மே 05, 1976; தமிழீழ சரித்திரத்தில் ஒரு பொன்னான நாள். ஈழத் தமிழினம் தலைநிமிர்ந்து தன்மானத்துடன் வாழ, ஒரு தேசிய விடுதலை இயக்கம் உதித்த நாள். அதுதான் தழிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிறந்த நாள்.
1971 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தனது 17 ஆவது வயதில் – தமிழினத்தின் சுதந்திரத்திற்காக தலைவர் பிரபாகரன் போராட்டக் களத்தில் இறங்கியிருந்தார். ஆரம்பத்தில் “தமிழ் மாணவர் பேரவை” என்ற அமைப்பில் இணைந்து சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தீவிர அரசியலில் ஈடுபட்டார். அந்தக்காலத்தில் அடுத்தடுத்து தோல்வியில் முடிந்த மாணவர் பேரவையின் ஆயுதச்செயற்பாடு, அந்த அமைப்பினுடைய தலைமையின் தயக்கமான நடவடிக்கைகள் மற்றும் குறைபாடுகள் – இவற்றுக்கான காரணிகள் என்பவற்றையெல்லாம் பட்டறிவின் மூலம் கண்டுகொண்ட தலைவர் பிரபாகரன் ஒரு இறுக்கமான இராணுவ அமைப்பைப்பற்றித் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார்.
அதன் விளைவாக 1972 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் “புதிய தமிழ் புலிகள்” என்ற அமைப்பை தோற்றுவித்தார். இது குழு நிலையில் இயங்கியபடி சில ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், உறுதியான கட்டுப்பாடுகளோ தியாக சிந்தனைகளோ இல்லாது இருந்தது; அத்துடன் இதன் அங்கத்தவர்களில் பலர் ஒழுக்கவீனமாகவும் செயற்பட முனைந்தனர். இவ்வமைப்பை சீர்திருத்தி, ஒரு முழுமை பெற்ற மக்களால் மதிக்கப்படகூடிய விடுதலைப் போராட்ட அமைப்பாக மாற்றத்தலைவர் முயன்றார்.
உறுதியும், அர்ப்பண உணர்வும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்குக் கீழ்படியக்கூடிய ஒழுக்கசீலர்களையும் வடிகட்டித்தேர்ந்தெடுத்து, அவர்களை வைத்து முழுமைபெற்ற ஒரு தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பைக் கட்டியெழுப்பத் தலைவர் முடிவெடுத்தார்; அதற்கு முன்னர் வெற்றிகரமான ஒரு இராணுவ நடவடிக்கையைச் செய்ய விரும்பினார். அதற்கொரு காரணம் இருந்தது.
அதாவது “மாணவர் பேரவையின்” ஆயுதச் செயற்பாடுகள் படுதோல்வியடைந்ததால் ஆயுதப்போராட்டம் தொடர்பாக தமிழ் இளைஞர்களின் மத்தியில் ஓர் அவநம்பிக்கை குடிகொண்டிருந்த காலம் அது. எனவே, ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலை பெறலாம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்கிய பின்னர் அமைப்பை புனரமைப்பதே சிறந்தது என்று தலைவர் எண்ணினார். ஆனாலும் இத்தகையதொரு தாக்குதலுக்கு தேவையான முன்தயாரிப்புகளில் ஈடுபடவும், போராளிகளின் அன்றாட தேவைகளை நிறைவேற்றவும் தேவையான பணம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் போராட்ட செயற்பாடுகளுக்கு தேவையான பணத்தை, அரச நிறுவனங்களிலிருந்து ஆயுத முனையில் எடுப்பதுதான் வழமையாக இருந்தது. ஆனால் தலைவர் இதை விரும்பவில்லை. ஏனெனில், அக்காலத்தில் குழுநிலையில் தனித்தும் பல இளைஞர்கள், எதுவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி, போரட்டத் தேவைக்கென கூறிக்கொண்டு பரவலாக கொள்ளைகளில் ஈடுபட்டனர். இது மக்களுக்கு வெறுப்பையும் சலிப்பையும் தந்தது. இதனால் உண்மையான போராட்ட சக்திகள் மீதும் மக்கள் சந்தேகம் கொள்ளத்தொடங்கினர்.
எனவேதான், முதலில் வெற்றிகரமாக ஒரு இராணுவ நடவடிக்கையைச் செய்து எம்மை இனங்காட்டி, அதே சமயம் மக்களின் அபிமானத்தையும் பெற்றுக்கொண்டு, போராட்டச் செயற்பாடுகளுக்குத் தேவையான பணத்தை ஒரு அரச வங்கியிலிருந்து எடுப்பது என்று தலைவர் முடிவெடுத்தார். அதுவரைக்கும் தனது சொந்தப்பணத்திலும், தனிப்பட்ட சிலரிடம் இருந்து கடனாக பெற்ற பணத்திலும் சகபோராளிகள் சிலரது தனிப்பட்ட பணத்திலும் மிகவும் சிக்கனமாகவும் தியாக சிந்தனையுடனும் இயக்கப் போராளிகளை வழிநடத்தினார்.
1975ஆம் ஆண்டு யூலை 27 ஆம் திகதி துரையப்பா மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. துரோகி ஒழிந்தான் என மக்கள் மகிழ்ந்தனர் அத்துடன் இந்தத்தாக்குதலில் காட்டப்பட்ட துணிவும், இராணுவத் தேர்ச்சியும், எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றியும் தமிழ் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தன. மக்கள் எல்லாருமே இந்தத் தாக்குதல் பற்றியும் அதைச் செய்த போராளிகள் பற்றியும்; வியப்புடனும் தன்னம்பிக்கையுடனும் பேசிக்கொள்ள தொடங்கினர். இந்த நிலையில், ஏற்கனவே தீர்மானித்தது போல, பலவந்தமாகப் பணத்தைப் பெற்றுப் போராட்ட நடவடிக்கைகளைத் தொடரத் தலைவர் தீர்மானித்தார். தலைவர் தலைமையில், புத்தூர் மக்கள் வங்கியில் இருந்து ஆயுத முனையில் பணம் எடுக்கப்பட்டது.
ஆயுத போரட்டத்தின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முனையும் ஒரு தேசிய விடுதலை இயக்கத்திற்குரிய உறுதியான கொள்கைத்திட்டங்கள், கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் தந்திரோபாய நடைமுறைகள் மக்கள் அணி திரட்டும் மார்க்கங்கள் என்பவற்றையெல்லாம் தீர்க்க தரிசனத்துடன் சிந்தித்து வகுத்துக்கொண்ட தலைவர் பிரபாகரன், அப்புதிய புரட்சிகர விடுதலை இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, போராளிகளைக் களத்தில் நேரடியாக வழிநடாத்தி, ஆயுதப்போரட்டத்தை உறுதியுடன் வெற்றிகரமாக முடிவெடுக்கத் தொடங்கினார்.
இவ்விதம் எழுபதுகளின் ஆரம்பத்தில் தெளிவான இலக்கின்றியும், தகுதியான தலைமை இன்றியும் தள்ளாடிய ஆயுதப்போராட்டம், படிப்படியாக வளர்ச்சி கண்டு, 1976 மே 5 ஆம் திகதி, முழுமை பெற்ற ஒரு தேசிய விடுதலை இயக்கமாக பரிணமித்தது.
இந்த விடுதலை இயக்கம் ஆரம்பத்தில் இனத்துரோகிகளின் கொட்டங்களை அடக்கி, தமிழீழ மக்கள் மத்தியில் ஒரு தலைமறைவு ஆயுதப்போராட்ட அமைப்பிற்கான உறுதியான அடித்தளத்தை இட்டது.
அதன்பின் சிங்களப் பொலிசாரை, பொலிஸ் நிலையங்களை தாக்கி அழித்து, எஞ்சியவற்றை மூடச்செய்து, சிங்கள அரசின் சிவில் நிர்வாகத்தை வடதமிழீழத்தை பெரும் பகுதியில் நடைமுறைப்படுத்த விடாது தடுத்தது. இதனால், சிங்கள அரசின் சட்டதிட்டங்களுக்கு அஞ்சாது மக்கள் போராளிகளுக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கினர் போராட்டத்தில் இணையத்தொடங்கினர். போராட்டச் செயற்பாடுகள் மெது மெதுவாக வளரத்தொடங்கின.
மாணவர் பேரவையின் வெற்றி பெறாத செயற்பாடுகளிலிருந்து பெற்ற பட்டறிவின் பின், தலைவர் பிரபாகரன் தானே தனி இயக்கம் அமைத்து – தானே திட்டமிட்டு – தலைமைதாங்கி நடாத்திய ஒவ்வொரு தாக்குதலின் போதும், களத்திலிறங்குபவர்கள் அனைவருக்கும் போதிய பயிற்சிகளையும் ஆலோசனைகளையும கொடுத்து, தாக்குதலுக்கான ஒத்திகைகளும் பார்த்து வெற்றிபெறலாம் என்ற உறுதியான நிலையை ஏற்படுத்திக்கொண்டே இறங்கினார்.
விடுதலைப்புலிகள் இயக்கம் களத்தில் இறங்கிய முதல் ஏழு ஆண்டுகளில் (1982 வரை) 15 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை வெற்றிகரமாக நடாத்தியது. அவற்றின் போது ஒரு போராளியைத்தானும் இழக்காது, ஆயுதங்களையும் பறிகொடுக்காது, பகைவர் தரப்பில் 13 படையினரையும், மூன்று இனத்துரோகிகளையும் அழித்ததுடன் எதிரியிடமிருந்து 50 ஆயுதங்களையும் கைப்பற்றியது.
ஏழு ஆண்டுகளின் பின்னர்தான் 1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி, தனது முதலாவது போராளியை (லெப். சங்கர்) இயக்கம் இழந்தது. அதே போல், முதல் பத்து ஆண்டுகள் (1985 ஐனவரி 9ஆம் திகதி) வரை, தமது ஆயுதம் எதையும் இயக்கம் எதிரியிடம் இழக்கவில்லை.
அதே வேளை “விடுதலைக்காக உழைக்கின்றோம்” எனக்கூறிக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பின் தொடங்கப்பட்ட குழுக்கள் எல்லாம், விடுதலை என்ற குறிக்கோளைக் கைவிட்டதுமல்லாமல், தமிழினத்திற்கும் விடுதலை என்ற இலட்சியத்துக்கும் துரோகிகளாக மாறிவிட்ட நிலையிலும், பல குழுக்கள் உதிரிகளாக உதிர்ந்து விட்ட நிலையிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் பெரும் விருட்சமாக வளர்ந்து கிளை பரப்பி நிற்கின்றது, அதன் நிழலில் – அதன் பாதுகாப்பில் – தமிழீழ தேசியம் வளர்ந்து பலம் பெற்று வருகின்றது.
இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட புலிகளின் போராட்ட வரலாற்றில் “இன்று” அது இரண்டாவது தலைமுறையைக் கண்டு விட்டது. தலைவர் பிரபாகரன் போரட்டத்தில் குதித்ததற்கு பின் பிறந்தவர்களே இன்று பெருந்தொகையில் இயக்க உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
7500க்கு மேற்பட்ட புலிவீரர்கள் தம் இன்னுயிர்களை ஈந்து, எவராலும் அசைக்கமுடியாத எஃகுக் கோட்டையாக விளங்கும் புலிகள் இயக்கத்தின் அடித்தளம், தலைவர் பிரபாகரன் அவர்களின் தன்னலமற்ற – தெளிவான – உறுதியான செயற்பாடுகளின் மூலமே ஏற்படுத்தப்பட்டது. இப்பேரியக்கத்தின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும், போராட்டத்தின் ஒவ்வொரு படிவளர்ச்சியிலும், தலைவரின் பங்களிப்பே பிரதானமாக இருந்து வருகின்றது. அதனால்தான் தலைவர் மீதும், அவரின் திறமை மீதும், இயக்க உறுப்பினர்கள் அசையாத நம்பிக்கையை, பற்றை வைத்திருக்கின்றனர்.
கட்டுப்பாடும் அர்ப்பண உணர்வும் கொண்ட ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக – தளபதியாக இருந்த பிரபாகரன் இன்று தமிழீழ விடுதலையின் சின்னமாகவும் தமிழீழ தேசிய தலைவனாகவும் உயர்ந்து காணப்படுகின்றார்.
நன்றி – விடுதலைப்புலிகள் குரல்: 66.