நான் பதவி துறப்பதற்கான அறிவித்தலை வழங்கியதன் பின்னர் பலர் ஆதரவாகவும் குறிப்பிடத்தக்கோர் எதிராகவும் சமூக ஊடங்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆதரவுக்கு நன்றி ஆனால் பிறிதொரு இடத்தில் நான் குறிப்பிட்டது போல் இது தனி நபர் புகழ்ச்சியாக அமைந்திருக்க வேண்டியதில்லை. எதிர்ப்பு தனிப்பட்ட ரீதியாகவும் நான் வரித்துள்ள அரசியல் நிலைப்பாடுகளாலும் வருகின்றது. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி இருக்கத் தான் செய்கின்றது. ஆனால் சொல்லாவிட்டால் தொடர்ந்து சொல்லப்படும் இந்த பொய்கள் மெய்யாகும்;
குறிப்பாக திருப்பி திருப்பி இந்தப் பொய்கள் சொல்லப்படும் போது அவை மெய்யாக்கப்படும் ‘உண்மைகள்’ சூழ்ந்த fake news உலகத்தில் நாம் வாழ்கின்றோம். சுருக்கமான சில பதில்களோடு இதனை முடித்துக் கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
🔸அவசரப்பட்டு பதவி துறக்கும் முடிவை எடுத்து விட்டேனா?
இடைக்காலக் கட்டளை கிடைக்காவிட்டால் பதவி விலகுவது எனது முடிவு என்று எனது சட்டத்தரணியுடன் டிசம்பர் 2019இல் வழக்கு வைக்கும் போதே சொல்லியிருந்தேன். வழக்கை ஏற்றுக் கொள்வது தொடர்பான வாதமும் இடைக்காலக் கட்டளை தொடர்பான வாதமும் நடைபெறாமலேயே இழுத்துக் கொண்டு போவதை என்னால் தனிப்பட்டு தொடர்ந்தும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதை நான் எனது பதவி துறப்பு கடிதத்திலும் சொல்லியிருக்கிறேன். எனது உள நலன் சார்ந்து எடுத்த முடிவு இது.
வழக்கில் சாதகமான முடிவு வரும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் காரணங்களுக்காக ஆரம்பத்தில் இருந்தே குறைவானதாக இருந்தாலும் அது மேலும் சரிவடையக் காரணம் சனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு சட்டத்தரணியாக தோன்றி தாக்கல் செய்த மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபணைகள். தடையை காரணம் காட்டி நான் இலங்கை அரசாங்கத்தை அபகீர்த்திக்குட்படுத்தி விட்டேன் என மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபணைகள் ஆவணம் கூறுகிறது. (அதற்கு சான்றாக ஐ நா விஷேட அறிக்கையாளர்கள் இருவர் கூட்டாக எழுதிய கடிதமும் கரி ஆனந்தசங்கரி கனடா பாராளுமன்றில் ஆற்றிய உரையும் சுட்டிக் கட்டப்பட்டிருந்தன). அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்
மூலமாகவும் தமிழ் சிவில் சமூக அமையம் மூலமாகவும் நான் அரசாங்கத்தை விமர்சித்து விட்டிருந்த அறிக்கைகள் ஏறத்தாழ 15 பக்கங்கள் இணைக்கப்பட்டிருந்தன, எனது தகப்பனாரை இழுத்து அவர் பல்கலைக்கழகத்தில் முறையற்ற விதத்தில் தாக்கம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
ஒரு போதும் யாருக்குப் பின்னாலும் போய் பதவியை நாடாதவரை எந்தவொரு காரணமும் இல்லாமல் இதில் இழுத்துவிட்டதை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் மிகத் தரக்குறைவான வேலையாகவே நான் பார்க்கிறேன்.
நான் எவ்வளவு போராட முடியும், தொடர்ந்து தலையை சுவரில் முட்டுவது எவ்வளவு காலம் செய்யலாம். மண்டையை உடைத்துக் கொள்வதா இல்லையா என்பதனை நான் தான் தீர்மானிக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கலாம் என்ற சாய்மன கதிரை அபிப்பிராயங்களை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு அது தேவையில்லை. எனது மற்றைய வேலைத்தளங்கள் (குறிப்பாக அடையாளம்) சார்ந்து நான் முகங்கொடுக்கும் அழுத்தங்களைப் பற்றி நான் வாய் திறந்ததில்லை. என்ன நடக்கின்றது என்று உங்களுக்கும் தெரியாது. அதைச் சொல்லி அனுதாபம் தேட வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.
உயர் நீதிமன்ற வழக்கு தொடரும். எனது இராஜினாமாவால் அது பாதிப்படைய மாட்டாது என்பது தொடர்பில் எனது சிரேஷ்ட சட்டத்தரணியிடம் பேசிய பின்னே நான் இந்த முடிவை எடுத்தேன்.
நீதிமன்றத்தில் நம்பிக்கை இல்லாமல் ஒரு சட்டத்தரணியாக, விரிவுரையாளராக எவ்வாறு இயங்குவது எனக் கேட்கிறார் இன்னொரு தம்பி. நீதிமன்றங்களை ‘நம்ப’ வேண்டும் அவை நீதி தரும் என நான் ஒரு போதும் எனது மாணவர்களுக்கு கற்பித்ததே இல்லை. பொது நல வழக்குகள் ஒரு போராட்ட களம் அவ்வளவே. வெற்றியிலும் செய்தி உண்டு. தோல்வியிலும் செய்தி உண்டு.
கலாநிதிப் பட்டப்படிப்பின் மூன்று வருடங்கள் முடிவடைந்த உடனேயே நான் யாழ்ப்பாணம் திரும்பினேன். தேவையிருந்தால் இன்னொரு 09 மாதம் சம்பளத்தோடு நான் இலண்டனில் இருந்திருக்க முடியும். திரும்பி வர வேண்டிய அவசிய சூழல் சட்டத்துறையில் இருந்ததாகக் கூறி வர சொல்லிக் கேட்டார்கள், வந்தேன். பல்கலைக்கழகத்திற்கு நான் கட்டாய சேவை செய்ய வேண்டிய காலப்பகுதியான 5 வருடங்களுக்கு முன்னரே (4 வருடங்களில்) நான் பதவி துறக்கிறேன். ஒரு வருட கட்டாய சேவை செய்யத் தவறியதற்காக பெருந்தொகைப் பணத்தைப் பல்கலைக்கழகத்திற்கு நான் செலுத்த வேண்டியுள்ளது. பணத்தை சட்ட மாணவர்களுக்கு பாடப் பரிசுகள் வழங்க பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்க உள்ளேன். ஆகவே எனது இந்த முடிவு நிதி சார்ந்தும் பெரும் பாதிப்பை என் மீது சுமத்துவதாகும். இதையெல்லாம் சொல்லி அனுதாபம் தேட வேண்டிய அவசியம் இல்லை. இது ஒன்றும் தான்தோன்றித்தனமாக எடுக்க கூடிய முடிவல்ல என்பதால் விருப்பமின்றி இந்தப் பதிவு.
🔸நான் பதவி துறப்பு செய்ததை பரபரப்பாக்கி செய்தியாக்கினேனா?
ஜூலை 16 வழக்கு முடிந்தது காலை 10.45 மணிக்கு. உடனடியாகவே எனது சட்டத்தரணியுடன் நீதிமன்ற வளாகத்திலேயே பேசி பதவி துறக்க அனுமதி வாங்கி மறு நாள் காலை அவருக்கு எனது கடிதத்தின் வரைபை காட்டி அனுமதி எடுத்து 17 ஆம் திகதி காலை 10 மணியளவில் கொழும்பில் இருந்து மின்னஞ்சல் மூலமாக சட்டத்துறை தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டேன். ‘Advance copy’ என்று குறிப்பிட்டு கலைப்பீடாதிபதிக்கும் தகுதி வாய்ந்த அதிகாரிக்கும் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் விவகாரங்களுக்கான பிரதிப் பதிவாளருக்கும் உடனே அந்த மின்னஞ்சலை அனுப்பி வைத்தேன். முதல்வன் செய்தியாளர் நெருக்கமானவர். வழக்கு முடிந்தவுடன் கதைத்தார். விபரம் சொன்னேன். என்ன செய்யப் போகின்றீர்கள் எனக் கேட்டார் நாளை சொல்கிறேன் என்றேன். அடுத்த நாள் காலை எடுத்தார் பதவி துறப்பு கடிதம் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தாச்சு என்று சொன்னேன். உள்ளடக்கமும் சொன்னேன்.
சட்டத்துறை நண்பர்கள் எனது பதவி துறப்பு முடிவை என்னை மீளப் பெற வைக்கலாம் என்ற நல்லெண்ணத்தில் துறைத்தலைவர் எனது கடிதத்தை கலைப்பீடாதிபதிக்கு அனுப்புவதை தாமதிக்கலாம் எனக் கருதினார்கள். பின்னர் திங்கட்கிழமை (20.07.2020) எனது வற்புறுத்தலால் அனுப்பி வைத்து விட்டார்கள். ஆனால் கடிதம் கொடுத்த திகதி 17.07.2020. மின்னஞ்சலில் அதனை பெற்றுக் கொண்டமையை துறைத்தலைவரும் தகுதி வாய்ந்த அதிகாரியின் அலுவலகமும் உறுதிப்படுத்தினர்
ஊடகங்கள் தொடர்பாக எனது அணுகுமுறை அவர்கள் ஒரு விடயத்தைக் கேட்கும் போதே அதற்கு சொல்ல முடியுமானவரை விபரம் சொல்லி செய்தியை சரியாக வரச் செய்வது. இல்லை நான் இது பற்றி பேச மாட்டேன் என்று கூறி பிறகு செய்தி அரை குறையாக வந்தால் வருந்தும் நிலையை நான் இயன்ற வரை தவிர்ப்பவன்.
🔸 உதயன் எழுதிய தலைப்புச் செய்தி பற்றி சொல்கிறார்கள்.?
‘ஊடகப் போராளி’ சரவணபவன் பற்றி எனது கருத்து யாவரும் அறிவர். எந்த வகையில் தானும் எமது பிரதிநிதியாக இருக்கும் தகுதி இல்லாதவர் அவர். உதயன் பிரசுரித்த செய்திகள் தொடர்பில் ஆசிரிய பீடம் என்னை ஒரு போதும் தொடர்பு கொண்டதில்லை. அது அவர்களது முடிவு.
🔸ஏன் இப்போது தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பு என உங்களில் சிலர் கேட்கிறீர்கள்?
முன்னணியின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் நான் தான் என்று ஒருவர் கற்பனையில் எழுதுகிறார். இல்லை தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஆக்க வேண்டும் என்கிறார் இன்னொருவர். ஒரு கவலையும் வேண்டாம் நான் அரசியல் நுழைவுக்கான முன்னாயுத்தமாக இதை செய்யவில்லை. வாக்கு கேட்டு ஒரு போதும் வர மாட்டேன். ஆனால் அரசியல் பேசுவதையும் நிறுத்த மாட்டேன். ஒரு குறித்த கட்சி பிரோயோசனப்படட்டும் என்று இப்படியான முடிவை எடுக்கும் மட்டமான சிந்தனையோ தியாக உணர்வோ எனக்கில்லை. கடந்த 10 வருடங்களாக, ஒரு பல்கலைக்கழக ஆசிரியராக எனது வாழ்க்கை காலத்தை செலவளிப்பேன் என்ற நோக்கில் எனது பயணம் இருந்தது. இந்த பயணத்தை மாற்றுவது என்பது அப்படியாக ஒன்றும் சாதாரணமாக எடுத்து விடக் கூடிய முடிவல்ல என்பதை விளங்கிக் கொள்ளவும். அதை குறித்த ஒரு கட்சி அரசியல் இலாபம் பெறுவதற்காக செய்யுமளவிற்கு நான் எந்தக் கட்சிக்கும் விசுவாசியும் அல்ல.
🔸 இராஜினாமா செய்வதன் மூலம் ஏற்படும் முகப்புத்தக எழுச்சியால் உயர் நீதிமன்றை சாதகமான தீர்ப்பு நோக்கித் தள்ளலாம் என்ற நோக்கில் நான் இதனை செய்தேனா என உங்களில் சிலர் கேட்பது வேடிக்கையானது.?
அவ்வளவு தான் நீதித்துறையின் அரசியல் பற்றிய உங்கள் அனுபவம், பார்வை, அவதானிப்பு. இராஜினாமா செய்வதன் மூலம் பல்கலைக்கழகத்தை சங்கடத்திற்கு உள்ளாக்கி அவர்களது முடிவை மாற்றச் சொல்லி நான் அழுத்தம் கொடுக்கின்றேனா என்ற கேள்விக்கும் இல்லை என்பதே பதில். பேரவை தனது முடிவை சுயாதீனமாக மாற்றும் என்ற துளியளவு நம்பிக்கையும் எனக்கு இல்லை.
🔸தன்னை அறிவார்ந்த, நடுநிலை பத்தி எழுத்தாளராக முன்னிறுத்தும் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு என்னைத் தடை செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்ட போது எனது தகப்பனார் அதில் அங்கத்துவம் பெற்றிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பின்வருமாறு நான் பதில் அளித்திருந்தேன்:
2015இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு வழமை போன்று ஒரு தமிழரை நியமிக்க வேண்டும் என்று சிந்தித்த போது ஐ. தே கட்சி சார்ந்த ஒரு தொழிலதிபர் நியமிக்கப்பட்டார். தான் உயர்கல்வியில் தனியார் சேவை வழங்குவதால் அந்த நியமனத்தை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். ஆணைக்குழுவின் தலைவரே முன்னாள் ஆணைக்குழுவின் தலைவர் ஒருவரிடம் சிபாரிசு கேட்டு அவர் எனது தகப்பனாரின் பெயரை சொல்ல அது பின்னர் சரி பார்க்கப்பட்டு எனது தகப்பனார் நியமிக்கப்பட்டார்.
எனது தடை தொடர்பான பத்திரம் ஆணைக்குழுவில் விவாதத்திற்கு வந்த போது அப்பா தானாகவே யாரும் கேட்காமல் எழுந்து வெளியே சென்றிருக்கிறார். அந்த விடயம் கதைத்து முடிவெடுக்கப்படும் வரை வெளியில் இருந்துள்ளார். அதன் பின் மீதி கூட்டத்தில் பங்கு கொண்டார். உள்ளே சென்ற போது என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று கூட ஒருத்தரையும் கேட்கவில்லை. என் தொடர்பிலான விடயம் வந்துள்ளது என்பதை நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் இருந்தே அறிந்து கொண்டவர் அதை பற்றி எனக்கு ஒரு வார்த்தை சொல்லவில்லை. இது தான் என் அப்பா.
சம்பந்தன் ஐயாவுக்கும் சுமந்திரன் சேருக்கும் என்னைத் தடை செய்த முடிவில் பங்கு இருக்கலாம் என சாரப்பட சிலர் பதிவிட்டதால் தான் இதை எழுத நேர்ந்ததாக அந்த பத்தி எழுத்தாளர் உப்புச் சப்பில்லாத பதில் கூறினார். நல்ல நியமனங்கள் நல்லாட்சியில் நடந்ததற்கு சான்றாக எனது தகப்பனாரின் நியமனத்தை அவர் சான்று கூறுகிறார்.
ஆனால் அதில் உண்மையில்லை என்பதை ஆராயாமல் அவர் பதிவிட்டுள்ளார்.
சம்பந்தன் ஐயாக்கும் சுமந்திரன் சேருக்கும் எனக்கு விதிக்கப்பட்ட தடையில் எந்த வகிபாகமும் இல்லை. சுமந்திரன் சேர் உட்பட்ட பலரிடம் ஆலோசனை பெற்றே நான் இந்த வழக்கை தொடர்ந்தேன். இந்த நாட்டின் பொதுச் சட்டம் தொடர்பான சிறந்த வழக்குரைஞர்களில் சுமந்திரன் சேரை விஞ்சக் கூடியவர்கள் உண்டா என நான் சந்தேகிக்கும் அளவிற்கு எனக்கு அவரின் சட்டத் திறமை மீது பக்திப் பரவசம் உண்டு. ஆனால் அரசியலில் உடன்பாடு இல்லை. இதைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் எனக்குண்டு. அந்தப் பக்குவம் இல்லாத கூட்டமைப்பின் பக்தகோடிகள் என்னை எனக்கு சுமந்திரன் சேரின் சட்டப் புலமை பற்றி விளங்கிக்கொள்ளல் இல்லை என்றும் முன்னணியின் பக்தகோடிகள் நான் சுமந்திரன் சேரை ‘சேர்’ என்று விளிப்பதை நையாண்டி செய்கின்றனர். எந்த பக்கத்து பக்தகோடிகளின் தராதரத்திற்கும் நான் குறைந்து போக தயாரில்லை.
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் யார் பிரதிநிதித்துவ அரசியலில் இருப்பது அவசியம் என்பது தொடர்பில் எனக்கு அவ்வப்போது கருத்துண்டு. அது எல்லாக் காலத்திற்கும் இவர் தான் பொருத்தமானவர் என்ற அடிப்படையில் எடுக்கப்படும் முடிவல்ல. இன்றைய சூழலில் நான் சரியென கருதும் அரசியல் பிரதிநிதித்துவ வெளியில் பிரதிநித்துவம் பெற வேண்டும் என்பதே தேர்தல் கால எனது நிலைப்பாடுகளின் நோக்கம். அந்த நிலைப்பாடுகளில் இருந்து அந்த நபர்கள் சறுக்கி வந்தால் உங்கள் எல்லோருக்கும் முதல் நான் குரல் கொடுப்பேன்.
நான் மதிக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் நேரடி அரசியலில் இருக்கிறார்கள். கலாநிதி ஹரிணி அமரசூரிய, கலாநிதி நிர்மால் ரஞ்சித் போன்றவர்கள் உடனடியாக ஞாபகத்திற்கு வரும் உதாரணங்கள். நான் நேரடி அரசியலில் கூட இல்லை. ஆனால் குறித்த ஒரு காரணம் பற்றி குறித்த கட்சி ஒன்று பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று சொல்லிய ஒரே காரணத்திற்காக சக செம்பாக மதித்து களமாடுவது வேடிக்கையானது. ஆனால் இதற்கெல்லாம் அசரப் போவதில்லை. மாமனிதர் சிவராம் சொல்லுமால் போல் சமூகத்தின் பிரச்சனைகளில், அரசியலில் கைகளை அசுத்தம் செய்ய தயாரான ஒருவன் தான் படிச்ச ஆள்.
என தனது பதிவினுடாக மனந்திறந்து வெளிப்படுத்தியுள்ளார்.