திலீபன் நினைவேந்தல் அச்சுறுத்தும் பொலிஸார் – சபையில் கஜேந்திரன்!

49

மட்டக்களப்பு மாவட்டத்திலே பொலிஸ் பொறுப்பதிகாரி (எஸ்.எஸ்.பி) ஒருவர், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் குணராசா குணசேகரனை அழைத்து, திலீபனுக்கு நினைவேந்தல் செய்தால் உனக்கு நினைவேந்தல் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என்று அச்சுறுத்தியிருக்கின்றார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கிலே எங்கள் உரிமைக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர முடியாது என்று நீதிமன்றம் ஒன்று கட்டளையிட்டிருக்கின்றது. அதேபோன்று வவுனியா வடக்கு நெடுங்கேணியிலே வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் திருவிழா நடத்துவதற்கு நிர்வாகம் முயன்றபோது பொலிஸார் வலிந்து சென்று அதனைத் தடை செய்யுமாறு வழக்குத் தாக்கல் செய்தார்கள். திருவிழாவை நடத்தமுடியும் அதனைத் தடுக்கமுடியாது என்று அங்கே நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் நீதிமன்றத்தின் கட்டளையை மீறி நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் திருவிழாவை நடத்தவிடாது குழப்பிக்கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனால் எங்களுடைய நினைவேந்தல் விடயத்திலே நீதிமன்றம் சொன்னதை அவ்வாறே கடைப்பிடித்து வீடுகளில் சாமிக்கு கூட பூவைக்க முடியாத அளவிற்கு பொலிஸாரின் கெடுபிடிகள் உச்ச அளவில் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலே பொலிஸ் பொறுப்பதிகாரி (எஸ்.எஸ்.பி) ஒருவர், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் குணராசா குணசேகரனை அழைத்து, திலீபனுக்கு நினைவேந்தல் செய்தால் உனக்கு நினைவேந்தல் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் என்று அச்சுறுத்தியிருக்கின்றார். எங்களுடைய உரிமைகளுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதற்காக நாங்கள் தொடர்ச்சியாக குரல்கொடுத்துக்கொண்டே இருப்போம். உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நினைவேந்தலுக்காக நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்போம் என்று தெரிவித்த கஜேந்திரன்,

மட்டக்களப்பு மாவட்டம் பன்குடாவெளியியே அம்பே பிட்டிய சுமணரத்தின தேரர் அரச உத்தியோகத்தர்களை அடித்து அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கின்றார். அவர் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும். அங்கே அவருடைய செயற்பாடுகள் தமிழர்களுடைய பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்துகொண்டிருக்கின்றது என்றும் மேலும் தெரிவித்தார்