
ஆயுதத்தை ஏற்று கொள்பவன் என்றால் நான் இப்போது வாள்வெட்டு குழுவில் சேரவேண்டும் என்கிற தோரணையில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளே குருட்டுத்தனமாக பேசுகிற காலத்தில் இருக்கிறோம்
உண்மையில் அரசியல் வன்முறையில் இருபரிமாணங்கள் உள்ளன.
முதலாவது – ஒடுக்குமுறையாளரின் வன்முறை.
இரண்டாவது – ஒடுக்கப்படுவோரின் வன்முறை.
ஒடுக்குமுறையாளர் எப்பொழுதுமே ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்; அரச அதிகாரம் உடையவர்கள்;; ஆயுதப் படைகளை வைத்திருப்பவர்கள்.
ஒடுக்கப்படுவோர் எப்பொழுதுமே ஆளப்படும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் சிறுபான்மைத் தேசிய இனத்தோராக, சுரண்டப்படும் மக்கள் சமூகமாக, ஏழைகளாக, அடிமைகளாக இருப்பார்கள்.
முதற்தர வன்முறையை அரச வன்முறை எனலாம்.
இரண்டாம்தர வன்முறையை அரச வன்முறைக்கு எதிரான வன்முறை எனலாம்.
அரச வன்முறையானது, ஒடுக்கு முறையாளரின் அடக்கு முறையான வன்முறை என்பதால் அது அநீதியானது. ஒடுக்கு முறைக்கு எதிரான ஒடுக்கப்படுவோரின் வன்முறை நீதியானது. ஏனெனில் அது அநீதிக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகிறது. இவ்விதமான வேறுபாட்டில்தான் ஒடுக்கப்படும் மக்களது வன்முறை வடிவிலான உரிமைப்போராட்டங்கள் நியாயத்தன்மை பெறுகின்றன.
வன்முறை வடிவில் உருவகம் பெறும் அரசியல் உரிமைப் போராட்டங்கள் அரச வன் முறையின் எதிர் வினையாகவே எழுகின்றன. உலக விடுதலைப் போராட்டங்களின் மூலத்தை ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மை புரியும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று மூலமும் அது தான். விடுதலைப் புலிகள் இயக்கம் உதயமாவதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே இலங்கைத் தீவில் அரச ஒடுக்குமுறை தலை தூக்கியது. இனவாதத் தீயாக மூண்ட இந்த அரச ஒடுக்குமுறை, படிப்படியாக வளர்ச்சிகண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை வடிவம் எடுத்தது.
சிங்கள அரச வன்முறைக்கு எதிராகத் தமிழர்கள் நிகழ்த்திய அகிம்சை வழியிலான அரசியற் போராட்டங்கள் அனைத்தும் அரச வன்முறையால் அடக்கியொடுக்கப்பட்டன. அமைதி வழிப் போராட்டங்கள் அர்த்தமற்றுப் போய்விட்ட அதே வேளை, அரச அடக்கு முறை தீவிரமடைந்து, இனக்கொலைப் பரிமாணம் பெற்றதால், தமிழ் மக்கள் அரச வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இன்னொருவகையிற் சொல்வதானால் பேரழிவை எதிர்கொண்ட தமிழினம், தனது இருப்பிற்காக, தனது பாதுகாப்பிற்காக, ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த வரலாற்றுப் புறநிலையில்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம்பெற்று அரச வன்முறைக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தது.
எமது போராட்டம் ஒரு தீர்க்கமான, நியாயபூர்வமான அரசியற்குறிக்கோளைக் கொண்டது. ஐ.நா.சாசனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் எமது போராட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.
நாம் பயங்கரவாதிகள் அல்லர். மதவாத, இனவாத வெறியால் உந்தப்பட்டுக் குருட்டுத்தனமான வன்முறையில் ஈடுபட்ட மனநோயாளர்களும் அல்லர்
குறிப்பாக தீவிரவாத வெறியில் எழும் குருட்டுத்தனமான வன்முறைக்கும்/ பயங்கரவாதத்திற்கும், எங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரப்போராட்டத்திற்கும் மத்தியிலதெளிவான வேறுபாடுகள் இருக்கிறது
மேற்குறிப்பிட்ட தமிழர்கள் ஆயுதம் ஏந்திய சூழ்நிலையின் அறத்தை பேச வேண்டிய பொறுப்பு எங்கள் அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறதல்லவா ?
தமிழ் மக்களின் 70 ஆண்டுகால பிரச்சனைகளை பேசும் போது தமிழ் மக்கள் ஆயுத வழிக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட உண்மையை சொல்ல வேண்டும் . தமிழ் மக்கள் விரும்பி ஆயுதம் ஏந்தவில்லை என்பதை பதிவு செய்ய வேண்டும் . கடந்த 70 ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றை நேர்மையாக பதிவு செய்ய வேண்டும்
இதனை சொல்லுவதால் மீண்டும் நாங்கள் ஆயுதம் தாங்கி போராட வேண்டும் என்று சொல்லவில்லை . தமிழ் தேசிய அரசியல் தலைவர்களை புலிக் கொடியோடு பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும் என்று சொல்லவில்லை .
ஆனால் தங்களை அகிம்சைவாதிகளாக நிரூபிக்க விடுதலை போராட்டத்தின் நியாயத்தை மறுத்து தமிழீழ விடுதலை போராட்டத்தை வன்முறையாக சித்தரித்து எங்களால் எதையும் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
இலங்கை தீவில் 70 ஆண்டுகாலமாக தமிழ் பேசும் மக்கள் நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகிறார்கள் என்பதையும் அந்த நெருக்கடியின் விளைவு தான் விடுதலை போராட்டம் என்பதை பதிவு செய்யாமல் தமிழ் மக்களுக்கு இந்த தீவில் நியாயம் கிடைக்க போவதில்லை
நன்றி இனமொன்றின் குரல்