அமெரிக்கா டொலருக்கு எதிரான தெற்காசியா நாடுகளின் நாணயங்களின் பெறுமதி வெளியிடப்பட்டு இருக்கிறது அந்த வகையில்,
- இந்தியா : 74.96
- பங்களாதேஷ் : 84.95
- மாலைதீவு :15.41
- பூட்டான் : 75.80
- நேபாளம் : 121.95
- பாகிஸ்தான் : 166.00
- இலங்கை : 200.01
தெற்காசியாவில் மிக மோசமாக 46 % வீதமான வீழ்ச்சியை சந்தித்து இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்கா டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கையின் ரூபா 200 என்கிற மோசமான பதிவை செய்து இருக்கிறது.
2018 இறுதியில் நடந்தேறிய அரசியல் சதி முயற்சிகள் , ஈஸ்டர் குண்டுவெடிப்புகள், 2020 இன் ஆரம்பத்தில் பொதுத்தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்படாத வரிக்குறைப்பு நடவடிக்கைகள் , கொரோனா, கொரோனோவிற்கு எதிரான விவேகமற்ற இராணுவ பாணியிலான நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக சீரழித்து விட்டன
ராஜபக்சே நிருவாகம் கடந்த மாதம் மட்டும் 170 மில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டு இருக்கிறார்கள் . இந்த அச்சிடப்பட்ட பணம் மூலம் திறைசேரி முறிகளில் கடன் பெற்று இருக்கிறார்கள் .இலங்கை நாணயம் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைவதால் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச ரீதியான பொதுபடுக்கடன் அதிகரித்து வருகிறது .பெருமளவான இலங்கை கடன்கள் வெளிநாட்டு நாணய பெறுமதியில் பெறப்படுவதால் பொதுபடுகடனின் பெறுமதி அதிகரிப்பை அரசாங்கத்தால் தடுக்க முடியாது . இலங்கை அரசாங்கம் அண்மைய காலங்களில் பெற்று கொண்ட கடன்களை மீள செலுத்துவதில் தடுமாறி வருகிறது . இதனால் சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் மிக மோசமாக மதிப்பீடு செய்து இருக்கின்றன
மறுபுறம் கொரோனோவின் தாக்கத்தால் இலங்கையின் ஏற்றுமதிகள் 50 % வீழ்ச்சி அடையும் என எதிர்வு பார்க்கிறார்கள் . ஆடை கைத்தொழில் , சுற்றுல்லா தொழில் என்பன முழுமையாக முடக்கப்பட்டு இருக்கின்றன. இலங்கையின் வர்த்தகத்தை 80 % தாங்கி நிற்கும் SME நிறுவனங்கள் முழுமையாக செயலிழந்து இருக்கின்றன மறுபுறம் சுய தொழில்வாய்ப்பை நம்பி இருக்கும் ஏறத்தாழ 47 லட்சம் பேர் தொழிலை இழந்து இருக்கிறார்கள். இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளுவதற்கான எந்தவொரு Model லும் இதுவரை வெளியிடப்படவில்லை .
கொரோனா ஏற்படுத்தி வரும் பொருளாதார விளைவுகளில் இருந்து மிக விரைவாக பொருளாதார ரீதியாக மீள கூடிய நாடுகளாக 5 நாடுகளை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் .இதில் அமெரிக்கா, டென்மார்க் , நியூசிலாந்து , ருவாண்டா , சிங்கப்பூர் ஆகியன அடங்கி இருக்கின்றன . இதுமட்டுமல்லாது கொரோனா பரம்பலை மிக நேர்த்தியாக கையாளும் நாடுகளான தென் கொரியா , தாய்வான் , ஹாங் கொங் , அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் பொருளாதார பின் விளைவுகளை திட்டமிட்டு கொரோனோவை எதிர்கொள்ளும் பிரித்தானியா , பிரான்ஸ் ஜெர்மனி போன்ற ஐரோப்பியா நாடுகளும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அல்லது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதார ரீதியாக மீண்டு வருவார்கள் என்கிறார்கள் பொருளியலாளர்கள் .
ஆனால் இலங்கையில் அரசியல் ரீதியாக சிந்தித்து பேரிடர் காலத்திலும் ஹிரு தெரன போன்ற ஊடகங்களை முன் வைத்து பொய்களை பரப்பி வரும் அரசியல் தலைமைத்துவங்கள் மேற்கொள்ளும் மோசமான அரசியல் தீர்மானங்களுக்கு பொதுமக்கள் தான் விலை கொடுத்து வருகிறார்கள்
72 வருட கால சுதந்திர இலங்கையின் சாபம்
– Shalini