அந்த நிலத்தில் கருவுற்றது குற்றமா?

191

அந்த நிலத்தில் நின்று கருவுற்றதற்காக
ஒரு பெரும் தண்டனையை
திணித்திருக்கிறீர்கள்
அந்த நிலத்தின் மீது நாங்கள் கொண்ட நேசத்திற்காக
கருவறைகளுக்குள் கத்தி பாச்சுகிறீர்கள்
அந்த நிலத்தில் நாங்கள் நடந்ததற்காக
எங்கள் விலைமதிப்பற்ற மானத்தை
தாரைவார்க்கப் பணிக்கிறீர்கள்

உங்கள் சுயலாபங்களை
உங்கள் பகட்டு அரசியலை
உங்கள் பாழ்பட்ட தேசத்தின் இறையாண்மையை
எங்கள் கண்ணீர் ஊற்றி வளர்க்கிறீர்கள்

பாவங்களின் மேட்டில்
அமர்ந்தபடி நீங்கள்
உங்களை உயரத்தில் வைத்ததாய்
எண்ணலாம்
ஆனால் சாபங்களின் புதைகுழி
உங்களை ஒருபோதும்
தவறவிடப்போவதில்லை
அதர்மிகளே……!

அனாதியன்