக சிறீலங்காவுக்குப் தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

2019ம் ஆண்டில்,அமெரிக்க சட்ட நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கலிபோர்ணியாவில் நட்டஈட்டு வழக்கைத் தொடுப்பதற்காக, சித்திரவதையால் சிறீலங்காவில் பாதிக்கப்ட்ட பதினொரு தனிநபர்களுக்கு இந்த ஐரிஜேபி அமைப்பு உதவியளித்தது. கோட்டாபய நாட்டின் அதிபராகத் தெரிவுசெய்யப்பட்ட போது, நாட்டின் அதிபர் என்ற வகையில் அவர் தண்டிக்கப்பட முடியாதவர் என்ற காரணத்தினால் மேற்படி வழக்கு தற்காலிகமாக வாபஸ்பெறப்பட்டது.

சிறீலங்காவிலருந்து ஐநா அமைதிகாக்கும் பணிக்கு செல்லும் இராணுவ வீரர்களைப் பரிசோதிக்கும் செயற்பாட்டை ஆதரிப்பதிலும் ஐரிஜேபி முன்னணியில் திகழ்கிறது. இதன் காரணமாக சிறீலங்காவைச் சேர்ந்த ஒரு கட்டளையதிகாரி மாலி தேசத்திலிருந்து தனது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

நிலைமாறுகால நீதி, இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம், பரிகார நீதி போன்ற விடயங்களில் யஸ்மின் சூக்கா,உலகளாவிய அளவில் நிபுணத்துவம் பெற்றவர்களில் ஒருவர் என்று அவருக்கான பன்னாட்டு ஆதரவை வெளிப்படுத்தும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும் தங்களது நாட்டில் நிலைமாறுகால நீதியையும் பொறுப்புக்கூறலையும் பாதிக்கிறது என்று சிறீலங்காவின் புலனாய்வு அதிகாரிக்கு ஆதரவான சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

சூக்கா மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது என்பது மட்டுமன்றி இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டுபவர்களின் குரல்களை அடக்குவதன் மூலம் மனித உரிமை தொடர்பான விடயங்களிலிருந்து விலகிச் செல்லும் மோசமான அரசியல் நோக்கத்தையும் இது வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.

குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்கும் கலாச்சாரத்தை பேணிப்பாதுகாக்க விரும்புவோர் வழமையாக மேற்கொள்ளும் ஒரு தந்திரமாகவே இது நோக்கப்படுகிறது.

பொறுப்புக்கூறல் தொடர்பாக சூக்கா ஆற்றிவரும் பணிதொடர்பாக அவருக்கு அளிக்கப்படும் அபரிமிதமான ஆதரவைப்பற்றியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் அளித்துவரும் மிக உறுதியான ஆதரவைப்பற்றியும் அவருக்கு ஆதரவாக எழுதப்பட்ட பல கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

சிறீலங்காவின் அரசதலைவர்கள்,வெளியே பார்ப்பதற்குப் பதிலாக இதயசுத்தியுடன் தம்மைத் தாமே ஆய்வுசெய்து சிறீலங்காவின் உள்நாட்டு யுத்தத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றும் லைபீரிய நாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட உண்மை மற்றும நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளராகப் பணிபுரிந்த ஜோண் ஸ்ருவேட் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

“எந்தவிதமான சேறுபூசும் பரப்புரையோ, தீய பிரச்சாரங்களோ அல்லது யஸ்மின் சூக்காவின் நடமாடும் சுதந்திரத்துக்கோ அல்லது அவரது உயிருக்கு விடுக்கப்படும் அச்சுறத்தல்களோ அவரது நம்பகத்தன்மையையோ அல்லது அவரது பணியையோ எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை” என்று ஸ்ருவேட் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி. மெவரிக் சிற்றிசன்: மனித உரிமைகள்

நன்றி – Sivavathani P