மாவீரக்காதலனின் நினைவுகள் சுமந்து…

161

உன் நினைவுத் துளிகளின் பக்கங்களை
மீட்டிப் பார்க்கிறேன்
ஓ…வீரனே உன்னை என் மனதினில்
சுமப்பதனால் எனக்குள் ஒரு பெரும் கர்வமுண்டு

அடைகாக்கும் பறவையைப்போல்
சிதறிடாது உன் நினைவுகளை
தினமும் பூஜித்துக்கொண்டிருக்கிறேன்
ஓட்டிற்குள் ஒளிந்த ஆமையைப்போல்
நினைவுகளைத் தந்து மறைந்து விட்டாய்

ஆயுள் தண்டனைக் கைதியைப்போல்
யாரும் இல்லாத அறையொன்றினுள்
விம்மி அழுத ஞாபகங்கள்
திரைவிலக்கி காட்சியாக வருகிறது

முட்கள் மீது நடந்ததனால்
காயங்கள் ஆறமறுக்கின்றது
கொழுந்துவிட்டெரியும் மனத்தகிப்பை
நிர்மலமாக்கிக்கொள்ள
உன் நினைவுகளின் அடிவேரிற்கு நீரூற்றி
மலர்ச்சாலை ஒன்று அமைக்கிறேன்

கடலலையோடு போராடும் சிப்பிபோல்
உன் வார்த்தைகளின் திரள்களோடு சதாபோராட்டம்
நெஞ்சத்தில் விதைத்த நேசங்கள்
விருட்சமாவதால் மறதியின் திரைச்சீலையை தேடிக்கொண்டிருக்கிறேன்

மரத்தை மறந்து காற்றோடு பறந்து செல்லும் காய்ந்த இலையைப்போல்
மனித வாடையே இல்லாத தேசத்திற்கு போகவே விரும்புகிறேன்

ஆனாலும் இன்னும் சில நாட்கள் நான்
உயிர்வாழ வேண்டும்
ஓராயிரம் பூக்கள் கொண்டு
தினமும் உனக்கு
அர்ச்சனை செய்திடல் வேண்டும்…..

பிரபாஅன்பு