கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஒன்பதாவது மாலைநேரக் கல்வி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்ற கல்வி வளர்ச்சி அறக்கட்டளையானது மாலைநேரக் கல்வி நிலையங்கள், கணிணி கற்கை நிலையம், பல்லைகழக மாணவர்களுக்கான கற்றலுக்கான உதவி, ஆசிரியர்கள் மாணவர்களுக்கான பயிற்சி செயலமர்வுகள், விழிப்புணர்வு கருத்தரங்குகள், என கல்வித்துறையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக சனத் தொகையினை கொண்ட இரண்டாவது பெரிய கிராம அலுவலர் பிரிவான கோணாவில் கிராமத்தில் சுமார் ஆயிரம் வரையான மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உதவும் வகையில் இம் மாலைநேரக் கல்வி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் உப தலைவரும் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய அதிபருமான அ. பங்கையற்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்வி வளர்ச்சி அறக்கட்ளையின் தலைவர் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மாவட்ட உளநல வைத்திய அதிகாரி மா. ஜெயராசா, கோணாவில் பாடசாலை அதிபர் அம்பிகைபாலன்,அறக்கட்டளையின் உறுப்பினர் கால்நடை மருத்துவர் சகாயமேரி, மற்றும் கிராம மட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.