தமிழின அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜெனீவாவில் அருட்தந்தை குழந்தைசாமி!

89

“வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெறும் தமிழின அழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க மனித உரிமைகள் பேரவை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என அருட்தந்தை ஆ. குழந்தைசாமி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியிருக்கின்றார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் தமிழ் உலகம் அமைப்பின் சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ. குழந்தைசாமி அவர்கள் தனது உரையில்,

1948 ஆம் ஆண்டு திசம்பர் 9 ஆம் நாள் அன்று ஐ.நாவின் பொது அமர்வில் உருவாக்கப்பட்ட ‘இன அழிப்பினை தடுத்தலும் தண்டனையும’ என்ற அறிக்கை சமயம், இனம், இனக்குழு, நாடு ஆகியவற்றின் பெயரில் முழுமையாகவோ, ஒரு பகுதியாகவோ அழிக்கவேண்டுமென்ற நோக்கில் செய்தால் அது இன அழிப்பாக விளக்குகிறது.

ஒன்று. இலங்கை இராணுவமும், வெள்ளைவேனில் வரும் காடையர்கள்போன்ற அரசால் உருவாக்கப்பட்ட வகுப்புவாத குழுக்கள் மனித உரிமை பாதுகாவலர்களையும். பத்திரிக்கையாளர்களையும் தமிழ் இளைஞர்களையும் கடத்திக் கொலை செய்கின்றனர்.

இரண்டு. வகுப்புவாத இராணுவமும் பாசிச அரசும் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30 அம் நாள் அன்றும் அதற்கு பிறகும் உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூர வந்த பெண்கள் அமைப்பினரையும் அவற்றின் தலைவிகளையும் நீதிமன்றத்தாலும் காவல்துறையின் புலனாய்வு துறையினராலும் இராணுவ புலனாய்வுத் துறையினராலும் மிரட்டி, அடித்து, திட்டி, சோதனை செய்து தடைசெய்தனர். இராணுவத்தாலும் அரசு உருவாக்கிய அமைப்புகளாலும் நடைபெறும் தொடர் பாலியல் வல்லுறவு, சிறைப்படுத்துதல் மக்களில் மனநோய்களை உருவாக்குகின்றன. இராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மதுபான கடைகள், மஞ்சள் பத்திரிக்கைகள், போதைப்பொருட்கள், வலிந்த விபச்சரத் தொழில் ஆகியவற்றை அறிமுகப்படுத்துகின்றது.

மூன்று. இலங்கை இராணுவமும் அரசும் உருவாக்கிய அமைப்புகளும் தமிழர்களுடைய நிலம், மீன்பிடித்தல், கடைகள், வீடுகள் ஆகியவற்றை அழித்து, திருடி, கொள்ளையடித்து பெரும் அழிவை ஏற்படுத்தின. உலக சட்டவல்லுநர் குழுவின் அறிக்கையின்படி தமிழர்கள்மீது சிங்கள வெறியர்களது உடல்ரீதியான வன்முறை நடத்தப்படுவது தமிழின அழிப்பாகும். எனவே வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெறும் தமிழினஅழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தப் பேரவை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து தனது உரையை பதிவுசெய்தார்.