தமிழ் அரசு – முன்னணி தொலைபேசி உரையாடல் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்கிறது முன்னணி!

86

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கான தொலைபேசி உரையாடலை அடுத்து இன்று நடைபெறும் கூட்டத்தில் முன்னணி கலந்துகொள்ளும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையைகூட மறுதலிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுகூடி நேற்று ஆராய்ந்தன. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை. மாவை சேனாதிராஜா அவர்கள் தொலைபேசி ஊடாக கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரனுக்கு அழைப்பு எடுத்தபோதும் அவர்கள் பதிலளித்திருக்கவில்லை எனப் பதிலளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முக்கியஸ்தரும் தனது மகனுமான கலையமுதன் ஊடாக கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். எனினும் தமக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று முன்னணியின் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை கஜேந்திரகுமார் மற்றும் மாவை.சேனாதிராஜா ஆகியோர் தொலைபேசியில் உரையாடியதை அடுத்து இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தை இறுதி செய்யும் கூட்டத்தில் முன்னணி கலந்துகொள்ளும் என கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

இன்று காலை 10 மணியளவில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா மற்றும் சிவஞானம் ஆகியோர் கடிதத்தின் வரைபை தயாரிப்பார்கள் என்றும் காலை 11 மணியளவில் கட்சிகளின் தலைவர்கள் அங்கு கூடி, கடிதத்தை ஆராய்ந்து, மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை செய்து, ஜனாதிபதி, கோட்டாபயவிற்கு அனுப்பி வைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடிதத்திற்கான பதில் மூன்று நாட்களினல் கிடைக்காவிட்டால் கட்சியின் தலைவர்கள் எதிர்வரும் 23ந்திகதி ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்துள்ளது.