
அண்மையில் சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்ட என் இரண்டாவது கவிதை தொகுப்பு “காலம் நெய்த காரிகை” நூலுக்கு அருமை அண்ணா பாடலாசிரியர் Palani Bharathi வழங்கிய அணிந்துரை ❤️
//காலப் பயணமும்
கவிதை மொழியும் …
-கவிஞர், பாடலாசிரியர் பழநிபாரதி
‘சொல்லாத சேதிகள்’ என்கிற ஒரு சிறு கவிதைத் தொகுப்புத்தான் எனக்கு ஈழத்துப் பெண் கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. அது பதினொரு கவிஞர்களின் இருபத்தைந்து கவிதைகள் அடங்கிய தொகுப்பு. அந்தக் கவிதைகள் மண்ணின் விடுதலையும் பெண்ணின் விடுதலையும் ஒருசேர விதைத்தவை. அதன் பிறகு அனார், பஹீமா ஜகான், தமிழ்நதி போன்ற பல கவிஞர்கள் வாசிக்கக் கிடைத்தார்கள். அ. மங்கை தொகுத்தளித்த ‘பெயல் மணக்கும் பொழுது’ ஈழத்துப் பெண் கவிகள் குறித்துப் பெருங்கவனத்தை ஏற்படுத்தியது.
‘காடு மலை யாவும்
சுற்றித் திரிந்தது போதும்
காற்றைச் சிறைபிடித்துக்
கடிவாளம் நான் செய்திடவே
கூடாதா?
ஆக்கிக் கொட்டு
அவித்துக் கொட்டு
ஆசை வந்ததும்
அவிழ்த்துக் காட்டு
பிரபஞ்ச விதியை நான்
பிய்த்தெறியக் கூடாதா?’
கீதா மோகனின் வரிகள் மேற்சொன்ன பெண்கவிகளின் தலைமுறைத் தொடர்ச்சியாக அவரைத் தொடர வைக்கிறது. இது ஒப்பீடு இல்லை; அவருக்கான திசையைக் கவனப்படுத்துதல்.
‘எனக்கு –
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில் –
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன’
இப்படித் தொடங்கும் அ. சங்கரியின் கவிதையொன்று
‘கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்’
என்று முடியும்.
கீதா மோகனின் பெரும்பாலான கவிதைகளும் பெண்களைச் சதைக்கோளமாக பார்க்கின்ற துயரத்தின் வலிகளையே பேசுகின்றன.
‘சந்தையின் சந்தடியில்
ஏதோ ஒரு கை என் மார்பை
அழுத்திப் பின் விடுவிக்கிறது
பேருந்துப் பயணத்தில் இன்னுமோர் கை
என் பிட்டம் பிசைகிறது
திரும்பிப் பார்க்கிறேன்
எந்த முகத்திலும்
ஏதும் சலனம் இல்லை
அவன் யாரென அக்கூட்டத்தில்
ஆராய்ந்து திரிய எனக்கு நேரமுமில்லை’
திரும்பிப் பார்க்கிறேன் / எந்த முகத்திலும் / ஏதும் சலனமில்லை… என்கிற வரி, சமூகத்தின் பாரா முகத்தின் விழிகளைப் பிடுங்கியெறிகிறது.
ஆனால், காதலின் கண்கள் அழகானவை; அவற்றின் பிரபஞ்ச தரிசனங்கள் பேரழகானவை; நிலவூறித் ததும்பும் அழகில், கண்ணீரை நட்சத்திரங்களாக ஆக்குபவை.
‘இப்படியே என்னைப் பார்த்திடு
அது போதும் – கண்வழிக் காதலில்
இருக்கும் போதை தொடுதலில்
இருக்காது
உன் ஈரப் பார்வையில்
நான் காலப் பயணம்
செய்கிறேன்’
கீதா மோகனின் மலரினும் மெல்லிய வார்த்தைகள் இவை. இந்தக் கண்களின் ஒன்றுபடுதலில்தான் வாய்ச் சொற்களுக்கு எந்தப் பயனும் இல்லாமல் போய்விடுகிறது என்கிறான் ஆகச் சிறந்த காதலனான அய்யன் வள்ளுவன்.
காதலை அத்தனை மென்மையாகச் சொல்கிற கீதா மோகன், காதலின் தோல்வியை, துரோகத்தை, துயரார்ந்த தனிமையைப் பேசுகிறபோது…
‘சில நினைவுகள்
வந்து வந்து போகின்றன
அருவருக்கச் செய்கின்றன
தட்டித் தட்டி விடுகிறேன்
கலைந்து கலைந்து
மீளவும் உருப்பெறுகின்றன
இம்முறை அது பல மடங்கு
அசிங்கமாக அரூபம் கொள்கின்றன’
என்கிறார்.
இலங்கைக்குப் பிற நாடுகள் அளித்த இராணுவ உதவிகளோடும் சர்வாதிகார சூழ்ச்சிகளோடும் சிங்களப் பேரினவாதிகளான ராஜபக்சேவும் அவரது சகோதரர்களும் நடத்திய தமிழினப் படுகொலையை வரலாறு ஒருபோதும் மறக்காது; மன்னிக்காது.
அதிகாரத்தையும் ஆடம்பர வாழ்வையும் தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த மக்களை இனம் பிரித்து ஆண்டார்களோ அந்த மக்களே ஒன்றிணைந்து அந்த அரச பயங்கரவாதிகளை ஓட ஓட விரட்டினார்கள்.
2022 ஆம் ஆண்டு இலங்கை பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தபோதுதான் மக்கள் அந்த சூழ்ச்சியை அடையாளம் கண்டு கருவறுத்தார்கள். பாசிசத்தால் பிரிக்கப்பட்ட இனங்கள் பசியால் ஒன்றுபட்டன.
கீதா மோகனின் சில கவிதைகளிலும் இந்த வரலாற்று நிகழ்வுகள் தடம்பதித்திருக்கின்றன.
‘நாட்டைத் துண்டம் துண்டமாக்கி
சீனாவுக்குத் தாரை வார்த்திருந்தாய்
இன்று சொந்த மக்கள் வயிற்றில்
கள்ளிப் பாலை வார்க்கிறாய்
புத்தனும் இன்றிருந்தால்
ஏதோ ஒரு வரிசையில்
சந்தித்திருக்கலாம்
கையில்
மண்ணெண்ணெய்க் கேனோடும்
ஒரு துண்டு பன்னோடும்’
கவிதையை ஆறுதல் மொழியாக வைத்திருக்கிற கீதா மோகன் இன்னும் இன்னும் இயங்குதல் வேண்டும். தமிழில் பெண்களின் கவிதைகள் இன்று பல உன்னதங்களையும் உயரங்களையும் அடைந்திருக்கின்றன. எழுத எழுதத்தான் அந்தக் கவிநுட்பங்கள் கைகூடி வரும். எழுதுங்கள் கீதா மோகன்.
என்றென்றும் அன்புடன்
கவிஞர், பாடலாசிரியர்
பழநிபாரதி
போரூர்
சென்னை: 600116
* * * * * * * * * * * * * * * * *
(நூலைப் பெற: +919840696574
Emerald Publisher
இதுக்கு 280 Rs Gpay பண்ணுங்க
அதே நம்பர்ட வாட்சப்புக்கு
புக் பெயரும் (காலம் நெய்த காரிகை) + விலாசமும் + payment screenshot வாட்சப் செய்க)