ஜே ஆர் மீண்டும் கோட்டாபய வடிவில் மீளுயிர்ப்பு பெறுகிறார் – குருபரன்!

92

20 ஆம் திருத்தத்தின் மூலம் ஜே.ஆர் ஜெயவர்த்தன உருவாக்கிய நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமைக்கு அரசியலமைப்பு திரும்பவுள்ளது. அதிகாரக் குவிப்பை சித்தாந்த அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் அரசியலமைப்பிற்கு 17ஆம் திருத்தமும் 19ஆம் திருத்தமும் புறந்தள்ளும் தன்மையான, ஒட்டாத தலையீடுகள்.

ஒரு சில குறிப்பிட்ட அரசியல் நிகழ்வுகளால் நிறைவேறிய 1978 அரசியலமைப்பின் சித்தாந்தத்தோடு ஒவ்வாத இந்த 17ஆம் 19ஆம் திருத்தங்கள் அவ் அரசியல் நிகழ்வுகள் நின்று நிலை பெறாததால் உதிர்ந்து போயின. 17 உதிர்ந்தது 18இல். 19இல் அது மீள வந்தது. தற்போது மீண்டும் உதிர்ந்து போயுள்ளது. ஜே ஆர் மீண்டும் மீண்டும் மீளுயிர்ப்பு பெறுகிறார்.

17ஆம் திருத்தத்தையும் 19ஆம் திருத்தத்தையும் கொண்டு வந்தவர்கள் சனநாயக விரும்பிகள் என்றும் இல்லை. ஜே வி பியின் ஆதரவு தேவைப்பட்டதால் சந்திரிக்கா விருப்பமில்லாமல் 17ஆம் திருத்தத்தை நிறைவேற்றினார்.

அதன் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சபையை பின்னர் தானே முடக்கினார். 19ஆவது திருத்தத்தை கொண்டு வந்த ரணில் பிரதமருக்கு கூடுதல் அதிகாரங்களை விரும்பியதும் சுயநல அரசியலே. 2000 ஆம் ஆண்டு நகல் அரசியலமைப்பு நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழிக்கப் போவதால் அதனை எதிர்த்தவர்கள் தான் ரணிலும் கரு ஜெயசூர்யாவும். பாராளுமன்றில் அதனை எரித்து மகிழ்ந்தனர் ஐ. தே க. அதிகார குவிமைய அரசியலமைப்பு வாதம் ராஜபக்ஸக்களோடு தொடங்கவும் இல்லை. முடியவும் மாட்டாது”- என முன்னாள் யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குருபரன் குமாரவடிவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.