குடாரப்பு தரையிறக்கம் அனுபவப் பகிர்வு 02

208

இரத்தப் பெருக்கினை கட்டுப்படுத்துவதற்கான வேலைகளை அனேகமாக எமது எல்லா போராளிகளும் கச்சிதமாகச் செய்வார்கள்.

களத்தில் நிற்கும் எல்லா போராளிகளிடமும் எப்போதுமே இரண்டு அல்லது மூன்று குருதிதடுப்பு பஞ்சணைகள்(Field compressor)வைத்திருப்பார்கள்.

ஒரு காயத்திற்கு எப்படி கட்டுப்போட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.

எங்களிடம் காயமடைந்தவர்கள் கொண்டு வரப்ப்பட்ட போது அந்தக் கட்டுக்களை அவிழ்த்து மணலும் சேறும் சகதியுமாய் இருந்த காயங்களை சேலைன் மூலம் கழுவித் துப்பரவு செய்தோம்.

இப்போது காயங்களில் கிறுமித் தொற்றுகள் (Infection) தடுப்பதற்கான பென்சிலின் போடவேண்டும்.

இரவு முழுவதும் அதிகரித்த தாக்குதல் காரணமாய் பென்சிலின் போடுவதற்கான சோதனை ஊசி(Penicillin sensitive test)போடுவது சாத்தியமற்று இருந்ததால் அநேகருக்கு அம்பிசிலின் ஊசியே(Ampicillin Injection)ஏறினோம்.

இன்று காலையும் காயமடைந்தவர்களை பெருநிலப்பரப்புக்கு அனுப்ப முடியாதிருப்பதை புரிந்திருந்தாலும்
நாங்கள் மீண்டும் மீண்டும்
தளபதிகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தோம்.

பெனிசிலினிற்கான சோதனை ஊசிகளை பெண் மருத்துவர் வித்தகி ஏற்றி பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

செறிவான குண்டுத் தாக்குதல்கள் நடைபெறும் ஒரு கொலைவலயத்தில்
காயமடைந்தவர்களை ஒரே இடத்தில் வைத்திருந்தால் ஒரு எறிகணையிலேயே நிறைய பேரை இழக்க வேண்டிவரும் என்ற போரியல் பட்டறிவு எம்மிடம் இருந்தது.

ஜெயசிக்குறுய் எதிர்ச்சமரின் போது
தமிழீழத்தின் பிரபல பாடகர் சிட்டு விழுப்புண் அடைந்து சிகிச்சை அளிக்கப்ப்பட்ட பின்னர் தற்காலிக மருத்துவநிலையின் மீது வீழ்ந்த குண்டினால் மீளவும் பாரிய காயமடைந்தே வீரச்சாவு அடைந்தார்.

அந்தச் சம்பவம் போல இங்கேயும் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதால் அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டோம்.

வெவ்வேறு மரங்களின் கீழ் உள்ள பதுங்ககழிகளில் பாதுகாத்தோம்.

வெம்மை கூடிய அந்த மணல் பிரதேசத்தில் பென்னம்பெரிய விருட்சம் ஒன்று கூட இருக்கவில்லை.

பரட்டையான மரங்களும் நாவல் மரங்களும் அதிகம் இருந்தன.

சிறுபராயத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குப் போனால் கடற்கரைக்கும் செல்வோம். எழில் மிகு மணல் திட்டிகள் தாண்டிச் செல்வது கனி பறிக்க, ஆம் நாவல் கனி பறித்துச் சுவைத்து உண்பதற்கு!

இன்றும் அதே கடற்கரையின் சற்றுத் தெற்கே தரையிறங்கி நிற்கிறோம் வெற்றிக் கனி பறிப்பதற்கு!

அந்த #அருங்கனிக்காக #நண்பர்களின்_இன்னுயிர்களை கொடுக்கவேண்டி இருந்தது.

குண்டுகளால் நிலம் அதிர்ந்து கொண்டிருந்தாலும், #நம்பிக்கைகளுடன்காலைவிடிந்தது.

அருள்நங்கை ஈரத்துணியால் காயமடைந்த பொதுமக்கள் போராளிகளின் முகங்களை தாயன்புடன் துடைத்துக் கொண்டிருந்தாள்.

பல்லுத் தீட்டக் கொடுப்பதற்கு எதுவும் இல்லை.

“உண்ண எதாவது கொடுக்கலாமா?” என்று கேட்டாள். ஆம், என்றுவிட்டு என்ன சாப்பாடு கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்ட போதுதான் எங்களின் உலர் உணவுப் பைக்கற்றுகளும் தீர்ந்துவிட்டமை அவளிற்கு நினைவில் வந்தது.

மூன்று நாட்களுக்குத் தேவையான உலர் உணவு தந்து அனுப்பப்படிருந்தாலும் சண்டையில் நின்ற போராளிகள் தங்களது ஆயுதங்களையே அதிகம் கவனம் கொண்டிருந்ததால்,மீதமிருந்த கொஞ்ச உணவுகளையும் தவறவிட்டுவிட்டார்கள்.

தொடரும் ….✍️

பகிர்பவர் : போராளி மருத்துவர் தணிகை