சர்வதேசப் பொறிமுறைக்குள் சிறிலங்காவை சிக்கவைக்க முயற்சி – மஹிந்த கொதிப்பு

392

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு அவர்களுடைய பணியை செய்ய தொடங்கியிருக்கும் சீ.வி.விக்னேஷ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழ்- சிங்கள மக்களிடையில் பிரிவினை உண்டாக்க நினைக்கிறார்கள்.மேற்கண்டவாறு சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆழுங்கட்சி கூட்டத்தில் கடும் சீற்றத்துடன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்போது மேலும் அவர் கூறியதாக கூறப்படுவதாவது,

நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களிலும் செயற்பட்டார்கள். தற்போதும் செயற்படுகின்றார்கள். அவர்களைத் திருத்தவே முடியாது. நல்லாட்சி அரசின் காலத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் இணைந்து சபையில் கலாட்டா பண்ணினார்கள். தற்போது அவர்கள் இருவருக்கும் சபையில் ஓய்வுகொடுத்துவிட்டு அவர்கள் பாணியில் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் செயற்படத் தொடங்கிவிட்டார்கள்.

சுயநிர்ணய உரிமை விடயத்தையும் போர்க்குற்ற விசாரணை விவகாரத்தையும் முன்னிலைப்படுத்தி இவர்கள் உரையாற்றுகின்றார்கள். சர்வதேசப் பொறிமுறைக்குள் எம்மைச் சிக்கவைப்பதுதான் இவர்களின் பிரதான நோக்கம். புலம்பெயர் புலிகள் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இவர்கள் செயற்படுகின்றார்கள். இதற்கு விரைவில் முடிவு காணப்படும்.

எனவே, சபையில் எமது அணி உறுப்பினர்கள் அனைவரும் சபை விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியாக இருக்க வேண்டும். கட்சியின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும். அனைவருக்கும் சபையில் உரையாற்ற படிப்படியாகச் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றார்.

சிங்கள இனவாதிகளின் கூடாரத்தினுள்,தமிழருக்காக ஒலிக்கும் குரல்களை கூட அனுமதிக்க ஜீரணிக்க முடியாத இவர்கள் எப்படி தமிழர்களுக்கு தீர்வு தருவார்கள்? தவிர தமிழர் சார்பாக வெவ்வேறாக பிரிந்து வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றாலும்,நமது எதிரிகள் இவர்களை ஒரே மாதிரியாகதான் பாக்கிறார்கள்.எதிரிகளுக்கு தெரிந்த ஒற்றுமை தன்மை,தமிழர்களுக்கு தெரியாமல் போனதுதான் இத்தனை பின்னடைவுகளுக்கும் காரணம்.மற்றபடி ராஜதந்திரங்கள் மட்டும் வைத்து கொண்டு எதனையும் சாதித்துவிட முடியாது.ஒத்த கருத்துக்களில் ஒற்றுமை தேவை