காணது தேடிய விழிகள்

90

தாகத்திற்கு தண்ணீர்
எடுக்கச் சென்ற
என் தோழியவள்
எதிரியிடம் அகப்பட்டு
சின்னா பின்னமாகிய
தருணமதில்-அவள்
விறைத்த உடலை
மீட்ட கணப் பொழுதில்
என் உணர்வுகளை
சொல்லிட மொழியில்லை…!

காலையில் சென்றவளை
காணவில்லையென
தேடியலைந்த பொழுதில்
மாலை மங்கிய நேரமதில்
இறந்த அவள் உடல்
கண்டு….!!
என் இதயம் ஓர் கணம்
நின்று போனது
தொடுகையின் போது
சில்லென்ற அவள்
உடல் கண்டு
உள்ளம் உடைந்து
சுக்கு நூறாகியது…!!!

என்னோடு ஓன்றாக
ஓர் தட்டில் உணவுண்ட
என் தோழி
உயிரற்ற உடலாக
குண்டு துளைத்த
காயங்களும்
சிகரட் சூட்டுக்காயங்களுடன்
வெயிலில் வாடி
கருமையாயும்
உருக்குலைந்த
அவள் முகம்
என்னுள் ஏதோ
மாற்றங்கள்
உணர்வுகள்
மன வேதனையில்….!!என் தோழி
உனக்கா இந்த நிலை
கண்ணீர் என்னையறியாமல்
கன்னம் வழியே
உருண்டோட…!
தொட்டுத் தூக்கி
என் தோளில் சுமந்தேன்
உயிரற்ற அவள் உடலை…!

எதிரியிடம் அகப்படாமல்
என் தோழியை
மீட்டதில்
மனம் திருப்தியுடன்..!
பாட்டு பாடி ஆடி
மகிழ்வித்த துடிதுடிப்பான
தோழியவள்
அவள் கனவுகளை
சுமந்தபடி
நடக்கின்றேன்
நாளை அவள் கனவு
நனவாகும் என்ற
நம்பிக்கையில்…!

அழகாக பாடல்
பாடி மகிழ்விப்பவள்
அன்று என் தோளில்
அசைவற்று கிடந்தாள்
இசைச்சிட்டாக….!
இசைமறைந்தாள்

காலங்கள் கடந்து
யுத்த மௌனிப்பின்
மாறாத வடுக்களுள்
அன்னிய தேசமதில்
கலைந்த கனவுகளுடன்
நான் இன்று…!
Sajee.k