பேராபத்தில் சிறிலங்கா,ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வந்த அவலம்!

292

தமிழில் ஒரு பழமொழி இருக்கு. ஊசி போற இடம் தெரியுமாம். உலக்கை போற இடம் தெரியாதாம் எண்டு. இலங்கை அரசாங்கம் உண்மையில் அறிவில்லாமல் நடக்கிறதா அல்லது அறிவில்லாத மாதிரி நடிக்கிறதா என்று தெரியவில்லை.

இலங்கையின் முப்படை ஆயுதப்படைகளில் தற்போது செயற்பாட்டில் உள்ள படைகளின் எண்ணிக்கை 346,000 மனித வளங்கள். மேலும், ஒதுக்கம் அல்லது ஏற்பாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 90,000 பேர்கள் ஆவார்கள்.

கடந்த 2019 ஆம் வருடம் இலங்கையில் பாதீட்டில் முப்படைகள் மற்றும் பாதுகாப்பு செலவுகள் என்று ஒதுக்கப்பட்ட தொகையானது ஏறத்தாழ 1.66 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது இலங்கையின் ரூபாய் பெறுமதியில் ஏறத்தாழ 307 பில்லியன் ரூபாய்களாகும்.

ஏறத்தாழ அன்றாடம் குறைந்த பட்சம் 600 ரூபா நாளாந்த வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாத 11.3% மக்கள் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டு இந்த நாட்டில் வாழ்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டின் அண்ணளவான “நுகர்வோர் விலை சுட்டிகளின்” அடிப்படையில், ஏறத்தாழ 4.7% பணவீக்க வீதத்தை கொண்டிருக்கிற இலங்கை, 2019 ஆம் மத்திய ஆண்டு கணக்கறிக்கையின் படி, 21,803,000 (இரண்டு கோடியே பதினெட்டு இலட்சத்து மூவாயிரம்) எண்ணிக்கையான சனத்தொகையை கொண்டுள்ளதுடன்,

8,647,906 (எண்பத்தாறு லட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து ஆறு)

உழைக்கும் மனித வளத்தையும் கொண்டுள்ளது. இது 2017 ஆம் ஆண்டின் தரவுகளுடன் ஒப்பிடுகையில் மொத்த சனத்தொகையில் 51.8% ஆன தொழில் வாய்ப்பு வீதத்தையே கொண்டுள்ளது.

இலங்கையின் பிரதான கைத்தொழில் துறைகளாக, ஆடைக்கைத்தொழில் மற்றும் துணிகள், சுற்றுலாத்துறை, தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், வங்கி, கப்பல் போக்குவரத்து, கட்டிட, நிர்மாண கட்டுமானதுறை, பெட்ரோலிய சுத்திகரிப்பு, தேயிலை, ரப்பர், தேங்காய், புகையிலை மற்றும் பிற விவசாய பொருட்களின் உற்பத்தி என்பனவாகும்.

2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட (UNDP) அறிக்கைகளின் படி, மனித அபிவிருத்தி சுட்டியானது உச்சமாக 0.780 அடைந்து 71 ஆவது இடத்திலும், மத்திமமாக 0.686 அடைந்து 54 ஆவது இடத்தையும் அடைந்த இலங்கையானது, 2020 ஆம் ஆண்டின் அண்ணளவாக்க தரவுகளின் படி, 6.3% வேலையின்மையை, கடந்த 2019 ஆம் ஆண்டின் தரவுகளோடு ஒப்பிடுகையில் 4.9% ஆக இருந்த நிலையில் ஏறத்தாழ ஒரு வருட காலத்தில், 1.7% ஐ எட்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருமானமாக பெறப்பட்ட 16.4 பில்லியன் அமெரிக்க டாலர்களில், பிரதான ஏற்றுமதி உற்பத்திகளாக துணிகள் மற்றும் ஆடைகள், தேயிலை மற்றும் மசாலா பொருட்கள், மின் உபகரண பொருட்கள், ரப்பர் உற்பத்திகள், மீன் மற்றும் பெறுமதியான கற்கள் என்பன அடங்குவதோடு,

இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) 28.6%, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் (USA) 24.9%, இந்தியா (India) 6.7%, சீனா (China) 3.7% மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் (UAE) 2.6% என்பன பெரும் பங்களிப்புகளை செலுத்துகின்றன.

2017 ஆம் ஆண்டில் இறக்குமதி செலவினமாக அண்ணளவாக கணிக்கப்பட்ட 20.98 பில்லியன் அமெரிக்க டாலர்களில், பிரதான இறக்குமதி பொருட்களாக பெட்ரோலியம், ஜவுளி மற்றும் துணி, இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள், கட்டுமான பொருட்கள், கனிம பொருட்கள், உணவுப்பொருட்கள் என்பன அடங்குவதோடு,

இலங்கையின் இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியா (India) 21.1%, சீனா (China) 19.7%, ஐரோப்பிய ஒன்றியம் (EU) 8%, சிங்கப்பூர் (Singapore) 6.1% மற்றும் Japan 4.9% என்பன பெரும் பங்களிப்புகளை செலுத்துகின்றன.

2017 ஆம் ஆண்டின் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI – Foreign direct investment) 1.63 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததுடன், வெளிநாட்டு வர்த்தக நடைமுறை கணக்கானது (Current Account) 2.31 பில்லியன் அமெரிக்க டாலர்களை பொறுப்பாக கொண்டிருந்ததுடன்,

மொத்த வெளியக கடனானது 51.72 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் கொண்டிருந்தது. இந்த வெளியக கடனானது 2017 ஆம் ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தியின் (GDP) 79.1% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக நாணய நிதியம் (IMF – International Monetary Fund) வெளியிட்ட 2020 ஆம் ஆண்டின் அண்ணளவாக்க தரவுகளின் படி, மொத்த தேசிய உற்பத்தியில் இலங்கையானது உலகில் 57 ஆவது இடத்தையும்,

உலக வங்கியின் (World Bank) 2019 ஆம் ஆண்டின் தர வரிசைப்படி, 55 ஆவது இடத்திலும், நடுவண் ஒற்று முகமை (CIA – Central Intelligence Agency) வெளியிட்ட உலகத் தகவல் புத்தகம் (The World Factbook) 1993 முதல் 2017 வரையான அறிக்கையின் படி, 59 ஆவது இடத்திலும் இருக்கிறது.

கடந்த வருடங்களில், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியானது (GDP), 2018 ஆண்டில் 3.3% வளர்ச்சியையும், 2019 ஆண்டிறுதியில் 2.3% வளர்ச்சியையும், 2020 ஆம் ஆண்டில் 3.2% வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது என உலக வங்கி (World Bank) கடந்த ஆனி, 2020 வெளியிட்ட “உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்” என்ற அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் நிதி பற்றாக்குறைகளுக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு என்று குறை கூறி வரும் நடப்பு ராஜபக்சேக்களின் அரசாங்கம்,

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்பிருந்த தம்முடைய முன்னாள் தான்தோன்றித் தனமான அரசாங்கத்தின் முடிவுகளும் தீர்மானங்களும் தான காரணம் என்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை.

“மகிந்த யுகம்” என அழைக்கப்பட்ட அந்த தான்தோன்றித்தனமான ஆட்சிக்கு காலத்தில், செய்யப்பட்ட பல தவறான அபிவிருத்தி திட்டங்களும், தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும், உள்நாட்டு சிறு முயற்சியாளர்களை பாதிக்கும் வேலைத்திட்டங்கள் என்று பட்டியலிடப் போனால் பல நாட்கள் கடக்கும் காரணிகள் உண்டு.

அவைகளில் சில உதாரணங்கள்: மத்தளை விமான நிலையம், அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச துறைமுகம், மிகையாகவும் தேவையற்ற விதத்திலும் பல ஏக்கர் கணக்கான நிலத்தில் அமைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகள், இராணுவத்தினரை வடக்கு கிழங்குகளில் விவசாயத்தில் ஈடுபடுத்தி உள்ளூர் தமிழர்களின் விவசாய மற்றும் மீன்படி வளங்களின் வாழ்வாதாரங்களை இல்லாதொழித்தமை, வெள்ளை வான் மற்றும் கிரீஸ் பேய் பயங்கள், வளர்ந்து வரும் வர்த்தகர்களை கடத்தி கப்பம் பெறும் ஒட்டுக் குழுக்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் அரசின் செயற்பாடுகள் போன்றன.

இன்று காலத்தின் தேவை கருதி, மறுபடியும் கடந்த “மகிந்த யுகத்தை” விட மோசமான “கோட்டா யுகம்” ஒன்று ஆரம்பிக்கவிருப்பதை உணர்ந்து (கடந்த மகிந்த யுகத்தில் பலமான எதிர்க்கட்சி மற்றும் குறைந்த பட்சம் அறிவார்ந்த சமூகத்தை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் ஒன்று அமைந்திருந்தது. ஆனால் இன்று முழு பூச்சியம்) இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.

“நீ எதை விதைப்பாயோ அதையே அறுப்பாய்”

“தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்”

“வாழ்க்கை ஒரு பூமராங்; நீ விட்டெறிவது உன்னிடத்தில் திரும்பும்”

“கருமவினை என்பது நீ செய்யும் நல்ல செயலோ அல்லது தீய செயலோ உன்னிடத்தில் பல மடங்காக திரும்புவதற்கு காலம் பார்த்து காத்து கிடக்கும்”

#உள்ளது #உள்ளபடி

Jerushan A