இன்றைய நாளினை எத்தனை யாழ்ப்பாணத்தார் மறந்துட்டீர்களோ என்னமோ நான் மறக்கவில்லை. அவ்வளவு கனதியான நாளை எங்கனம் மறப்பது?
ஆம், யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை மூடப்பட்ட நாள்; இந்த நிமிடமெல்லாம் ‘அடுத்து என்ன நடக்குமோ என்று பதறியபடி இருந்த நாட்கள்.அப்பொழுதுதான் A/L படித்துக்கொண்டிருந்தேன். 37mm ஆட்லறி உந்துசெலுத்திகள் அடுத்தடுத்து பலாலிப் பக்கமாகக் இயங்குவது கேட்டது. அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தெற்குக் கரையெங்கும் இராணுவத்தின் மோட்டார் மற்றும் பல்குழல் உந்துசெலுத்திகள் அதிரத்தொடங்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முன்னேற்பாடாக வீட்டிலிருந்த சிறிய வானொலிக்கு மூன்று மின்கலங்கள் வாங்கிவந்துவிட்டேன்.
“வடபோர்முனை முகமாலை முன்னரங்கில் ஸ்ரீலங்காப் படையினர்மீது தமிழீழ விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதலை மேற்கொண்டு முன்னேறிச் செல்கின்றனர்” என்ற செய்தி புலிகளின் குரல் வானொலியில் ஜனனி அக்காவின் கம்பீரமான கணீர் குரலில் ஒலிக்கிறது. மனத்திலே பதட்ட அலைகள் சூழ்ந்துகொண்டாலும் புது உற்சாகம் தோன்றி இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திக்கொண்டேயிருந்தது.
இருள் சூழ்ந்த அந்த இராப்பொழுதில் மழையற்ற தெளிந்த வானமாகத் தோன்றினாலும் மின்னலும் இடிமுழக்கமும்போல் வெடியின் ஒளியும் ஒலியும் சேர்ந்து பலத்த களேபரம் செய்துகொண்டிருந்தன! இலண்டன் பீ.பீ.சீ வானொலியில் அன்பரசனின் செய்தி சொல்லும் குரல் ஏற்ற இறக்கங்கள் புது மிடுக்கைக் கொடுத்தது.
அன்றிலிருந்து யாழ்ப்பாணத்தை ஏழரைச்சனி ஆட்டிப்படைக்கத்தொடங்கியது. அரிசி மா சீனி என அனைத்தினது விலைகளும் மலையேறிவிட்டன; சங்கக் கடைகளில் வரிசை வாழ்க்கை தொடங்கியது; ஊடரங்கு அமுலாகியது; வீதியெங்கும் ஆமிக்காரன்களின் குருட்டுத்தவம்; முதுகுக் கூச்சத்தோடு அவர்களைக் கடந்துபோவது; இதையெல்லாம் விட படுகொலைப் படலமும் ஆரம்பமாகியது. தமிழ்த் தேசியத்தை நேசித்த அத்தனைபேரும் தேடித்தேடிச் சுடப்பட்டார்கள். கிளைமோர் என்ற காத்திருப்பு வெடி அறிமுகமானது. இப்படி ஏராளம் ஏராளம் அவலங்கள்! இந்தப் பொருள் தட்டுப்பாட்டுக்குள் நாம் முடங்கிக்கிடந்தும் பணக்காரன் ஏழை என்கிற பேதமில்லாமல் அனைவரும் வறுமையை அனுபவித்து வாழ்ந்து சீவித்தது அதிசயமே. உழவு செய்வது எவ்வளவு பெரிய உயர்ந்த காரியம் என்பதை வீட்டில் இருந்த நெல்லு மூட்டைகள் உணர்த்தின. பலநாட்கள் பச்சையரிசியே கைகொடுத்தது. சிவப்புக் குத்தரிசி சாப்பிட்ட வயிற்றிற்கு பச்சையரிசி அவ்வளவு தாக்கத்தைக் கொடுக்கவில்லையாயினும் கடல் மார்க்கமாக வந்த சம்பாவும் கோறாவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
யாழ்ப்பாணத்தைப் புலிகள் கைப்பற்றிவிடுவார்கள் என்றே எல்லோரும் நம்பியிருந்தோம். ஆனால் முகமாலையை உடைத்துக்கொண்டு எழுதுமட்டுவாழ் வரை முன்னேறிய புலிகளுக்கு மிருசுவில் படைத்தளத்தின் எறிகணைத்தளம் பாரிய இடைஞ்சலாகியது. அதேபோல் குடாநாட்டின் தென்மேற்கு வழியாக மண்டைதீவின் ஊடாக முன்னேறிய புலிகளின் ஈரூடக அணியினர்க்கு யாழ் நகரப் படையினர் மற்றும் பரந்த தீவுக்கூட்டங்களில் இருந்த படையினரின் எதிர்ப்பு பாரிய சவாலாகியது. இதனால் இருவழிகளிலும் முன்னேற மேற்கொண்ட முயற்சியைத் தந்திரமாகக் கைவிட்டு பழைய நிலைகளைப் பலப்படுத்திவிட்டார்கள்.
ஆரம்பத்தில் வன்னிப் பிரதேசத்தை யாழ்ப்பாணப் படையினரே கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. வடபோர்முனையில் முகமாலையூடாக முன்னேறி புலிகளிடம் இழந்த ஆனையிறவைக் கைப்பற்றி அதில் பாரிய பீரங்கித் தளத்தினை அமைத்துவிட்டு அதன் சூட்டாதரவோடு முன்னேறலாம் என்பதே படையினரின் கனவாக இருந்தது.
ஆனால் முகமாலை, பளையின் புவியியல் தரைத்தோற்றமும் புலிகளின் வடபோர்முனைக் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் தீபனின் போரியல் சாதுரியங்களும் படையினரை இம்மியும் நகரவிடவில்லை. இந்த புவியியல் தரைத்தோற்றத்தை போரியல் ரீதியில் நன்கு அறிந்துவிட்டே அதில் தமது நிலைகளைப் பலப்படுத்தி நம்பிக்கையுடன் யாழ்ப்பாணப் படையினரோடு 2002இல் சமாதானக் கைகுலுக்கினார்கள் புலிகளின் முக்கிய தளபதிகள். இதனால் பலமுறை முன்னேற முயன்றும் பலத்த இழப்புகளைப் படையினர் சந்தித்தனர்.
வடபோர்முனையின் புவியியல் செல்வாக்கை நிலைப்படுத்திய புலிகள் தெற்கிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்பார்க்கவில்லை. படையினர் வன்னியில் அகலக் கால் பதித்தபோதும் புலிகளால் ஊடறுப்புச் சமர் புரியமுடியாமற் போனதுதான் பல படைத்துறை ஆய்வாளர்களையும் திகைப்படைய வைத்த விடயம். பரந்த பரப்பில் அகலக்கால் பதித்தல் என்பது பதுங்கித் தாக்கும் கொரில்லா அணியினர்க்கு சாதகமானதாகவே இருக்கும்.
பரந்தனை படையினர் கைப்பற்றும்வரை முகமாலையில் ஒரு துண்டு நிலமும் படையினரால் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் புலிகள் தாமாகவே அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.அன்றிலிருந்து நம்பிக்கைகள் தளரத்தொடங்கின. ஆனால் பெருத்த அழிவோடு முள்ளிவாய்க்காலில் அந்த மிகப்பெரிய விடுதலைப் பெருந்தீ அணைந்துபோகும் என்பது இன்றுவரை நம்பமுடியாத ஒன்றாகவே உள்ளது.