சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில் (185-193) காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகச் சிறப்பு மற்றும் ஈழம்பற்றிய குறிப்பு
காவிரிப்பூம்பட்டினம் பண்டைய தமிழ் நாட்டிலிருந்த முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந் நகரம், காவேரிப் பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப் பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு
நீரின் வழியாக வரப்பெற்ற உயர்வகை குதிரைகள், நிலவழியாகக் கொண்டு வரப்பட்ட மிளகு, வடக்குமலைகளிலிருந்து தருவிக்கப்பட்ட அரிய வைரக்கற்கள் மற்றும்பொன், மேற்கு மலைகளில் கிடைக்கின்ற சந்தனம் உள்ளிட்டவாசனைப் பொருள்கள் தென்கடல் முத்து, கீழைக் கடல்பகுதியிலிருந்து பெறப்படும் பவளம், கங்கை மற்றும் காவிரியின்வளத்தால் பெறப்பட்ட பொருள்கள், ஈழத்திலிருந்து உணவுவகைகள், காழகத்தில்(மியான்மார்) உற்பத்திசெய்யப்பட்டவை, பிற இடங்களிலிருந்து வந்து இறங்கியஅரிய மற்றும் பெரிய பொருள்களும் இத்துறைமுகம் வந்துசென்றதை அறிவதிலிருந்து இங்கு உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு வணிகச் செயல்பாடுகள் உச்சநிலைபெற்றிருந்ததை அறியமுடிகிறது.