கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பின் போலி முகத்திரையைக் கிழித்தெறிந்த குரல் அற்றவர்களின் அமைப்பு!

கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பின் போலி முகத்திரையைக் கிழித்தெறிந்து குரல் அற்றவர்களின் அமைப்பு

சிறைத்தடுப்பில் இருந்து இதுவரை வெளியேறிய அரசியல் கைதிகள் எவருமே அரசியல் தீர்மானப்பிரகாரம் விடுவிக்கப்படவில்லையென குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராட அமைக்கப்பட்டுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் தம்மால் பெருமளவு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்டுவருகின்றது.

இதனை முற்றாக மறுதலித்துள்ள அமைப்பு அரசியல் கைதிகளில்; தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணிகளை அமர்த்தி வழக்காடி விடுதலை பெற்ற ஒருசிலரைத் தவிர ஏனையவர்கள் எப்படியாவது விரைவில் விடுதலைபெற்று குடும்பங்களுடன் இணைய வேண்டும் என்பதற்காக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை வலிந்து ஏற்றுக்கொண்டு அதற்கான தண்டனைகளை அனுபவித்தே விடுதலை அடைந்துள்ளார்கள். மேலும், எவர் ஒருவரும் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படவில்லை.

அதேவேளை சிறைக்கூடங்களில் அன்றாடம் செத்துக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரமானது மனிதாபிமான அடிப்படையில் ஆற்றவேண்டிய முதன்மைக் கருமமாகும் என்பதை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 11 முதல் 25 வருடங்களாக தென்னிலங்கை சிறைச்சாலைகளில் சூழ்நிலைக் கைதிகளாக தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுள்,

கொழும்பு புதிய மகஸீன் சிறைச்சாலையில் – 40 பேரும்,
அனுராதபுரம் சிறைச்சாலையில் – 26 பேரும்,
வெலிக்கடை ஆண்கள் சிறைச்சாலையில் – 03 பேரும்,
மகர சிறைச்சாலையில் – 02 பேரும்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் – 02 பேரும்,
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் – 01 வரும்,
கண்டி தும்பறை சிறைச்சாலையில் – 01 வரும்,
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் – 01 வரும்,
களுத்துறை சிறைச்சாலையில் – 01 வரும்,
பொலநறுவை சிறைச்சாலையில் – 01 வரும்,
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் – 01 வரும்,

என 79 கைதிகள் உள்ளனர். இவர்களில்,
விளக்கமறியல் கைதிகளாக – 35 பேரும்,
மேன்முறையீட்டு கைதிகளாக – 16 பேரும்,
தண்டனைக் கைதிகளாக – 26 பேரும்,
ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்ட கைதிகளாக – 02 பேரும்,
என நான்கு வகையினர் அடங்குகின்றனர்.

குறிப்பாக, இன்று தமிழ்த் தலைமைகளில் பெரும்பாலானனோர் சட்டத்தரணிகள். ஆனால், இவர்கள் தமது சட்ட அறிவைப் பயன்படுத்தி கைதிகள் விடுவிப்பிற்கு அல்லது இந்தக் கைதிகள் விவாகாரம் அரசியல் பிரச்சினையாகப் பரிணாமம் பெறுவதற்கு உரிய சாத்தியமான செயற்பாடுகள் எதிலும் இவர்கள் பங்குகொள்ளாமல் இருக்கின்றார்கள் என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

இந்த தமிழ்த் தலைமைகளுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். இந்த அவலமும் துன்பமும் இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்குமோ! ஆம், நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.

எப்போதும்போல தேர்தல் என்று வருகின்ற வேளைகளில் அல்லது கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் அரசியல் கைதிகள் விவகாரத்தை கையில் எடுப்பதும் அதன் பின்னர் கைவிடுவதும் அரசியல்வாதிகளுக்கு பழகிப்போய்விட்டது. இந்த வகையில் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட கைதிகள் உடல், உள ரீதியில் பாதிக்கப்பட்டு சிறைக் கூடங்களுக்குள் பரிதாபகரமாக மடிந்துபோனவர்கள் பலருள்ளனர். இதுபோக மீதமுள்ளவர்கள் நடைப்பிணங்களாக நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை இழந்த இவர்களால் இனிமேலும் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டு தற்கொலைக்கு ஒப்பான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆகவே, அரசியல் கைதிகளின் சிறைச்காலத்தை தண்டனைக் காலமாகக் கருதி, அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் தீர்மானம் எடுத்து கைதிகளின் விடுதலைக்கு சிறந்த பொறிமுறையை விரைவாக முன்னெடுக்கவேண்டும். குறைந்த பட்சம் தமிழ்க் கைதிகள் விடயத்திலேனும் உரிய தீர்வை காண முடியாவிட்டால் வேறெந்தப் பிரச்சினைகளையும் அரசாங்கம் தீர்த்து வைக்குமா? ஆம் சிந்திக்க வேண்டும்.
தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை. இதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் ஆணையூடாக பெற்றுக்கொள்கின்ற மக்களவை அதிகாரத்தை பொது நலனுக்காகப் பயன்படுத்தும் சமூக அக்கறை கொண்ட சேவை மனப்பாங்காளர்களை நாம் சபையேறச் செய்யவேண்டும்.

தற்போது சிந்தித்து செயலாற்றவேண்டிய தருணம் இது. எவராலும் தொடர்ந்தும் ஏமாற்றப்படாமல் நாம் விழித்துக்கொள்வோம் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.