விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலில் காவியமானவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி ‘கப்பல் கப்டன்’ லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 போராளிகளின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
எமது விடுதலைப் போராட்டத்திற்கு அடி நாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களை கொண்டுவந்து சேர்க்கவும். அடக்கு முறையாளர்களின் தடைகளால் அல்லலுறும் எம் மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவந்து கரை சேர்க்கவும் என கடற்புலிகளின் கப்பல்கள் வையப்பரப்பிலுள்ள கடலெல்லாம் சென்று வந்தன.
“வெளியே தெரிந்ததுமாய் உள்ளே மட்டும் அறிந்ததுமாய்” அளப்பெரிய பணிகளை இந்தக் கடலோடிகள் செய்து முடித்தனர்.
உயிரைக் கூட துச்சமாக மதித்து சர்வதேசக் கடற்பரப்பின் விரிப்பில் ஒர்மமுள்ள எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள் முலமே எம் விடுதலைப் போராட்டம் எவராலும் அணைக்கமுடியாத பெரும் தீயாக முளாசி எரிகின்றது.
எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் கடற்புலிகள் ஆற்றிய சாதனைகள் கால வரலாறாக விளங்கும்.
இந்த மானமறவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”