மாற்றம் ஒன்று தேவை? அது எதற்கான மாற்றம்?

(சிறப்பு கட்டுரை)
……………………………….

மாற்றம் ஒன்று தேவை அந்த மாற்றம் மக்கள் மனங்களிலிருந்து மாற வேண்டும். அந்த மாற்றம் எதற்கான மாற்றமாக இருக்க வேண்டும். என்பது தான் கேள்வி?

தேர்தல் காலம் மிக அண்மையில் நெருங்கி வருகின்ற பொழுது மாற்றங்களும் மிக வேகமாக மாறிவருகின்றது. வடபகுதியில் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும் மற்றும் தேர்தல்கள் முறைகேடுகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக வடபுலத்தில் யாழ் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் களம் பெரும் சமர்க்களமாகவே இருக்கின்றது குறுகிய காலத்தில் மக்களின் ஆதரவு அலைகள் பெரு மாற்றங்களுடன் வீசத் தொடங்கியுள்ளது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வீழ்ச்சியை நோக்கி செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையும் நோக்கி மக்களின் ஆதரவு அலை மாறத் தொடங்கியுள்ளது இது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப்பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

எனவே இம்முறை தேர்தல் ஒரு மாயாஜால வித்தை நிறைந்த தேர்தலாகவே இருக்கப்போகின்றது. இங்கு யார் வெல்வார் யார் தோற்பார் என்பது வரும் ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி வெளிப்பட்டுவிடும் ஏனெனில் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மன மாற்றமே இதற்கான காரணமாக உள்ளது.

இந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் களம் வேறு ஒரு வியூகத்தில் சென்று கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. அங்கு உள்ள தேர்தல் நிலவரம் பெரும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அங்குள்ள மக்கள் சுயேட்சைக் குழு கேடயச் சின்னத்தை ஆதரிக்கின்ற மனநிலையை காணக் கூடியதாக உள்ளது. இந்த திடீர் மாற்றம் ஏன் உருவாகியது, எதற்காக உருவாகியது என்பதை நான் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அந்த மக்களுக்கான எந்த மாற்றங்களும் நிகழவில்லை குறிப்பாக இந்த ஐந்து வருடங்கள் எந்த நன்மைகளும் அந்த மக்கள் பெற்றிருக்கவில்லை அதற்கு மாறாக பெரும் இன்னல்களை தொடர்ச்சியாக சந்தித்து வந்துள்ளார்கள்.

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து அந்த மக்கள் போரின் பாதிப்பிலிருந்தும் , மீளா துயரங்களிலிருந்தும் அவர்கள் முழுமையாக இன்னும் மீளவில்லை. அதன் வடுக்கள் இன்னமும் ஆறாது இருக்கின்றது. அந்த இறுதிப்போரின் அவலங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆயுதமா கையில் எடுத்து மக்கள் மத்தியில் பேசிப்பேசியே அந்த மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளது, அதன் விளைவாக ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணமாக இருக்கலாம்.

ஏனெனில் 2010ல் இருந்து 2015 ஆண்டு வரை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும், முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுயேட்சைக் குழு கேடய சின்னத்தின் வேட்பாளருமான முருகேசு சந்திரகுமாரும் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தனர். அன்றைய காலப்பகுதியில் இருவரும் வேறு வேறு வியூகங்களில் செயல்பட தொடங்கியிருந்தார்கள்.

ஏற்கனவே நான் முன்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல் ஒருவர் தேசியத்தை நோக்கியும் மற்றையவர் அபிவிருத்தியை நோக்கியும் இரு துருவங்களாக வேறு வேறு திசைகளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள் அன்றைய காலகட்டத்தில் சந்திரகுமார் அவர்களின் செயற்பாடுகள் மற்றும் சில கசப்பான சம்பவங்கள் என மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தமையை யாராலும் மறைக்க முடியாது.

இருந்தபோதும் கிளிநொச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட கிராமங்கள் அல்லது பகுதிகள் என அன்றைய அரசாங்கத்தின் ஊடாக அபிவிருத்தியை சந்திரகுமார் மேற்கொண்டிருந்தார். என்பதை மறுக்க முடியாது. அதே காலகட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் தேசியவாத கொள்கையுடன் மக்கள் மத்தியில் பயணித்துக் கொண்டு இருந்தவர். அந்த காலகட்டத்திலேயே மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உருப்பெற்று இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு தலைமைமிக்க அரசியல்வாதியாக இடம்பெற்றிருந்தார். அதன் விளைவாகவே அவர் 2015ஆம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றியையும் பெற்றிருந்தார்.

இது சந்திரகுமாருக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. இருந்தபோதும் சந்திரகுமார் தனது கொள்கை நிலைப்பாட்டிலிருந்து மாறாது. தனது செயல்பாட்டை கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்தே செயல்படுவதற்கான ஒரு கொள்கை வழியினை உருவாக்கியிருந்தார். அதன் முதல் கட்ட செயற்பாட்டாக ஈபிடிபி இலிருந்து பிரிந்து சென்று தனியே ஒரு கட்சியினை உருவாக்கிக் கொண்டார்.

அதனூடாக அவர் மக்களிடையே தனது அபிவிருத்தி சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, கல்வி சார்ந்த விடயங்களை அடித்தட்டு மக்களிடையே புகுத்த தொடங்கினார். அது காலப்போக்கில் மக்களிடையே வரவேற்பை பெறத் தொடங்கியது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் 2015 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் அவர்களுடைய செயல்பாடுகள் மக்கள் மத்தியிலே கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயத்தில் போலி முகத்தினை காட்டியிருந்தார் அன்றிலிருந்து இன்றுவரை அந்த மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை தொடர்ந்த வண்ணமே உள்ளனர். ஆனால் சிறிதரன் அவர்கள் பாராமுகமாகவே செயல்பட்டு வந்துள்ளார் மேலும் மறைமுகமாக அந்தப் போராட்டத்திற்கு பல இடையூறுகளையும் அழுத்தங்களையும் கொடுத்து வந்துள்ளார். இதன் ஒரு அங்கமாகவே அந்த மக்கள் சிறிதரன் அவர்களுக்கு எதிரான ஒருமித்த குரலை எழுப்பி இருந்தார்கள்.

அதுவரை காலமும் அமைதி காத்துக்கொண்டிருந்த சந்திரகுமார் அவர்கள் அந்த மக்கள் சிறிதரனுக்கு எதிரான செயல்பாடுகளின் ஊடாக அவர்களுடன் கைகோர்த்து பயணிக்கத் தொடங்கினர் அதனூடாக தனது அரசியல் நகர்வுகளை மென்மேலும் விரிவுபடுத்த தொடங்கினார்.

அதன் விளைவாக மெல்ல மெல்ல சிறிதரன் அவர்களின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. அவருடைய மேலும் சரிவுக்கு காரணமாக அமைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக தெரிவுசெய்யப்பட்டு கரைச்சி பிரதேச சபையினை தமது ஆளுகைக்கு உட்படுத்தி அதனூடான செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரின் செயற்பாடானது சட்ட விதிமுறைகளையும் மீறி செயல்படுகின்ற ஒரு வங்குரோத்து தனத்தை அங்கு செயல் படுத்திக் கொண்டிருந்தார். அதன் விளைவே மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை உருவாகத் தொடங்கியிருந்தது.

அந்த அலை சிறு சிறு அலைகளாக தோன்றி இன்று மிகப்பெரிய அலையாக மக்கள் அலை மாறத்தொடங்கியது. அந்த அலைக்கு ஆதரவாக மேலும் ஒரு புதிய அலை ஒன்று உருவாகியுள்ளது. அதுதான் கல்விசார் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், புலம்பெயர் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், வைத்தியர்கள், கல்விசார் அதிகாரிகள், மற்றும் பல்துறை உத்தியோகத்தர்கள் , என ஒரு பெரும் அலையாக உருவெடுத்து நிற்கின்றது. இந்த அலையிணை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எவ்வாறு கையாள போகின்றார் என்பது ஒரு கேள்வியாகவேஉள்ளது?

மேலும் தேசியம் பேசுபவர்கள் சில விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள் குறிப்பாக இனப்படுகொலைக்கு எதிராகவும் அரச ஒட்டுக் குழுக்களாகவும் செயற்பட்டவர்கள் இன்று இவ்வாறான அபிவிருத்தியையும், மக்களுக்கான உரிமைகளையும் எவ்வாறு பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்று பல தரப்பட்ட கருத்துகளை முன்வைத்து விமர்சித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது .

அவர்களின் கேள்வியில் ஒரு நியாயப்பாடு இருந்தாலும், அந்தக் கேள்விக்கான பதிலை மக்கள்தான் வழங்க வேண்டும். ஏனெனில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களே இறுதிப்போரில் உயிர்களையும், அவயங்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்தவர்கள். மேலும் அவர்களுடைய உறவுகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் கடந்து சிந்தித்து தானே அந்த மக்கள் சந்திரகுமாரை ஆதரிக்கின்றார்கள்.
அவ்வாறாயின் அம்மக்கள் தேசியவாதத்தின் கை விட்டு விட்டார்களா என்று கருத முடியுமா?

ஏனெனில் 2015ஆம் ஆண்டு தேர்தலில் தேசியவாத கொள்கையுடனே சிறிதரனை மக்கள் ஆதரித்து இருந்தனர். தற்பொழுது அந்த மன மாற்றத்திற்கு சரியான அடிப்படைக் காரணம் என்ன?

உண்மையிலேயே அந்த மக்கள் தேசியவாதத்தை கைவிடவில்லை அதற்கு மாறாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தையே மக்கள் மத்தியில் பிரதிபலிக்கத் தொடங்கியது. காரணம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் நீண்டகாலமாகவே போலித் தமிழ்த் தேசியத்தை பேசிப்பேசி தமிழ் மக்களுக்கான எந்த அபிவிருத்தியையோ அல்லது கல்விசார் செயல்பாடுகளையோ அல்லது பொருளாதார ரீதியான முன்னேற்றத்தையோ அல்லது வாழ்வாதாரத்தையோ முன்னோக்கி நகர்த்திச் செல்லாது தனது சுயநல அரசியலை மட்டும் முன்னோக்கி நகர்த்திச் செல்வதை அந்த மக்கள் கண்கூடாகக் காணக்கூடியதாக அமைந்திருந்தது.

அதன் பிரதிபலிப்பே இதற்கான ஒரு புதிய மாற்றமாக கருத முடிகின்றது. எனவே அந்த கட்சி சார்ந்தவர்கள் வெறுமனே தேசியவாதத்தை எடுத்து எதிரணியினரை விமர்சிப்பது எந்த அடிப்படையில் நியாயமானதாக காணப்படும் என்பதனை மக்கள்தான் முடிவு செய்யவேண்டிய நிலையில் உள்ளனர். எனவே இந்த மாற்றத்திற்கான காரணத்தினை வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி மக்களாகிய ஒருநாள் நீதிபதிகள் இதற்கான தீர்ப்பினை வழங்குவார்கள் என்பது யதார்த்தமான உண்மையாகும்.

…………………………………

( பிரதியாக்கம் – செல்வகுமார். ந )

.