ஒரு கோப்பையிலேயே என் குடியிருப்பு..கண்ணதாசன் நினைவில்

172

புலவர் ஒருவர் தன் வாழ்க்கைத் துணையை இழந்தபோது அவர் புலம்பிய புலம்பலே ஒரு பாடலாக உருவெடுத்தது. (சிலபேர் பொண்டாட்டி செத்தால் அப்பாடா என்று சந்தோஷப்படுவார்கள். புலவர் பாவம் நல்ல மனிதர் போலிருக்கிறது)

அந்தப்புலவர் அவரது பாடலில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்.

‘அமுதம் போன்ற இனிப்பான அடிசில் உணவை சமைக்கும் என் அன்புக்குரியவளே. என் வார்த்தையை மீறாத வஞ்சியே. நான் தூங்கிய பின் தூங்கி, நான் விழிப்பதற்கு முன் விழிப்பவளே. இன்று நீ ‘உறங்கி விட்டாய். இனி என்னுடைய கண்கள் இரவில் எப்படி உறங்கும்?’ என்று புலம்புகிறார் அந்த புலவர்.

அந்தப் பாடல் இதோ.

‘அடிசிற்கு இனியாளே அன்புடையாளே

படிசொல் தவறாத பாவாய் – அடிவருடிப்

பின்தூங்கி முன்னெழும் பேதையே போதியோ

என்தூங்கும் என்கண் இரா’

இந்தப் பாடலைத்தான், பாலும் பழமும் (1961) படத்தில், ‘பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவழவாயில் புன்னகை சிந்தி கோலமயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே’ என்ற பாடலில் கவித்துவமாகப் பயன்படுத்திக் கொண்டார் கவியரசர் கண்ணதாசன்.

‘உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே, உறங்க வைத்தே விழித்திருப்பாயே. கண்ணை இமை போல காத்திருப்பாயே காதல் கொடியே கண்மலர்வாயே’ என்பதெல்லாம் அந்தப் பாடலின் வரும் இதர இனிப்பான வரிகள்.

‘ஈன்ற தாயை நான் கண்டதில்லை. எனது தெய்வம் வேறெங்கும் இல்லை. உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன் உதயநிலவே கண்துயில்வாயே’ என்பதெல்லாம் வேற லெவல்.

இன்று கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள். வாழ்த்துவோம். வணங்குவோம்.

நன்றி – மோகன ரூபன்