காலங்கள் கடந்து செல்கின்றன இன்றுவரை மறக்கமுடியாத கடந்தகால நினைவுகள் சில.

158

இருபது ஆண்டுகளுக்கு முன் மானிப்பாயில் இருந்து காரைநகர் வரை மக்களுக்கான சமூக அரசியலை மேற்கொண்டேன்.
முடிந்தவரை சரியான பாதையில் பயணிக்க முயற்சி செய்தேன்.குறிப்பாக சொல்வதென்றால் வலிகாமம் மேற்கு பிரதேச சபை.கிராமங்கள் சமூகம் சார்ந்த மக்கள் சார்ந்த ஒவ்வொரு செயல்பாட்டையும் ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு சிறு பிரச்சினைகளுக்கும் சரியான ஒரு முடிவை அடைய முடியும் என்ற எண்ணத்தில் பயணித்த காலம் அது.

அதிகமான கிராமங்கள் அதைவிட வர்த்தக சங்கங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்கள்.மகளிர் சங்கங்கள் சமய நெறி சார்ந்த அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் இன்னும் ஏராளமான அமைப்புகள் முக்கியமாக பாடசாலை கல்வி சார்ந்த துறை சார்ந்த அமைப்புகள் அனைவருடனும் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது பயணித்தேன்.

மக்கள் சார்ந்த தூய்மையான ஒரு அரசியலை கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது கனவு.அரசியல் என்பது போராட்டம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு அல்லது ஆக்ரோஷம் ஆர்ப்பாட்டங்கள் கோஷங்கள் என்பது அல்ல அன்று நான் புரிந்து கொண்டது மக்களின் பிரச்சினைகளை தேவைகளை மக்கள் இடத்திலிருந்து உணர்ந்து கொள்ள வேண்டும் அதை நோக்கி பயணிக்க வேண்டும்.எவர் ஒருவரையும் மனம் நோகும்படி பகைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்வதற்கு நான் விரும்பவில்லை.அனைவரையும் அவர்களின் மன நிலைமையில் இருந்து அனுசரித்து பயணித்தேன் அது எனது அரசியல் வாழ்வு.

ஒரு முறை பனிப்புலம் என்ற ஒரு கிராமத்தை அண்டிய ஒரு பகுதியில் சீவல் தொழில் செய்யும் ஒரு அண்ணா ஒருவர் 5 பயன் தரும் பனை மரத்தை வெட்டி சாய்த்து விட்டார்.அவரை சந்திப்பதற்காக அவரின் வீட்டுக்கு செல்கிறேன் தூரத்தில் என்னை கண்டதும் அவர் தனது வீட்டை நோக்கி ஓடியதை கண்டு கொண்டேன்.

சரி வீட்டுக்கு சென்று அண்ணாவை அழைத்த பொழுது அண்ணாவின் துணைவியார் தனது இரு குழந்தைகளுடன் வெளியே வந்து தம்பி அண்ணா கடைக்கு போய் விட்டார் என்று கூறினார்.அக்கா அண்ணா வீட்டுக்குள் தான் இருக்கிறார் நான் அவர் வீட்டுக்குள் நுழையும்போது கண்டுகொண்டேன் என்று இலகுவாக கூறினேன்.

அவரின் இரண்டாவது மகளை கையில் தூக்கி அவர்களின் வீட்டின் முன்னே இருந்த கட் குவியலின் முன் இருந்துவிட்டேன்.இப்பொழுது அண்ணா சிரித்துக்கொண்டே மெதுவாக வெளியே வருகிறார்.அவர்கள் என்னைப் பற்றி நினைத்தது வேறு அவர் வெளியே வந்ததும் நான் கூறிய வார்த்தைகள்.

ஐந்து பயன் தரும் பனை மரங்களை நீங்கள் அழித்து விட்டீர்கள் அதனால் தான் நான் இப்பொழுது வந்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும் ஆனால் நீங்கள் மனதில் நினைத்திருக்கும் என்னைப்பற்றிய எண்ணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும் அதை விடுவோம் இப்பொழுது. அவர் என்னை கண்டு வீட்டுக்குள் ஓடிய பொழுது எனக்குள் நான் எடுத்துக்கொண்ட முடிவு இதுதான் இதற்கு வழிமுறை என்று .

எனக்கு இப்பொழுது பசிக்கிறது கடுமையாக உங்கள் வீட்டில் என்ன இருக்கிறதோ அதை சமைத்து தாருங்கள் சாப்பிட்டு விட்டுதான் உங்கள் வீட்டை விட்டு வெளியேறுவேன்.முதல் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும் சரி தம்பி சமைத்து தருவேன் என்று அவர் சமையலை தொடங்கிவிட்டார் நான் அவரின் மனைவியிடம் மண்வெட்டி ஒன்றை வேண்டி அவர்கள் இருந்த இடத்தை சூழ்ந்து அதிகமான பனை மரக் கன்றுகள் இருந்தது அன்று.

ஐந்து சிறு பனை கன்றுகளை தேடி கொண்டு வந்து அவர்கள் வீட்டை சுற்றி ஐந்து கிடங்குகள் உருவாக்கி அனைத்தையும் நட்டு வைத்தேன்.
அப்பொழுது நன்பகல் வெயிலின் தாக்கம் ஒரு புறம் கலைப்பு ஒருபுறம் வியர்வை சிந்தி அனைத்து மரக்கன்றுகளையும் நட்டு விட்டேன்.அண்ணாவும் பக்கத்து கடைக்கு சென்று மீன் டின் வேண்டி கொண்டுவந்து மிகச்சிறந்த ஒரு சமையலை உருவாக்கிவிட்டார்.

களைத்துப் போயிருந்த எனக்கு அந்த உணவு மிக சுவையாக இருந்தது அதிகம் உண்டு மகிழ்ந்தேன்.ஆனால் ஐந்து பனைமரங்களை தரித்த அந்த அண்ணாவுக்கு அதிக வலிகளை ஏற்படுத்தி விட்டது எனது செயல்பாடு.
சாப்பிட்டு முடிந்ததும் கூறினேன் மேலும் பனைமரங்களை வெட்டுவதாக இருந்தால் முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள் என்று கூறினேன் அப்பொழுது அவர் கூறிய வார்த்தை தம்பி எப்பொழுதுமே எந்த ஒரு மரத்தையும் வெட்ட மாட்டேன் உருவாக்குவேன் கண்ணீர் மல்க கூறினார்.இப்படியான ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்றுதான் நான் அப்பொழுது அப்படி செயல்பட்டேன் வெற்றியடைந்த சந்தோஷத்துடன் அவர்களிடமிருந்து விடை பெற்றேன். பிறர் ஒருவரின் புரிதலுக்காக நாங்கள் வலியை சுமந்தால் தான் புரிய வைக்க முடியும் என்றால் நிச்சயம் சுமக்கத்தான் வேண்டும்.

பிரச்சனை தீர்வு என்பது ஒரு சொல்தான் அதன் பின்னிருக்கும் அளவுகோல் தான் வித்தியாசப்படுகிறது ஆனால் அனைத்தையும் சரியான முறையில் சமப்படுத்த முடியும் தீர்வு காண முடியும் சரியான முறையில் கையாளும் பொழுது தீர்வையும் பிரச்சனையையும் தீர்க்கும் முழுமையான எண்ணங்கள் எங்களிடம் தூய்மையாக இருந்தால்.

மானிப்பாய் சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் அம்மா ஒருவரை மறக்க முடியாது என்னால் என்றுமே. அப்பொழுது என்னிடம் இருந்த உடமைகள்.2 ஜீன்ஸ் 2 டீ சர்ட் 2 சேட் 2 உள்பனியன் இரண்டு உள்ள ஆடை. கையில் கட்டுவதற்கு ஒரு மணிக்கூடு
இரவு நித்திரை கொள்ளும் பொழுது கட்டுவதற்காக ஒரு சரம் இரண்டு சரம் இருந்தது ஒரு சரம் தொலைந்து விட்டது. இவைகள் தான் பிரதானமாக சொத்துகள் அன்று என்னிடம் இருந்தது.
இரவு தூங்கும் பொழுது ஒரு சாரத்தை கட்டிக் கொண்டு தூங்கினால் காலையில் அந்த சாரத்துடன் குளித்துவிட்டு அதை காயப்போட்டு பின்னர் இரவு வந்தது அதை கட்டிக் கொண்டு தூங்குவது வழமை.ஒரு துவிச்சக்கர வண்டி இருந்தது.ஒரு தேநீர் குடிப்பதற்கு கூட கையில் 10 ரூபாய் இருப்பதில்லை அப்பொழுது என்னிடம்.

அந்த அம்மா மானிப்பாய் கட்டுடை பகுதியைச் சேர்ந்தவர்.மானிப்பாய் சந்தையில் நீண்ட காலமாக மரக்கறி வியாபாரம் செய்பவர்.அவரின் அறிமுகம் கிடைத்ததில் இருந்து மானிப்பாய் பக்கம் சென்றால் அம்மாவை சென்று சந்திப்பேன் அந்த அம்மா என்னை சிறுது நேரம் நிற்கச் சொல்லிவிட்டு எனக்காக தேனீரும் வடையும் வேண்டி தருவார்.அந்த அம்மாவின் இரண்டு புதல்வர்கள் நாட்டுக்காக மரணம் அடைந்திருந்தார்கள் இருவேறு ஆயுத அமைப்புகளில் இருந்து.அன்றும் அந்த அம்மாவை சந்திக்க செல்லும்பொழுது தம்பி நாளை சந்தை இல்லை தம்பி என்று எனக்கு கூறினார்.நான் நகைச்சுவையாக கூறினேன் எனது பிறந்த நாளுக்காக உலகம் முழுதும் நான் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வு தந்துள்ளேன் நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று.தம்பி உங்களுக்கு நாளை பிறந்த நாளா என்று கேட்டார் நானும் ஓம் என்றும் கூறினேன்.
வழமைபோல் தம்பி நில்லுங்கள் தேனீர் வேண்டி வருகிறேன் என்று சென்றார் ஆனால் வரும் பொழுது எனக்காக எனது அளவுகள் தெரியாமல் ஒரு சேட் வாங்கி வந்தார் அருகில் இருந்த புடவை கடையில்.எனக்கு விபரம் தெரிந்த வயதிலிருந்து எனது தாயாரை நான் என்றுமே கட்டியணைத்து முத்தம் கொடுத்ததில்லை ஆனா அந்த அம்மாவை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தேன்.அடுத்த நாள் எனக்கு ஒரு சிறந்த பிறந்த நாளாக அமைந்தது கொக்குவில் பொற்பதி முகாமிலிருந்து இளம்பருதி அண்ணா என்னை அழைத்திருந்தார்.அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

-தரன் ஸ்ரீ-