மாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்!

88

•உலகம் ஒரு நாடக மேடை அதில் இவர்கள் சிறந்த நடிகர்கள்!

கடந்த ஏழு வருடமாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி இந்தியா முன்னேறாமைக்கு நேருவின் ஆட்சியே காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதுபோல் கடந்த பதினொரு வருடமாக தமிழ் மக்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுமந்திரன் “தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காமைக்கு புலிகளே காரணம்” என்கிறார்.

இது எப்படி இருக்கிறது என்றால் உனக்கு ஏன்டா பிள்ளை இல்லை என்று ஒருவனிடம் கேட்டபோது அவன் “என்ன செய்ய, பக்கத்து வீட்டுக்காரன் சரியில்லையே” என்று சொன்னது போல் இருக்கிறது.

தெரிந்தே துரோகம் செய்பவர்களிடம் ஒருபோதும் நியாயம் கேட்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் செய்த துரோகத்தை நியாயப்படுத்த ஆயிரம் பதில்கள் வைத்திருப்பார்கள்.

ஆம். சுமந்திரன் தன் துரோகத்தை நியாயப்படுத்த வைத்திருக்கும் ஆயிரம் பதில்களில் ஒன்றுதான் இதுவரை தீர்வு கிடைக்காமைக்கு புலிகளே காரணம் என்பது.

ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்றவர், தீர்வு பெற்றுதரவில்லை என்றால் உடனே ராஜினாமா செய்வேன் என்றவர், இப்போது கூறுகிறார் “ முப்பது வருடமாக புலிகள் ஆயுதம் எந்திப் போராடிப் பெற முடியாததை நாம் எப்படி பத்து வருடத்தில் பெற முடியும்?”

தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும் அவற்றை விரைவில் திருத்திக்கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும் என்று தோழர் லெனின் கூறினார்.

சுமந்திரனைப் பொறுத்தவரையில் அவர் தன் தவறுகளை உணரப்போவதுமில்லை. திருந்தப்போவதுமில்லை. எனவே அவரால் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதுமில்லை.

Balan C