கிருமி

142


அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கிருமி – இந்த சொல் தான் இப்போது வைரல். ஒரு வைரஸ் வைரல் ஆகியிருக்கிறது.
நாமும் புது சொல்லாடல்களும், வழக்கத்திற்கு மாறான புது நடைமுறைகளையும் பின் பற்றி வருகிறோம். சமூக விலகல் (social distancing), உள்ளிருப்பு (quarantine), ஊரடங்கு (lockdown ) போன்ற ஊகித்திராத விடயங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது.
இந்த கிருமியின் தாக்கம் நேரடியாக, மறைமுகமா இந்த சமூகத்தையும் நம் இயல்பு வாழ்க்கையையும் ஓராண்டுக்கு பாதிக்கலாம்.
இந்த சூழல் இந்த தலைமுறை எதிர் கொள்ளாதது. ஆனால் உலகை பொறுத்த மட்டில் இது சுழற்சியில், சூழ்ச்சியில் கடக்கும் ஓர் நிகழ்வு.
பல்வேறு ஆய்வுகள் இந்த சூழ்நிலைகள் மனோரீதியிலான பாதிப்புகளை அனைவர் மத்தியில் ஏற்படுத்தும் என்றே கூறுகின்றன.
இந்த நேரத்தினை நாம் முறையாக செலவிட முனைந்தோமானால் அது நமக்கு வரும் காலங்களில் நிச்சயமாக உதவும்.
இது போன்ற முந்தைய நிகழ்வுகள் பெரும்பாலும் பொருளாதார நிலையாமையையும், வேலை இழப்பையும் தந்து விட்டு சென்று இருக்கின்றன.
இவ்விளைவினை எதிர்நோக்கும் திட்டமிடலும், ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள இந்நேரம் உசிதமானது.
குறிப்பாக கடன்களும், தவணைகளும் இருப்பவர்கள் அதிகமான சுமைக்கு ஆளாக நேரிடும்.
தங்களை எப்படி பொருளாதார சிக்கல்களில் இருந்து மீட்கலாம் என்று ஆய்வது நன்று.
இது ஒரு புறம் இருக்க, எல்லோருக்குமே சில முயற்சிகள் செய்து பார்த்திட வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக இருக்கும்.
அது ஓவியம் வரைவதாகவோ, பாடுவதாகவோ, இசை பழகுவதாகவோ இருக்கலாம். அதன் மீது இருக்கும் ஒரு வித ஈர்ப்பு அதை இலகுவாக செய்திட வழி வகுக்கும். அது சாத்தியப்படாமல் இருப்பதிற்கு நாம் சொல்லும் காரணம் நேரமின்மை.
இப்போதும் நீங்கள் வீட்டில் இருந்த படி வேலைகளை மேற்கொள்ளலாம். எனினும் பயண நேரம், புறப்படும் நேரம் என கணிசமான நேரம் உங்கள் கையில் இருக்கிறது. அதை வீணான திரை நேரத்தில் (digital screen time) வீணடிக்காமல் உங்களுக்காக செலவிடுதல் உத்தமம்.
நுகர்வு மனநிலையில் இருந்து சற்று தள்ளி இருத்தல் நலம். திரைப்படங்களும், தொடர்களும் பார்ப்பதில் தவறில்லை. பொழுது போக்கிற்க்காக (time pass) பார்க்க வேண்டியதை வேலையாக ஏற்று நேர விரயம் (time killing) செய்வது மேட்டிமை மக்களுக்கு சரியானதாக இருக்கலாம்.
பிரதான ஊடகங்ளை பார்ப்பதும் தேவையற்ற உளைச்சல்களை தர நேரும். ஒளிபரப்பிய செய்திகளை மீண்டும் திரையிட்டு தங்கள் வணிக இலக்குகளை இலகுவாக அடைந்து கொண்டிருக்கிறது.
காலம் தாழ்த்திய நம்முடைய வேட்க்கைகளையும், முயற்சிகளையும் சோதித்து பார்க்கும் முயற்சியில் இறங்க வேண்டும். அடுத்தவர் பையை நிரப்புவது மடமையே. இதை சுய பரிசோதனை செய்து உணரும் போது வருந்த நேரிடலாம்.
நாம் இப்போது எதிர் கொள்ள வேண்டியது COVID கிருமி மட்டுமல்ல நம் சோம்பல் கிருமியையும் சேர்த்தே.
வீட்டில் இருங்கள். விலகி இருங்கள். சுத்தமாக இருங்கள்.இந்த புத்தாண்டில் புது வெளிச்சம் பிறக்கட்டும். வளர்க தமிழ்.
நன்றி


மோகன் பாலகிருஷ்ணன்