மணி எனக்கு தம்பி போன்றவன் ஆனால் கொள்கை விடயத்தில் விட்டுக்கொடுக்கமுடியாது!
கனடாவின் சிஎம்ஆர் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் நடைபெற்ற நிர்வாக மாற்றம் தொடர்பாக விளக்கிய அதன் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இதனை தெரிவித்தார்.
அவர் அவ் ஊடகத்திற்கு மேலும் தெரிவிக்கையில்..
2015 நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியை தளுவியபோது, விரக்தியில் எமது கொள்கைகளை விமர்சித்தார் மணிவண்ணன். ஆனாலும் தோல்விச்சுமையில் எழும் விசனமாக கொண்டு அவராக ஒதுங்கியிருந்தபோதும் மீளவும் அவரை அரவணைத்து பயணித்தோம்.
தமிழருக்கான அரசியல் விடுதலை என்பது இலங்கைத்தீவுக்குள் மட்டும் முயற்சி செய்து பெற்றுக்கொள்ளமுடியாது. பூகோள அரசியலையும் கையாண்டு காலச்சூழலுக்கு ஏற்றவாறு சில நகர்வுகளை எடுக்கவேண்டும். அதன் ஒரு வழியாகவே ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் முடிவுகளை சிலவேளைகளில் எடுக்கவேண்டிவரும். ஆனால் அப்படியான சந்தர்ப்பங்களில் தளம்பலான நிலைப்பாடு கொண்டவராக மணிவண்ணன் இருந்தார்.
ஆனாலும் தேர்தல் வெற்றி என்பதற்காகவே தளம்பல் இருக்கின்றது ஆனாலும் கொள்கையில் இறுக்கமாக இருப்பார் என எண்ணியே பெருத்த வெற்றி ஒன்று வரும் பட்சத்தில் நான்கு வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுகின்ற நிலையில் மணிவண்ணனும் பலமாக மாறுவார் என எண்ணினோம்.
ஆனால் தேர்தல் காலப்பகுதியில் மீளவும் சில சிக்கல்கள் எழுந்தன. கடந்த பத்து வருடத்தில் பல தோல்விகளை சந்தித்தபோதும் தெளிவான சரியான கொள்கையில் பயணிக்கின்றோம் என்ற திருப்தியே இருந்தது. ஆனால் அதனை கேள்விக்குட்படுத்தும் நிலை வந்தால் எம்மால் தொடர்ந்து செயற்படமுடியாது. எனவேதான் இறுக்கமான முடிவை எடுக்கவேண்டிவந்தது.
விருப்பவாக்கு என்பது ஒரு பிரச்சனையே இல்லை. எங்களை விட சுகாஷ் கூட அதிகமான வாக்குகளை பெறக்கூடியவர். எனவே அதனை இங்கு ஒப்பிடவேண்டாம். மணிவண்ணனை தம்பியாக அரவணைத்து சென்றோம். அந்த உறவு இன்றும் இருக்கின்றது. ஆனால் கொள்கையில் தடுமாறமுடியாது என அந்த ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனைத் தெரிவித்திருந்தார்.