நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்கு வங்கியிலும் பிரதிநிதித்துவத்திலும் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.
அதேநேரம் எமது கொள்கைகளையும், நேர்மையான அரசியல் செயல்பாடுகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள், என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட வருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 வருடங்களாக எமது மக்கள் மத்தியில் உண்மையாக மேற்கொண்ட தெளிவுபடுத்தல்களும் கொள்கை ரீதியிலான அடிபணியாத அரசியலுக்கும் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. இவ்வாறான நிலையில் ஒற்றுமையான செயல்பாடும் என்ற பெயரில் பின்னடைவுகளை மறைத்து சுயலாப அரசியல் தக்கவைத்துக் கொள்வதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடகமாடுகின்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் தமிழ்தேசிய பரப்பில் உள்ள ஏனைய தரப்பினருடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்த நிலையில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..
தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இருப்பினும் அதில் இருப்பவர்களால் தனிநபர் சார்ந்த செயல்பாடுகளால் தான் பிளவுகள் ஏற்பட்டன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் பல்வேறு முயற்சிகள் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்பட்டன ஆனால் அப்போது கூட்டமைப்பு அனைத்தையும் முடக்கியது.
சரி அந்த வரலாற்றை நாம் விடுவோம் மிக அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது சிங்கள மக்கள் தமது தெரிவை சிங்கள பேரினவாத சித்தார்த்தனை மையப்படுத்தி தீர்மானித்து விட்ட நிலையில் தமிழ் மக்களின் இருப்பினும் பாதுகாப்பினையும் அடிப்படையாக வைத்து தமிழ்த் தரப்புகள் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்து மேலெழுந்தது. பல்கலைக்கழக மாணவர்களால் அதற்கான முயற்சி எடுத்தார்கள்.
அந்த சமயத்தில் நாங்கள் எந்த ஒரு நிபந்தனைகளும் இன்றியே பங்கேற்றோம். நியாயமான நிபந்தனைகளை முன் வைக்க வேண்டும் என்பதையே ஒரே இலக்காக கொண்டு செயற்படும் ஏனைய தமிழ்த் தரப்புகள் ஒன்று இணைந்து தயாரித்த நிபந்தனைகளை நாம் ஒவ்வொன்றாக வலுப்படுத்தினோம்.
அச் சமயத்தில் தான் ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நான் கோரிக்கையை முன்வைத்தோம். தமிழரசுக் கட்சி ரணிலுடன் இணைந்து தயாரித்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை அவர்களே நிராகரிப்பது என்பது சங்கடமான விடயம். அதனால் அவர்கள் அதற்கு உடன்படவில்லை அதில் நியாயம் உள்ளது.
ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளோட் ரெலோ ஈபிஆர்எல்எப் விக்னேஸ்வரன் ஆகியோர் அறிக்கை வெளியானதும் அது ஒற்றையாட்சியை அசியொற்றியது என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார்கள். அத்தகையவர்கள் நாம் முன்வைத்த நியாயத்தை எடுத்துக் கொள்ளவில்லை ஆகக்குறைந்தது ஆதரிக்கவும் இல்லை அமைதியாக இருந்தார்கள். அதனால்தான் நாம் அந்த நிபந்தனையில் கையொப்பம் இடுவது தவிர்த்து வெளியேறினோம்.
தமிழ் அபிலாசைகளை ஒரு நாளும் ஒற்றையாட்சிக்குள் வென்றெடுக்க முடியாது ஆனால் தமிழரசுக் கட்சி அதனையே செய்யவிளைந்தது. அதேபோன்று தான் ஜெனிவா விடயத்திலும் நடந்துகொண்டது.
இப்படியான நிலைமைகள் காணப்படுகின்றன என்பதை நாம் எமது மக்களுக்கு படிப்படியாக எடுத்துக்கூறி தெளிவுபடுத்தினோம். எமக்கான தேசம் அவசியம் என்பதையும் இனப்படுகொலைக்கான நிதியை பெறுவதற்கான முறைகளையும் சுட்டிக்காட்டினோம். கூட்டமைப்பு விடுகின்ற அனைத்து சுத்துமாத்து விடயங்களையும் பகிரங்கப் படுத்தினோம்.
எமது அரசியல் கோட்பாடுகளுக்கு அமைவாக நாம் நேர்மையாக செயற்பட்டோம் அதன் பிரதிபலிப்பு தற்போது மக்கள் ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள் ஒரு தசாப்த போராட்டத்திற்கு கிடைத்த ஒரு முதற்கட்ட வெற்றியாகவே இதை நாம் பார்க்கின்றோம். அவ்வாறான நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது வாக்குவங்கி மிகவும் மோசமான நிலையில் உள்ளது பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறான நிலையில் கொள்கையில் இருந்து விலகியதாலேயே தமக்கு பின்னடைவுகள் ஏற்பட்டது என்பதை எல்லாம் ஒட்டுமொத்தமாக மறைப்பதற்காக தற்போது ஒற்றுமையாக தமிழ் மக்கள் சார்ந்து பாராளுமன்றிலும், வெளியிலும் செயற்படுவோம் என்று அழைப்பு விடுக்கின்றார்கள். இது ஒரு அரசியல் நாடகம் ஆகும். ஆகவே எமது மக்கள் அளித்த வாக்குகளை மறந்து அவர்களுக்காக நாம் வழங்கிய வாக்குறுதிகளை கைவிட்டு கூட்டமைப்பின் பின்னால் சென்று மீண்டும் ஒரு தடவை ஏமாறமுடியாது. எமது மக்களையும் ஏமாற்ற முடியாது. ஆகவே அவர்கள் எவ்விதமாக நடந்து கொள்கின்றார்கள் என்பதை கவனத்தில்கொள்ளவேண்டியிருக்கின்றது. அத்துடன் அவர்கள் எமது கொள்கைகளை ஏற்று இணைந்து செயல்படுவதில் எமக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை என்றார்.